மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

நீட் : 12 மாநிலங்களின் ஆதரவைக் கேட்கும் முதல்வர்!

நீட் : 12 மாநிலங்களின் ஆதரவைக் கேட்கும் முதல்வர்!

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்குமாறு 12 மாநில முதல்வர்களுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு, ஒன்றிய அரசு நமது குரலுக்குச் செவி சாய்க்க வில்லை எனில், அனைத்து மாநில முதல்வர்களின் ஆதரவைத் திரட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.

அதன்படி முதற்கட்ட நடவடிக்கையாக 12 மாநில முதல்வர்களுக்கு இன்று (அக்டோபர் 4) கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திரா, சத்தீஸ்கர், டெல்லி, ஜார்க்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, மேற்குவங்கம், கோவா ஆகிய 12 மாநில முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்து தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், “நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்றும், மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது என்பதே தங்களது நிலைப்பாடு.

இதுதொடர்பாக, மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையைத் தீர்மானிப்பதில் தங்கள் அரசியலமைப்பு உரிமையையும், நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டும்.

இந்த கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் ஆவணங்களை ஆராய்ந்து, கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமத்துக்கு உள்ளாவதைத் தடுக்கவும், அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.

நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதல்வர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வுக்கு எதிராக, தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி, நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுக்கு, நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் குழு நேரில் சென்று வழங்கி, இப்பிரச்சினை குறித்து தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவைக் கோர வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

திங்கள் 4 அக் 2021