மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

உள்ளாட்சித் தேர்தல் - இதுவே இறுதி எச்சரிக்கை: சி.வி.சண்முகம்

உள்ளாட்சித் தேர்தல் - இதுவே இறுதி எச்சரிக்கை: சி.வி.சண்முகம்

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தாவிட்டால், மாநிலத் தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (அக்டோபர் 4) விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்கு சேகரித்தார்.

இதை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், “தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும், சுதந்தரமாகவும் நடத்த வேண்டும் என்ற நோக்கில் அதிமுக கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்துக்குச் சில கோரிக்கைகளை மனுவாக அளித்தார்.

இக்கோரிக்கைகளைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் எந்த பதிலும் அளிக்காததால், அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த 30ஆம் தேதி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, தமிழகம் முன்னணி மாநிலம். இங்கு ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் தேர்தலில் எந்தக் குறைபாடும் ஏற்படக் கூடாது. அதனால் எந்தவிதமான குறைகளும் இன்றி தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும். பிரதான எதிர்க்கட்சியும், சில மாதங்களுக்கு முன்புவரை ஆட்சி கட்டிலில் இருந்த அதிமுகவின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. தேர்தலை நியாயமாக சுதந்திரமாக நடத்த அனைத்துப் பகுதிகளிலும் வாக்கு எண்ணி முடிகிற வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கைகள் பதிவு செய்யப்பட வேண்டும். அவை பாதுகாக்கப்பட வேண்டும். வாக்கு பெட்டிகளை வைக்கின்ற ஸ்ட்ராங் அறையை எங்க அமைக்க வேண்டும், எப்படி அமைக்க வேண்டும் என்பது குறித்து பிரதான கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். பதற்றமான வாக்குப்பதிவு மையங்களை தெரிவிக்க வேண்டும். முழுமையான நான்கு கட்ட பாதுகாப்புகளை போட வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதையல்லாம் செய்வோம் என்று தேர்தல் ஆணையமும் உயர் நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்தது.

உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து நான்கு நாட்களாகியும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது அப்பட்டமான உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். உள்ளாட்சித் தேர்தலை, திமுகவின் உட்கட்சி தேர்தல் போன்று நடத்தி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகள் அப்படிதான் இருக்கிறது. எதிரணியில் போட்டி போடுகிறவர்களை அரசியல் கட்சிகளாக ஏற்க மறுக்கிறார்கள்.

மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்திருக்கிறார்கள். அதில், திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வருகின்றன. சில கூட்டங்களில் அமைச்சர்களே கலந்து கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக எங்களுக்கு தகவல் வருகிறது. அதுமட்டுமில்லாமல், இதற்கு உடன்படாத அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “உடனடியாக இந்தத் தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். இது அதிமுகவின் கோரிக்கை.

தேர்தலை நியாயமாக நடத்தவில்லையென்றால், தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அதிகாரி, உதவித் தேர்தல் அலுவலர் என யார் எல்லாம் தவறு செய்கிறார்களோ, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இதுவே இறுதி எச்சரிக்கை” என்று கூறினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 5 அக் 2021