மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

சசிகலா தியாகத் தலைவியா? பூங்குன்றன் சென்டிமென்ட் அட்டாக்!

சசிகலா தியாகத் தலைவியா?  பூங்குன்றன் சென்டிமென்ட் அட்டாக்!

சசிகலாவை தியாகத் தலைவி என்று இனியும் அழைக்காதீர்கள் , அவரது அடைமொழியை மாற்றுங்கள் என்று மறைந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடைய தனி உதவியாளர் பூங்குன்றன் இன்று (அக்டோபர் 4) கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சசிகலாவுக்கு எதிரானதா அல்லது ஆதரவானதா என்பது பற்றிய விவாதங்கள் சமூக தளங்களில் நடந்து வருகின்றன.

ஜெ. மறைவுக்குப் பின் கொஞ்ச நாள் அமைதியாக இருந்த பூங்குன்றன் தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை எழுதி வருகிறார். ஜெயலலிதாவின் தனி உதவியாளராக பல ஆண்டுகள் அவருடன் இருந்தவர் என்பதால் பூங்குன்றனின் கருத்துகள் அதிமுகவினராலும், அதிமுகவைத் தாண்டிய ஜெ. அபிமானிகளாலும் உற்று நோக்கப்படுகின்றன.

அந்த வகையில் இன்று பதிவிட்டுள்ள பூங்குன்றன் சசிகலாவை தியாகத் தலைவி என்று அழைக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”பெயரில் ஒரு உந்து சக்தி இருப்பதாகவே நான் கருதுகிறேன். தொடர்ந்து அழைக்கும் போது சக்தி பிறக்கிறது. அதை நானும் உணர்ந்திருக்கிறேன். போயஸ் கார்டனில் வேலை பார்த்த போது ஓ. பன்னீர்செல்வம் அவர்களை இனிஷியலோடு தான் எல்லோரும் அழைப்பார்கள். ஓ. என்பது ஆச்சரியம். அதனால் தான் அவருக்கு உயர்வு கிடைத்திருக்கிறது என்று மற்றவர்கள் சொல்லும்போது ஆச்சரியமாக பார்த்தேனே தவிர பெரிதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. பிறகு காலம் பாடத்தை எனக்கு போதித்த போது அதில் உண்மை இருப்பதாக உள்ளம் உணர்ந்தது. ஏனென்றால் எத்தனை பெயரை நாம் இனிஷியலோடு அழைக்கிறோம் எண்ணிப்பாருங்கள். மிகக் குறைவு. ஒருவரின் பெயரை மட்டும்தான் நாம் அழைக்கிறோம்.

இன்றைய முதல்வரை தளபதி என்றுதான் அழைத்து வந்தார்கள். அதனால் தான் அவர் இதற்கு முன்பு வரை தளபதியாகவே இருந்துவிட்டார். செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகும் தளபதி என்றே பலரும் அழைத்தார்கள். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் தலைவர் என்பதை நடைமுறைப்படுத்த சொல்லுங்கள். அதுவே வெற்றியைத் தரும். தளபதி என்பதன் அர்த்தம் அரசனுக்கு அடுத்து அதாவது தளபதி அவ்வளவுதான். அரசன் ஆவது எப்போது! நான் நண்பரிடம் தெரிவித்த கருத்தை அவருக்கு தெரிந்த குடும்பத்தினரிடம் தெரிவித்தாரா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், மனதில் தோன்றிய நல்லதை சொல்ல வேண்டும். அதுவே அறம்”என்று குறிப்பிட்டிருக்கும் பூங்குன்றன் அடுத்து,

“சமீபத்தில் இளையவர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு மலர்ந்தது. இளையவராக இருந்தாலும் நடக்கும் எதார்த்தத்தை புரிந்து கொண்டவராகத்தான் தெரிந்தார். அவரிடம், தியாகத்தலைவி என்று சின்னம்மாவை அழைக்கிறார்கள். அதை முதலில் மாற்ற முனையுங்கள். தியாகத்தின் அர்த்தம் என்ன? தியாகியாக இருக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? விரும்புகிறீர்களா? வேறு ஒரு நல்ல அடைமொழியை உருவாக்க முயலுங்கள் என்றேன். இந்த அடைமொழி அவர்கள் விரும்பும் சிறப்பைத் தராது என்பதே எனது புரிதல்.

முடிவு என்பது காலத்தின் கையில் உள்ளது. முடிவு சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது. உதவும் எண்ணம் இருந்தாலும் காலம் அனுமதிக்க வேண்டும். கடவுள் அதற்கு வழிவிட வேண்டும். திக்கற்றவருக்கு தெய்வமே துணையல்லவா! நல்லது நடக்க வேண்டி இறையிடம் முறையிடுகிறேன்”என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது தியாகத் தலைவி என்று தொடர்ந்து அழைத்தால் சசிகலா தியாகம் செய்துகொண்டேதான் இருக்க வேண்டும், அதனால் அவரது அடைமொழியை மாற்றுங்கள் என்பதுதான் பூங்குன்றனின் பதிவு சொல்லும் சங்கதி. ஏற்கனவே ஜோதிடம், சென்டிமென்ட் போன்ற விஷயங்களில் அதிக அக்கறை செலுத்தும் சசிகலா, இந்த அடைமொழி விவகாரத்தில் பூங்குன்றனின் கருத்தை எப்படி எடுத்துக் கொள்வார் என்று சசிகலா ஆதரவாளர்கள் இடையே விவாதம் நடைபெறுகிறது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 4 அக் 2021