மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

'பிரியங்காவின் துணிச்சல்....' : ராகுலின் ரியாக்‌ஷன்!

'பிரியங்காவின் துணிச்சல்....' : ராகுலின் ரியாக்‌ஷன்!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்க நேற்று சென்று கொண்டிருந்த போது, விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி அவர்களது வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, விவசாயிகளின் போராட்ட கூட்டத்திற்குள் ஒரு கார் நுழைந்தது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்ததாக விவசாயிகள் சங்கமான சம்யுக்தா கிஷான் மோர்சா தெரிவித்துள்ளது.

ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் மோதியதால் தான் 4 பேர் உயிரிழந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அதே சமயத்தில் போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் பாஜகவினர் உட்பட 4 பேர் உயிரிழந்ததாக ஒன்றிய அமைச்சர் அஜஸ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் ஒருவர் உட்பட இதுவரை மொத்தம் 9 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தின் காரணமாக நேற்று முதல் லக்கிம்பூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் அங்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அமைப்பான பாரதிய கிசான் யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அமைச்சரின் மகன் மற்றும் அவரது உறவினர் சென்ற கார் மோதியதால் தான் விவசாயிகள் உயிரிழந்தனர் என்றும் அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு எதிர்க் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் நேற்றிரவு உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரி பகுதியில் வசிக்கும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க கிழக்கு உபி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்றார். அவருடன் காங்கிரஸைச் சேர்ந்த தீப்பந்தர் ஹூடா எம்.பியும் உடன் சென்றார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைக் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பதைத் தடுக்கும் வகையில் சிதாப்பூரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

முதலில் தீப்பந்தர் ஹூடாவை அழைத்துச் சென்று வேனில் ஏற்றினர். அப்போது போலீசுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த பிரியங்கா காந்தி ஒரு குற்றவாளியைப் போல் நடத்துவதாகக் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், நீங்கள் கொன்றவர்களை விட நான் முக்கியமான நபர் அல்ல. நான் செல்லக் கூடாது என்பதற்கான சட்டபூர்வ வாரண்டை கொடுங்கள். இல்லையென்றால் நான் இங்கிருந்து நகர மாட்டேன். உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது. என்னை காரில் ஏற்றினால்

உங்கள் மீது கடத்தல் புகார் அளிப்பேன் என்று கடுமையாகப் பேசினார்.

பின்னர் கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தி வேனில் அமர்ந்தபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விவசாயிகளை நசுக்கும் அரசியலை பாஜக செய்து வருகிறது. இது விவசாயிகளுக்கான நாடு பாஜகவுக்கான நாடு அல்ல. வன்முறை மோதல்களில் காயமடைந்த விவசாயிகளின் வலியைப் பகிர்ந்து கொள்ள லக்கிம்பூர் செல்லவுள்ளேன். அது குற்றமாகாது என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பிரியங்கா, நீங்கள் பின்வாங்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களின் துணிச்சலைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள். நீதிக்காக முன்னெடுத்துள்ள அகிம்சை போராட்டம் வெற்றி பெறும். பயம் என்பதே இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சூழலில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று காலை கைது செய்யப்பட்டார். லக்னோவில் உள்ள விக்ரமாதித்யா மார்க் ரெசிடென்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தர்ணாவில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தரப் பிரதேச அரசு மேற்கொள்ளும் அராஜகங்கள் போன்று பிரிட்டிஷார் கூட செய்திருக்க மாட்டார்கள். ஒன்றிய அமைச்சர் மற்றும் உத்தரப் பிரதேச துணை முதல்வர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 2 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதியப்பட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 4 அக் 2021