மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

உள்ளாட்சித் தேர்தல் நிலவரம்: தொய்வு ஏன்?

உள்ளாட்சித் தேர்தல் நிலவரம்: தொய்வு ஏன்?

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை மற்றும் மகாளய அமாவாசை காரணமாகக் காலை வாக்குப்பதிவில் தொய்வு ஏற்பட்டதாகத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.

காலை முதல் மக்கள் வந்து தங்களது வாக்கினைச் செலுத்தி விட்டுச் சென்றாலும் ஒரு சில இடங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டில் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளரின் பெயர் லட்சுமி என்பதற்குப் பதிலாகத் தனலட்சுமி என குறிப்பிடப்பட்டிருந்தால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

வாக்குச்சீட்டில் உள்ள தவறான பெயர் மை கொண்டு அழிக்கப்படும் என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தாலும், வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும் என்று வேட்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குத் தேர்தல் நடைபெறவில்லை.

அதுபோன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில், சிப்காட் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வெளியே அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குச்சாவடிக்கு வெளியே திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.

நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி ஊராட்சி ஒன்றியம் மாதுடையார்குளம் கிராமத்தில் திறக்கப்பட்ட ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபோன்று ஒரு சில இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு, நிறுத்தம், மற்றும் வாக்குவாதம் என பல பிரச்சினைகளுக்கு இடையே வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “காலை 9 மணி வரை 7.72% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 129 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. காவலர்கள், ஊர்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என 39,408 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

மேலும் அவர், வாக்குச்சாவடிக்கு அருகே வாக்குச் சேகரித்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். மகாளய அமாவாசை, மழை காரணமாகக் காலை நிலவரப்படி வாக்குப்பதிவில் தொய்வு ஏற்பட்டுள்ளது” என்றார்.

வாக்குச் சீட்டில் தவறான பெயர் இடம்பெற்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான வாக்குச் சீட்டில் பெயர் இருக்காது. இது தமிழ்நாடு பஞ்சாயத்துத் தேர்தல் விதிகள் 1995ன் படி இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளது என்று கூறினார்.

இதுவரை எந்தவித வன்முறை தொடர்பான புகாரும் எங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்த அவர், ராணிப்பேட்டையில் நடந்த வாக்குவாத நிகழ்வுகளை டிவியில் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். இதுவரை தேர்தல் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. மழை காரணமாக உரியப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19.61% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

-பிரியா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

புதன் 6 அக் 2021