திமுகவின் கரன்சி மழை: கச்சிதமாய் முடிக்கும் வெளியூர் டீம்!

politics

தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவ மழை தொடங்கும் நிலையில் மாவட்டம் தோறும் அதிகாரிகளை நியமித்து முன்னெச்சரிக்கைப் பணிகளைத் தொடங்கிவிட்டது தமிழக அரசு. பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

அதேநேரம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களில் திமுகவின் அமைச்சர்களும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் அறிவிக்கப்படாத கரன்சி மழையை பெய்ய வைத்து வருகின்றனர்.

அக்டோபர் 6 ஆம் தேதி முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நிலையில் அதற்கான பிரச்சாரம் நேற்று (அக்டோபர் 4) மாலையோடு ஓய்ந்தது.

திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் பொறுப்பாக கொடுக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் வெற்றியை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்தவேண்டுமென அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர். ஒருவேளை வெற்றி சதவிகிதம் குறைந்துவிட்டது என்றால் அந்த மாவட்டத்தின் பொறுப்பாளர்களாக இருக்கும் அமைச்சர்களின் துறை மாற்றப்படும் என்றும், பெரிதாக தோல்வி அடைந்தால் அமைச்சர் பதவி கூட பறிபோக வாய்ப்புண்டு என்றும் வாய்மொழி எச்சரிக்கை தலைமையிடம் இருந்து வந்திருப்பதால் திமுக அமைச்சர்கள் தங்களது பொறுப்பு பகுதிகளில் இடைத்தேர்தல் போல கவனிப்பை பலப்படுத்தியிருக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு அமைச்சர் முத்துசாமியும், அமைச்சர் மு.பெ. சாமிநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் எ.வ. வேலு இவர்களை மேற்பார்வையிடுகிறார்.

நம்மிடம் பேசிய திமுகவினர், “ஒன்றிய கவுன்சிலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் ஓரிரு நாட்கள் முன்னால் கொடுக்கப்பட்டது. ஒரு ஒன்றிய கவுன்சிலில் சுமார் 5ஆயிரம் ஓட்டுகள் அல்லது அதற்கு மேலும் இருக்கும். ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் என்று ஐநூறு ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதையும் முத்துசாமியின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த டீம் ஒன்று வந்து உள்ளூர் திமுகவினரை உதவிக்கு வைத்துக் கொண்டு அந்த டீமே கொடுத்து முடித்துள்ளது. ஒவ்வொரு ஒன்றிய கவுன்சிலருக்கும், அந்த ஒன்றிய கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலருக்கும் சேர்த்துதான் இந்த ஐநூறு ரூபாய்.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர்களும் ஒன்றிய கவுன்சிலுக்கு போட்டியிடுகிறார்கள். அவர்களிடம் 25 லட்சம் ரூபாயை கொடுக்க அதிர்ந்துபோய், ‘இதெல்லாம் எங்களுக்கு பழக்கமில்லை’ என்று தயங்கியுள்ளனர். அதனால் அவர்களுக்கும் சேர்த்து ஈரோட்டில் இருந்து வந்த முத்துசாமி டீமே பட்டுவாடாவை கச்சிதமாக செய்து முடித்தது. கூட்டணிக் கட்சி போட்டியிடும் ஒன்றிய கவுன்சிலிலேயே 500 ரூபாய் என்றால் திமுகவினரே நிற்கும் பகுதிகளில் அவர்களும் சேர்த்துப் போட்டுக் கொடுக்கும் பணம் இன்னும் அதிகமாகிறது. இடைத் தேர்தலைப் போல அமைச்சர் முத்துசாமியும், வெள்ளக்கோவில் சாமிநாதனும் பணியாற்றியிருக்கிறார்கள்” என்கிறார்கள்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *