மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

நீதிக்கு புறம்பான சட்டங்கள், நடைமுறைகள்: மரணிக்கும் மக்களாட்சியும், மெளனமாகும் நீதிமன்றமும்!

நீதிக்கு புறம்பான சட்டங்கள், நடைமுறைகள்: மரணிக்கும் மக்களாட்சியும், மெளனமாகும் நீதிமன்றமும்!

ராஜன் குறை

அரசர்கள், பிரபுக்கள், மதகுருமார்கள் ஆட்சி செய்வார்கள்; உழைக்கும் மக்களெல்லாம் அவர்களுக்கு அடிபணிந்து நடப்பார்கள் என்பதாகவே பெரும்பாலான மானுட சமூகங்கள் பண்டைய காலத்தில் உருவாகி வந்தன. அரசர்கள் நல்லவர்களாக இருக்கலாம், எதேச்சதிகாரிகளாக இருக்கலாம். ஆனால் அவர்கள் தெய்வத்தின் பிரதிநிதிகள்.

அதன் பிறகு நவீன கால அரசியல் சிந்தனை என்பது தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் என்ற புதிய உற்பத்தி முறைகள் தோன்றியபோது உருவாகியது. அதில் தெய்வத்தின் பிரதிநிதி அல்ல, மக்களின் பிரதிநிதிகளே ஆட்சி செய்வோர் என்ற கருத்து வலுப்பெற தொடங்கியது. தனிநபர் சொத்துரிமை என்பது முக்கிய கருத்தாக வலுவடைந்தபோது தனிநபர் உரிமைகள், பிரதிநிதித்துவ அரசு என்பது போன்ற சிந்தனைகள் வலுத்து மக்களாட்சிக்கு வழிவகுத்தது. இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் மன்னரோ, அரசியோ வெறும் குறியீடாக மாறினார்கள். அரசியல் அதிகாரம் என்பது மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் பிரதமர் அல்லது அமெரிக்கா போல அதிபர் ஆகியோரிடம் இருக்கும் என்பதாக மாறியது.

இந்த மாற்றத்தைத் தொடர்ந்து அனைத்து மக்களும் சம உரிமைகள் உள்ளவர்கள், யாரும் யாரையும் அடிமைப்படுத்தவோ, சுரண்டவோ கூடாது, தனிமனித சுதந்திரம் என்பது முக்கியமானது என்ற கருத்து வலுப்பெற்றது. அதேசமயம் தனிச் சொத்துரிமை என்பது முதலீட்டாளர்களை, முதலாளிகளை ஆதிக்க சக்திகளாக்குகிறது என்பதால் பொதுவுடைமை என்ற கருத்தும் உருவானது. பொதுவுடைமை என்பது காரியத்தில் அரசுடைமை என்பதால் அரசாங்கத்திடம் அதிகாரம் குவிவது கம்யூனிஸ நாடுகளில் நிகழ்ந்து, அதனால் சர்வாதிகாரம், எதேச்சதிகாரம் தோன்றியது. சமூகப் பிரச்சினைகள் பெருகி பொதுவுடைமை சித்தாந்தம் பலவீனமடைந்தது. இன்றைய நிலையில் பெரும்பாலும் அரசுடைமையும், தனியுடைமையும் இணைந்த அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளைத் தர விரும்பும் அரசுகளே உள்ளன. அதில் தேர்தல்கள் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அரசை உருவாக்கும் சமூகங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன.

இப்படித் தேர்தல் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து தங்களை தாங்களே ஆண்டுகொள்ளும் அமைப்பில் ஒரு முக்கியமான உள்முரண் உள்ளது. அது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட சட்ட வரைவின் அடிப்படையில்தான் அப்படி ஓர் அமைப்பு இயங்க முடியும். எனவே, சட்டமே ஆட்சியின் அடிப்படை. அதேசமயம் மக்கள் தங்கள் தேவைக்கேற்ப சட்டங்களை மாற்றிக் கொள்ளவும் இடமிருக்க வேண்டும். அப்போதுதான் அது மக்களாட்சி. இந்த முரண்பாட்டை நீதிமன்றமா, மக்கள் மன்றமா என்றும் கேட்பார்கள். ஏனெனில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது நீதிமன்றம்தான். நாட்டின் உச்ச நீதிமன்றத்துக்கு நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களையும், ஏற்கனவே உள்ள அரசியல் நிர்ணய சட்டத்துக்கு முரணானது என்று நிறுத்திவைக்கும் அதிகாரம் உள்ளது. அதே சமயம் நாடாளுமன்றம் அந்த அரசியல் நிர்ணய சட்டத்தையே திருத்தி புதிய சட்டத்துக்கு வழிவகை செய்தால் அதை நீதிமன்றம் தடுக்க முடியாது.

