மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

எஸ்.ஐ தற்கொலைக்கு அதிமுக மாஜி அமைச்சர் காரணமா?

எஸ்.ஐ தற்கொலைக்கு  அதிமுக மாஜி அமைச்சர் காரணமா?

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்டதற்குப் பின்னணியில் அதிமுக மாஜி பெண் அமைச்சர் ஒருவர் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் 1993இல் தமிழகக் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். இவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த ஏழுமலை மகள் லலிதாவைத் திருமணம் செய்துகொண்டார். முதலில் திமுகவிலிருந்த ஏழுமலை பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி மதிமுகவில் இணைந்து வைகோவுக்கு நெருக்கமாக இருந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் தெரிந்தவர்.

கௌதம் காவல்துறையில் சேர்ந்து பாதிகாலம் விஐபி களுக்கு பி.எஸ்.ஒவாக பணியாற்றியவர். அதிமுக ஆட்சிக்கு வரும்போது ஏதாவது ஒரு அமைச்சருக்குப் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார். அமைச்சர்கள் எம்.சி.சம்பத், தூத்துக்குடி சண்முகநாதன், செங்கோட்டையன் போன்றவர்களுக்குப் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர்.

2016-2021இல் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபிலுக்கும் பி.எஸ்.ஒவாக இருந்துவந்தார்.

இந்நிலையில், சிகிச்சைக்காகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அனில்குமாருக்குப் பாதுகாப்பு அதிகாரியாக டூட்டி போடப்பட்டிருந்தார் கௌதம். நேற்று முன் தினம் (அக்டோபர் 4) இரவு டியூட்டி பார்த்துவிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்புக்கு வந்த கௌதம் நேற்று (அக்டோபர் 5), காலையில் தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு அலறியடித்துக் கொண்டு படுக்கை அறைக்கு ஓடிய அவரது மனைவி லலிதா, கணவன் கௌதம் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்.

சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்ற எஸ்.பி விஜயக்குமார், கௌதம் மனைவி லலிதாவிடம், ஆறுதல் சொல்ல முடியாமல் தற்கொலைக்கான காரணங்களைப் பற்றி விசாரித்தார்.

லலிதாவை ஆறுதல்படுத்தி விசாரணை அதிகாரிகளும் விசாரித்தனர்.

" அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலிடம் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தபோது உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் வேலை போட்டுத் தருகிறேன் என்று நிலோபர் கபில் கூறியுள்ளார். இவரும் (கௌதம்) நல்லது செய்யவேண்டும் என்று உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாங்கி தருவதாகப் பணத்தை வாங்கி முன்னாள் அமைச்சரிடம் லட்சக்கணக்கில் கொடுத்துவிட்டார்.

பணம் கொடுத்தவர்களுக்கு வேலையும் வாங்கி தரவில்லை, பணமும் திருப்பி கொடுக்கவில்லை நிலோபர் கபில். அதிமுக ஆட்சியும் போய்விட்டது. பணம் கொடுத்தவர்கள் கௌதமுக்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கினார்கள். கௌதமும் அவ்வப்போது நிலோபர் கபிலிடம் தொடர்புகொண்டு கேட்டார். பல நாள் அவரை சந்தித்தும் கேட்டார். அவர் என்ன பதில் சொன்னாரோ

தெரியவில்லை இப்படி எங்களைத் தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்” என லலிதா கூறியிருப்பதாக சொல்கிறார்கள் லலிதா உறவினர்கள்.

“பலரிடம் பணம் வாங்கி அமைச்சரிடம் கொடுத்துவிட்டார், அமைச்சர் நிலோபார் கபில் கௌதமனை ஏமாற்றிவிட்டார், பணம் கொடுத்தவர்கள் கௌதமை நெருக்கும்போது நிலோபர் கபிலை தொடர்புகொண்டால் போனை எடுக்கமாட்டார். நேரடியாகக் கேட்டாலும் சரியான பதில் சொல்லமாட்டார். இதனால் மனமுடைந்துதான் தற்கொலை செய்துகொண்டார். கௌதம் தற்கொலைக்குக் காரணம் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்தான்” என்கிறார்கள் அவரது பேட்ஜ்மெட்களான போலீசார்.

கௌதம் செல்போன் அழைப்பு விவரங்கள், வீட்டிலிருந்த துண்டு சீட்டுகள், குறிப்புகள் எழுதிய நோட்டுகள், வாட்ஸ் அப் மெசெஜ்கள், எஸ்.எம்.எஸ் அனைத்தையும் ஆராய்ந்து வருகிறார் எஸ்.பி.விஜயக்குமார். தற்கொலை வழக்கு விசாரணையில் நிலோபர் கபிலையும் விசாரணை அதிகாரிகள் நெருங்குவார்கள் என்கிறார் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சப் இன்ஸ்பெக்டர்.

-வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 6 அக் 2021