மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

தேர்தல் தோல்விக்கு எடப்பாடியே காரணம்: ஓபிஎஸ் மறைமுகத் தாக்கு!

தேர்தல் தோல்விக்கு எடப்பாடியே காரணம்: ஓபிஎஸ் மறைமுகத் தாக்கு!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் களத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மட்டுமே பிரச்சாரம் செய்து வந்த நிலையில் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் எங்கே என்ற கேள்விகள் அதிமுகவுக்குள்ளும் அரசியல் அரங்கிலும் எழுந்தன.

இந்தக் கேள்விகளோடு மட்டுமல்லாமல்.... "ஒற்றை தலைமை என்பதன் அறிகுறியாகவே எடப்பாடி மட்டும் பிரச்சாரம் செய்கிறார். திமுக அரசாங்கத்தை சட்டமன்றத்தில் பாராட்டித் தள்ளிய ஓ பன்னீர் செல்வத்தை பிரச்சாரத்துக்கு வரவேண்டாம் என்று எடப்பாடி சொல்லி விட்டார்" என்றெல்லாம் யூகங்களுக்கு கண் காது மூக்கு வைத்து தகவல்கள் பரப்பப்பட்டன.

இந்த நிலையில் சற்று விட்டுப் பிடிப்பது போல் கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தல் களத்தில் தனியாகப் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் ஓ பன்னீர்செல்வம்.

அதுவும் குறிப்பாக அக்டோபர் 3ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசிய பேச்சு அதிமுகவுக்குள் சலசலப்புகளை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது

.

"திமுகவினரை போல அதிமுகவினர் கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதில்லை. ஊரார் சொத்துக்களை அடித்து உலையில் போடுவதில்லை. திமுகவினரை விட மக்களிடம் எப்போதும் அதிமுகவினருக்கு தான் நல்ல பெயர் இருக்கிறது.

இப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. நூற்றுக்கணக்கான ரவுடிகளை கைது செய்கிறோம் என்ற பெயரில் சில நடவடிக்கைகள் எடுத்தாலும் உண்மையிலேயே சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் தற்போது மோசமாகவே இருக்கிறது.

இந்நிலையில் அதிமுகவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கடந்த ஆட்சியில் நாம் நல்ல விதமாக செயல்பட்டு இருந்தாலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் வகுத்த தவறான வியூகங்களால்தான் ஒரு சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் நாம் ஆட்சியை இழக்க நேரிட்டது" என்று குறிப்பிட்டார் ஓ பன்னீர்செல்வம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கிட்டத்தட்ட தேர்தல் பணிகளையும் தேர்தல் வியூகங்களையும் எடப்பாடியே வகுத்தார் என்பது அதிமுகவினருக்கு

நன்கு தெரியும். இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தவறான வியூகத்தால் தான் தோற்றோம் என்பது எடப்பாடி பழனிசாமியை நோக்கி நேரடியாக பன்னீர்செல்வம் குற்றம் காட்டுவதாகவே அமைந்துள்ளது என்கிறார்கள் அதிமுகவினரே.

"கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்து நள்ளிரவு வரை அதிமுகவினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஓ. பன்னீர்செல்வம் கள நிலவரத்தை சுட்டிக்காட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அதிமுகவுடன் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுக தேர்தலை சந்தித்தால் திமுகவை எளிதாக எதிர்கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் கட்சிக்குள் வராவிட்டால் தேனி மாவட்டத்திலேயே தான் ஜெயிப்பது சிரமம் தான் என்று அமித் ஷாவிடம் வெளிப்படையாகவே அன்று பன்னீர்செல்வம் கூறினார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமிதான் இதை திட்டவட்டமாக மறுத்து இரட்டை இலைக்கு தான் செல்வாக்கே தவிர வேறு யாருக்கும் செல்வாக்கு இல்லை. எனவே இப்போது இருக்கும் நிலையிலேயே அதிமுக வெற்றி பெற முடியும் என்று தவறான வியூகத்தை வகுத்தார்.

தேர்தலில் திமுக எதிர்பார்த்த அளவுக்கு அக்கட்சிக்கு அபரிமிதமான ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் அதிமுக மிக வலிமையான எதிர்க் கட்சியாக மாறி இருக்கிறது. அம்மா இருக்கும்போதே தேர்தல் வியூகங்கள் வகுத்தவர் ஓ. பன்னீர்செல்வம். அவரது பேச்சைக் கேட்டு தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் ஒற்றுமையை ஏற்படுத்தி இருந்தால் இன்று தோல்வியடைந்த வித்தியாசத்தை விட சில சதவிகிதம் அதிகமாகவே நாம் வெற்றி பெற்று இருக்கலாம்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் காரணமாக எடப்பாடி பழனிசாமி அந்த முடிவை தடுத்து விட்டார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இதைத்தான் பன்னீர்செல்வம் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்லிக் கொண்டிருந்தார். இன்று உள்ளாட்சி தேர்தல் களத்தில் அதை வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார்" என்கிறார்கள் பன்னீர்செல்வத்துககு நெருக்கமான வட்டாரத்தினர்.

-வேந்தன்

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 4 அக் 2021