மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

அதிமுக பயப்படுகிறது: கனிமொழி எம்.பி!

அதிமுக பயப்படுகிறது: கனிமொழி எம்.பி!

பத்து ஆண்டுகளாக எதையும் செய்யாதவர்கள், திமுக ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்று திமுக எம்.பி.கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தீத்தாம்பட்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (அக்டோபர் 2) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் டி.பெரியசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கனிமொழி எம்.பி, சமூகநலம் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

கூட்டத்தில் ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளைத் தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய கனிமொழி எம்.பி, “பேருந்து வசதி உள்ளிட்ட நீங்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிகளவு தீர்வு காணப்பட்டுள்ளது. அதுபோன்று அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். குழந்தை திருமணம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இது பெண் குழந்தைகளின் படிப்பையும், ஆரோக்கியத்தையும் சிதைக்கக் கூடியது. அதுபோன்று சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்; மரங்களை வளர்க்க வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி, “ஆட்சியில் இருக்கும்போது எதையும் செய்யாத அதிமுகவினர், திமுகவின் செயல்பாடுகளையும், அறிவிக்கப்படும் திட்டங்களையும் பார்த்து பயப்படுகின்றனர். அந்த பயத்தில்தான், திமுக எதுவும் செய்யவில்லை என்று கூறி வருகின்றனர். அப்படியே விமர்சனம் வைத்தாலும், கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக செய்யாததை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற சில மாதங்களிலேயே செய்தார். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் விமர்சனத்திற்கு திமுகவின் செயல்பாடுகள்தான் பதிலாக இருக்கும்” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கேபிள் டிவிக்கு சொந்தமான ஆதார் மையங்களில் பணி புரியக்கூடிய பெண்களுக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டு பணி நிறுத்தம் செய்யப்படுவதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு, “இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும், “திமுகவின் அடித்தளம் நன்றாக அமையவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவது நகைச்சுவையாக உள்ளது” என்று கூறினார்.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 3 அக் 2021