ஆனால் நாடாளுமன்றமும் சரி, நீதிமன்றமும் சரி... ஒரு சட்டத்தினை, நடைமுறையினை விவாதிக்க வேண்டும். அந்த விவாதம் பொதுமன்றங்களிலும் நடைபெற வேண்டும். எந்த முடிவு பகுத்தறிவுக்கு ஏற்ப இருக்கிறதோ, அதையே நாடாளுமன்றமும் சரி, நீதிமன்றமும் சரி ஏற்க வேண்டும். பொதுமன்ற விவாதத்தில் மக்கள் கருத்துகளும் கேட்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதை மட்டும் காரணமாகக் கொண்டு சட்டங்களை இயற்றுவது என்பது மக்களாட்சிக்கே எதிரானது. அரசின் ஒரு குறிப்பிட்ட செயல்பாடு பகுத்தறிவின் படி சரியானதா என்பது நாட்டில் விவாதிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் கருத்துகளிலும் நியாயமாக உள்ளது எதுவோ, அதைக் கட்சிகளும், நீதிமன்றங்களும் ஏற்க வேண்டும்.

உதாரணமாக ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடைசட்டத்தை சிவில் சமூக விலங்கு நல ஆர்வலர்கள் வற்புறுத்தலினால் நீதிமன்றம் கொண்டுவந்தது. ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பவர்கள், எங்களுக்கு மாட்டின் மீது இல்லாத அக்கறை மற்றவர்களுக்கு எப்படி வரும் என்றும், பாரம்பரியமான இந்த விளையாட்டைப் புரிந்துகொள்ளாமல் எப்படி மேட்டுக்குடியினர் தடை செய்யலாம் என்றும் போராடினார்கள். அவர்கள் கேட்பதில் ஒரு நியாயம் இருந்தது. விலங்குகள் உயிருக்கும், மனிதர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும் எத்தனையோ பிரச்சினைகள், ரசாயன கலப்புகள், சூழல் மாசு என நாட்டில் நடந்துகொண்டுதான் உள்ளன. ஜல்லிக்கட்டு மட்டும்தான் பிரச்சினையா என்பதும் சரியான கேள்விதான். இறுதியில் நாடாளுமன்றம் விசேஷ சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டை அனுமதித்தது.

மற்றொரு உதாரணம் சபரிமலைக்கு மாதவிடாய் பருவத்தில் உள்ள பெண்கள் செல்லக் கூடாது என்ற வழக்கம் சமூகத்தில் தீட்டு குறித்த கருத்தாக்கத்தை, பெண்களுக்கு எதிரான மனோபாவத்தை வளர்ப்பது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. பொதுச் சொத்தான ஒரு ஆலயம் அனைத்து மக்களும் வழி படக்கூடியதாக இருக்க வேண்டும். மாதவிடாய் பருவத்துப் பெண்களை விலக்கக் கூடாது என்றது. ஆலய நிர்வாகம் இது மரபு என்றது. எத்தனை பழைமையான மரபு, அதற்கு ஆதாரம் என்ன என்று நீதிமன்றம் கேட்டபோது அதற்குச் சரியான சான்றுகளைத் தர முடியவில்லை. அதனால் பொதுவான சமத்துவ நோக்கை வலியுறுத்தி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சனாதன சக்திகள் பெரிய போராட்டத்தில் இறங்கின. பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று வழிமறித்தன. இந்த வழக்கை மறுபரிசீலனை செய்ய புதிய விசாரணைக் குழுவை நீதிமன்றம் நியமித்தது. இப்போதைக்குத் தீர்ப்பு வரும் வாய்ப்பில்லை.

பொதுவாக நீதிமன்றம் சட்டத்தின் தொடர்ச்சியை அல்லது சட்டம் போன்ற மரபார்ந்த நடைமுறைகளின் தொடர்ச்சியை வலியுறுத்தக் கூடியது. மக்களாட்சி என்பது எந்த சட்டத்தையும், நடைமுறையையும் மாற்றும் அதிகாரம் படைத்தது. அதனால் நீதிமன்றத்துக்கும், சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்துக்கும் முரண்கள் அடிக்கடி ஏற்படும். இரண்டுமே எப்போதும் முற்போக்காகவும் இருப்பதில்லை, பிற்போக்காகவும் இருப்பதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பாரதீய ஜனதா ஆட்சியில் அரசின் முடிவுகள் முரட்டுப் பெரும்பான்மைவாதமாக, யார் கருத்தையும் மதிக்காத, நீதிமன்றத்தையும் மதிக்காத எதேச்சதிகாரமாக மாறி வருகிறது. நீதிமன்றம் தலையிடாமல் உள்ளது. காஷ்மீர் மாநில அந்தஸ்து பறிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள் எனப் பல பிரச்சினைக்குரிய அறமற்ற சட்டங்களை பாஜக அரசு அதன் நாடாளுமன்றப் பெரும்பான்மையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு யார் கருத்தையும், மக்கள் போராட்டங்களையும் மதிக்காமல் நிறைவேற்றினாலும் உச்ச நீதிமன்றமும் எதுவும் செய்யாமல் இருக்கிறது அல்லது கண்துடைப்பு அணுகுமுறைகளை மேற்கொள்கிறது. நாம் எல்லா மக்கள் விரோத சட்டங்களையும் விவாதிக்க முடியாது என்பதால் இரண்டே இரண்டு பிரச்சினைகளை மட்டும் விரிவாகப் பார்ப்போம்.

