மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

உள்ளாட்சியில் காமாட்சியும் தருவோம்: திமுகவுக்கு இணையாக அதிமுக!

உள்ளாட்சியில் காமாட்சியும் தருவோம்:  திமுகவுக்கு இணையாக அதிமுக!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) நடக்கிறது.

இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தக்கூடாது என்று அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி நீதிமன்றம் வரை சென்ற போதும் இரண்டு கட்டங்களாகவே இந்த தேர்தல் நடக்கிறது.

குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே அதுவும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடப்பதால் இதை கிட்டத்தட்ட ஒரு இடைத்தேர்தல் போலவே கருதி திமுகவினரும் அதிமுகவினரும் போட்டி போட்டு பணியாற்றி வருகிறார்கள்.

திமுக தரப்பில் ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டிலிருந்து மூன்று அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக இருந்து கவனித்து வருகிறார்கள். தங்களது அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், தங்களது வளமான துறையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தங்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்ட மாவட்டத்தில் திமுகவையும் கூட்டணிக் கட்சிகளையும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பலமான பட்ஜெட் போட்டு பணியாற்றி இருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள்.

இதை உணர்ந்து கொண்டு அதிமுகவும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் களத்தில் கரன்சியை வீசி இருக்கிறது என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் மற்றும் ஆலோசனை கூட்டத்திற்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்றார் முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நாட்கள் தங்கி அந்த மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்துள்ளாரர் எடப்பாடி.

அப்போது.,.."கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் அதிமுவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவுதான். அதோடு திமுக ஜெயித்து வந்த பிறகு அவர்களது முக்கியமான வாக்குறுதிகளான நகை கடன் தள்ளுபடி, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. நிறைவேற்றப்படாத இந்த 2 வாக்குறுதிகளும் பெரும்பாலும் கிராமங்கள் சம்பந்தப்பட்டவை தான். எனவே திமுகவின் போலி வாக்குறுதிகளை பற்றி மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.

மேலும் இப்போது பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் நீங்கள் வளமாகத்தான் தான் இருக்கிறீர்கள். நாம்தான் எதிர்க்கட்சி ஆகி விட்டோமே என்று செலவு செய்யாமல் இருந்து விடாதீர்கள். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாதிக்குப் பாதி வெற்றி பெற்றால் கூட அது நமக்குப் பெருமைதான். மேலும் கட்சியை இப்போது கைப்பற்றுவேன் அப்போது கைப்பற்றுவேன் என்று பூச்சி காட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் நாம் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். எனவே நாம் இரண்டு பேருக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் செலவு பற்றி யோசிக்காதீர்கள்" என்று அதிமுகவின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களிடம தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவினருக்கு இணையாகவும், அதைவிட கூடவும் குறைச்சலாகவும் வேட்பாளர்களின் வெயிட்டைப் பொறுத்தும் அதிமுகவினர் பணத்தை இறைத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தன் சுற்றுப் பயணத்தை முடித்த பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் ஒன்பது மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு உள்ளாட்சி தேர்தல் நிலவரத்தைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறார்.

எடப்பாடி பயணத்திற்கு பிறகு அதிமுக நிர்வாகிகளுக்கும் அவர்கள் மூலம் வாக்காளர்களுக்கும் சேர வேண்டியது சேர்ந்து விட்டது என்ற தகவலை அறிந்து தான்... “அதிமுகவினரின் முகம் வெற்றிப் புன்னகையோடு இருக்கிறது. நாம் ஊரார் சொத்தை அடித்து உலையில் போடுபவர்கள் அல்ல” என்று தனது பேச்சின்போது அடிக்கடி குறிப்பிட்டார் ஓ. பன்னீர்செல்வம்.

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே,பி, அன்பழகன், கே, சி, கருப்பண்ணன், கே, சி, வீரமணி ஆகியோர் பொறுப்பாளர்களாக இருக்கும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாம் விசாரித்தவரை... திமுகவினர் ஒன்றிய கவுன்சில், மாவட்ட கவுன்சில் தேர்தல்களுக்கு ஓட்டுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக அதிமுகவினர் ஓட்டுக்கு 300 ரூபாயும் (சில இடங்களில் 500) காமாட்சி விளக்கையும் சேர்த்துக் கொடுத்துள்ளார்கள். இந்த காமாட்சி விளக்கின் மீது ஆணையாக இரட்டை இலைக்கு ஓட்டு போடும் படியும் சென்டிமென்டாக மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.

உள்ளாட்சியில் நல்லாட்சி தருவோம், உள்ளாட்சியில் ஊழலற்ற ஆட்சி தருவோம் என்று ஒரு பக்கம் பிரச்சாரம் நடக்க உள்ளாட்சியில் காமாட்சியும் தருவோம், கரன்சியும் தருவோம் என்று சொல்லாமல் செய்து வருகிறார்கள் கழகத்தினர்.

-ஆரா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

புதன் 6 அக் 2021