மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

அதிகாரிகளை விழி பிதுங்கவைக்கும் பொன்னங்குப்பம் ஊராட்சி!

அதிகாரிகளை விழி பிதுங்கவைக்கும் பொன்னங்குப்பம் ஊராட்சி!

தமிழகத்தில் விடுபட்டுள்ள ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்றுவரும் உள்ளாட்சித் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி மட்டும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் விழி பிதுங்க வைத்துள்ளது. .

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ளது பொன்னங்குப்பம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுத்திப்பட்டு என்ற கிராமமும் அடங்கியுள்ளது. பொன்னங்குப்பம் கிராமத்தில் 1400 வாக்குகளும், சுத்திப்பட்டு கிராமத்தில் 2400 வாக்குகளும் சேர்ந்ததுதான் பொன்னங்குப்பம் ஊராட்சி.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் ஏலம் விட்டுவிட்டார்கள் சுத்திப்பட்டு கிராமத்தினர். ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மங்கை என்பவர் 13 லட்சத்துக்கு ஏலம் எடுத்து ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் போட்டியிடுகிறார். 21வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அலமேலு என்பவர் 20 லட்சத்து ஒன்பது ஆயிரத்துக்கு ஏலம் எடுத்து சுயேச்சையாகத் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார், ஏலம் எடுத்துவிட்டதால் தேர்தல் பெயரளவுக்கே நடைபெறுகிறது.

சும்மா பெயரளவில் அந்த ஊர்க்காரர்கள் செட்டப் செய்து ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குச் செல்வி என்பவரைப் பூட்டு சாவி சின்னத்தில் டம்மியாக நிறுத்தி வைத்துள்ளார்கள். இந்த நிலையில்,

“ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தவேண்டும் அல்லது பொன்னங்குப்பம் கிராமத்தை தனி ஊராட்சியாக பிரிக்கவேண்டும். எங்கள் கிராமம் கடந்த 20 ஆண்டுகாலமாக முன்னேறாமல் உள்ளதால் இந்தத் தேர்தலை புறக்கணிக்கிறோம்” என்கிறார்கள் பொன்னங்குப்பத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாபு சிங் உள்ளிட்ட பெரும்பாலானோர்.

செஞ்சி ஒன்றிய தேர்தல் அதிகாரிகளிடம் பொன்னங்குப்பம் ஊராட்சியை பற்றி விசாரித்தோம்.

“பொன்னங்குப்பம் ஊராட்சியில் அடங்கியதுதான் சுத்திப்பட்டு கிராமம். பொன்னங்குப்பம் வாக்காளர்களைவிட சுத்திப்பட்டு வாக்காளர்கள் இரு மடங்கு அதிகமாக இருப்பார்கள். அதாவது பொன்னங்குப்பம் வாக்காளர்கள் வெற்றியை தீர்மானிக்க முடியாது. சுத்திப்பட்டு கிராம மக்கள் ஊர் கூடி முடிவு செய்துவிட்டால் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தாலும் சரி, ஒன்றிய கவுன்சிலராக இருந்தாலும் சரி அவர்கள்தான் வெற்றியைத் தீர்மானிப்பார்கள்.

அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் தனசேகர் பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகத்திடம், ’பொன்னங்குப்பம் கிராமத்து மக்கள் தேர்தல் புறக்கணிக்கிறார்கள் அதனால் நானும் வாக்கு கேட்கமாட்டேன்’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்,

பாமக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் சும்மா ஃபார்மாலிட்டிக்கு நிற்கிறார், திமுக, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு யாரையும் நிறுத்தவில்லை. சுத்திப்பட்டு கிராமத்து மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மங்கைக்கும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் அலமேலுக்கும் வாக்களிக்க முடிவு செய்து வாக்களித்து வருகிறார்கள்.

பொன்னங்குப்பம் கிராமத்து மக்கள் தேர்தலை புறக்கணித்து வருகிறார்கள். அதனால் அங்குள்ள வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரிகள் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு உறங்கி வருகிறார்கள். இதில் முடிவெடுத்து பொன்னங்குப்பத்தை தனியான ஊராட்சியாக பிரிக்க வேண்டியது அரசின் கையில் இருக்கிறது.அதுவரை இப்படித்தான் இருக்கும்” என்கிறார்கள்.

-வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 6 அக் 2021