அப்பட்டமான அநீதி: ஆதிக்க ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு

அரசியல் நிர்ணய சட்டத்தில் இட ஒதுக்கீடு என்ற கொள்கை வரையறை செய்யப்பட்டபோது அது சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அதாவது பார்ப்பனீய ஜாதீய கலாச்சாரத்தால் கல்வி கற்க அனுமதிக்கப்படாதவர்கள் பிறருக்கு இணையாக வாய்ப்புகளைப் பெறும் வகையில் அவர்களுக்கென்று கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு செய்ய வழி வகை செய்யப்பட்டது. இது முழுக்கவும் சமூகத்தில் வேரூன்றிய ஜாதி பாகுபாட்டினை அடிப்படையாகக் கொண்டது.

பொருளாதார ரீதியாக ஏழையாக இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவது என்பது அபத்தமானது. ஏனெனில், இன்றைக்கு பணக்காரராக இருப்பவர் தொழிலில் ஏற்படும் நஷ்டத்தால், சூதாடுவதால், ஊதாரித்தனத்தால், சோம்பேறித்தனத்தால் ஏழையாகலாம். உடனே அவருடைய பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? அப்படி வழங்கியவுடன் அவர் திடீரென சில வாய்ப்புகள் காரணமாக பணக்காரர் ஆகிவிட்டால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியுமா? ஜாதி அமைப்பு என்பது பன்னெடுங்காலமாக உருவாக்கப்பட்ட கட்டமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வு என்பதால்தான் சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், கல்வியில் ஒரு சமூகமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு உருவானது.

ஆனால், இந்தச் சட்டத்தின் ஆன்மாவைக் குழிதோண்டிப் புதைத்து சமூக ஆதிக்கத்தில் முன்னேறிய ஜாதிகளில் ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாயை விட குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. இதற்கு வெளிப்படையான காரணம் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் முன்னேறிய ஆதிக்க ஜாதியினர் சதவீதம் 15%+ ஆக இருப்பதால் அவர்கள் வாக்கு வங்கியின் ஆதரவைப் பெறுவதுதான். மற்ற கட்சிகள் எல்லாவற்றுக்கும் அதே நோக்கம் என்பதால் மாயாவதியின் தலித் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி உட்பட எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை; ஒரே ஒரு கட்சியைத் தவிர. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சமூக நீதி கொள்கையையே உயிர் மூச்சாகக் கொண்ட கட்சி மட்டுமே நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துப் பேசியது. நீதிமன்றத்தில் பல வழக்குகள் இந்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்டன. ஆனால், நீதிமன்றம் எந்த வழக்குகளையும் இரண்டாண்டுகளாக விசாரிக்காமலேயே மெத்தனமாக இருக்கிறது.

இதில் என்ன கொடுமை என்றால், இந்தச் சட்டத்தினால் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெறும் ஆதிக்க ஜாதி ஏழைகளின் கல்வித்தகுதி தேர்வின் மதிப்பெண்கள் சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்பினரின் குறைந்தபட்ச மதிப்பெண்களை விட குறைவாக இருக்கிறது. இதனால் ஆதிக்க ஜாதிகளில் ஏழையாக உள்ளவர்கள் கல்வியில் அலட்சியமாக, பொறுப்பின்றி இருந்தால்கூட அவர்களுக்கு உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைத்துவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் ஆதிக்க ஜாதியினர் பொருளாதாரத்தில் நலிந்தாலும் அவர்களது சமூக மூலதனமும் (சமூக மதிப்பு, தொடர்புகள், மனோவியல்), கலாச்சார மூலதனமும் (குடும்பத்தினர் பரம்பரையாக கற்றவர்கள், திறமையாளர்கள்) அவர்களை கல்வியில் சுலபத்தில் தேர்ச்சி பெற உதவும் என்பதுதான். உதாரணமாக பார்ப்பன சமூகத்தை சேர்ந்த ஏழை மாணவர்கள் மிகக் கடினமான போட்டித் தேர்வுகளிலும் முதல் இடத்தை பிடிப்பது என்பது நவீன இந்திய வரலாற்றில் தொடர்ந்து நடப்பதுதான். லட்சக்கணக்கான உதாரணங்களை காண முடியும். இதற்கு காரணம், அவர்களது சமூக, கலாசார மூலதனம்தான். பன்னெடுங்காலமாக கல்வியை ஏகபோக உரிமையாகக் கொண்ட சமூகம் என்பதால் அதன் உறுப்பினர்களுக்கு அமையும் பயிற்சியும், சூழலும்தான். அது பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குக் கிடையாது. அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் அமையாது.

அனைத்து வகையிலும் அரசியல் நிர்ணய சட்டத்தின் தரிசனத்துக்கு முரண்பட்ட, அதைச் சீரழிக்கும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத இந்தச் சட்டத்தை வெறும் நாடாளுமன்ற பெரும்பான்மை நிறைவேற்றியதும், அதை நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமல் வேண்டுமென்றே காலம் கடத்துவதும் மக்களாட்சியின், சட்டத்தின் ஆழ்ச்சியின் வீழ்ச்சி என்றால் மிகையாகாது.

எதேச்சதிகார செயல்பாடுகளின் உச்சம்: பி.எம்.கேர்ஸ் நிதி

கொரோனா கால நெருக்கடியைச் சமாளிக்க பிரதம மந்திரி PRIME MINISTER’S CITIZEN ASSISTANCE AND RELIEF IN EMERGENCY SITUATIONS FUND சுருக்கமாக PM CARES FUND என்ற ஒரு நிதியை உருவாக்கினார். ஆனால், இந்த நிதியை அரசு நிர்வகிக்காது; தனியார் அறக்கட்டளை நிர்வகிக்கும் என்று கூறினார். அந்தத் தனியார் யார் என்றால் பிரதம மந்திரி, மத்திய பாதுகாப்பு அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய நிதி அமைச்சர் ஆகியோர்; அதாவது இந்தப் பதவிகளை வகிப்பவர்கள். இவர்களெல்லாம் அரசு பொறுப்பில் இருப்பவர்கள்தானே என்றால், அவர்கள் தனிப்பட்ட முறையில்தான் இந்த நிதியை கையாள்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அரசு தணிக்கைத் துறை Comptroller and Auditor General of Indian (CAG) இந்த அறக்கட்டளையின் கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்யாது; தனியார் தணிக்கை நிறுவனம்தான் அதை செய்யும் என்று அறிவித்துவிட்டார்கள். இது அரசு நிறுவனம் அல்ல என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த நிதி எப்படிச் செலவழிக்கப்படுகிறது என்று கேட்க முடியாது என்று கூறிவிட்டார்கள். ஆனால், இந்த நிதியைச் செலுத்துவதற்கான வலைதளம் அரசு அசோக சின்னத்துடன், தேசியக்கொடியுடன்தான் இருக்கிறது. நிதிக்கு வருமான வரி விலக்கு, நன்கொடை அளிப்பவர்களுக்கு வருமான வரி விலக்கு எல்லாம் உண்டு. சென்ற ஆண்டு வரை மூவாயிரம் கோடி பெறப்பட்டதாகவும், செலவழிக்கப்பட்டதாகவும் தணிக்கை குறிப்பு கூறுகிறது. யாரும் எதையும் சரிபார்க்க முடியாது.

பிரதமரும், மத்திய அமைச்சரவை சகாக்களும் பதவியில் இருந்து கொண்டே, அந்தப் பதவியின் பெயராலே எப்படி தனியார் அறக்கட்டளை தொடங்க முடியும் என்ற கேள்விக்கு விடையில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் தலையிடுமா என்று தெரியவில்லை.

இது போன்ற ஒரு எதேச்சதிகார செயல்பாடு மக்களாட்சியில் நடைபெறுவது திகைப்பாக இருக்கிறது. ஏன் வரவு, செலவு கணக்கை பொதுவெளியில் பகிரக் கூடாது? ஏன் அரசே நிதியை நிர்வகிக்கக் கூடாது? ஏன் அரசின் தணிக்கை துறையே தணிக்கை செய்யக் கூடாது? இது போன்ற எந்த கேள்விக்கும் விடையில்லை. பிரதமரே அவர் பதவியை, அலுவலகத்தைப் பயன்படுத்தி இப்படி கேள்வி முறைக்கு அப்பாற்பட்ட பிரமாண்டமான நிதியைத் திரட்டலாமா என்று யோசித்தால், இது மன்னராட்சியா, மக்களாட்சியா என்ற குழப்பமே ஏற்படுகிறது.

மக்களிடம் இந்தப் பிரச்சினைகளை அனைவரும் எடுத்துச் செல்வதை தவிர வேறென்ன செய்ய முடியும்?

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

.

.

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 4 அக் 2021