மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

வேண்டும் வெள்ளாளர் மதம்: திடீர் டிரெண்டிங்!

வேண்டும் வெள்ளாளர் மதம்:  திடீர் டிரெண்டிங்!

சமூக வலைத்தளமான ட்விட்டரில் இன்று (அக்டோபர் 3) காலை முதல் திடீரென்று #இந்துமத வெளியேற்றமே விடுதலை #வேண்டும் வேளாளர் மதம் என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற புதுப் பெயரை சூட்டி அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் பிறகு இதற்கான அரசாணையும் ஒன்றிய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக அப்போதே வெள்ளாளர் கூட்டமைப்பினர் சென்னை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். அதன் பின் இந்த விவகாரம் பற்றி அவர்கள் அமைதிகாத்த நிலையில், இன்று திடீரென இணையத்தில் இந்து மதத்தில் இருந்து வெளியேறி வெள்ளாளர் மதம் என்கிற சைவ மதம் வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்பியிருக்கிறார்கள். இந்த ட்விட்டர் டிரண்டிங்கில் முதலியார், கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தினரும் பங்கேற்றுள்ளனர்.

இன்று மாலை 6 மணி வரை சுமார் 80 ஆயிரத்தை கடந்த பதிவுகள் மூலம் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது இந்த முழக்கம்.

வெள்ளாளர் தனி மதம் ஏன் வேண்டும் என்பதற்கான காரணங்களையும் அவர்கள் பட்டியலிட்டு உள்ளார்கள்.

“பாரதிய ஜனதா கட்சி எங்களது சமுதாயத்தின் பொதுப் பெயரை இன்னொரு சமுதாயத்துக்கு தாரை வார்த்து விட்டது. வெள்ளாளர்களின் ஒட்டு மொத்த மக்கள் தொகை சமண மதத்தினரை விட அதிகமானது. வெள்ளாளர்கள் பிராமணியத்தைச் சாராத தனிப்பட்ட மதக் கோட்பாடுகளையும் சொந்தமான ஆகமங்களையும் சொந்தமான ஆதீனங்களையும் பெற்றுள்ளோம். தமிழகத்தில் இருக்கும் முக்கியமான சைவ ஆதீனங்கள் வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவைதான். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரியமிக்க ஆதீனங்கள் வெள்ளாளர்களால் தோற்றுவிக்கப்பட்டவை. இந்த ஆதீனங்களையும் அவற்றுக்கு உட்பட்ட சைவ திருக்கோயில்களையும் பாதுகாக்க வேண்டுமென்றால் இந்து மதத்திலிருந்து வெளியேறி தனி வெள்ளாளர் மதம் அமைப்பதுதான் வழி. எங்களது கலாச்சாரத்தையும் வாழ்வியலையும் பாஜக சீரழித்து விட்டது” என்று பட்டியலிட்டுள்ளனர்.

இந்த ட்ரெண்டிங்கை எந்த அமைப்பு செய்கிறது என்று அறிவதற்காக வெள்ளாளர் பெயர் மீட்புக்குழுவின் தலைவர் சுந்தரம் பிள்ளையிடம் பேசினோம்.

"எனக்கு . 72 வயதாகிறது. ட்விட்டர் என்றால் என்னவென்றே தெரியாது. இளம் பிள்ளைகள் சேர்ந்து நடத்துகிறார்கள்" என்று தெரிவித்தார்.

தேவேந்திரகுல வேளாளர் பொது பெயருக்கு எதிர்வினை ஆற்றிய சில இளைஞர்களிடம் இதைப்பற்றி நாம் கேட்டபோது..."வெள்ளாளர்களுக்கு என்று பல்வேறு அமைப்புகள் சங்கங்கள் இருக்கின்றன. அவர்களை ஒருங்கிணைக்க முடியவில்லை. அவர்களிடையே ஒற்றுமை இல்லை. அதனால்தான் இளைஞர்கள் எல்லாம் இதை கையில் எடுத்து இப்படி ஒரு இணைய வழி முழக்கத்தை எழுப்பியிருக்கிறோம். இத்தோடு விடமாட்டோம் வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நாங்கள் தொடர்ந்து நெருக்கடி தருவோம். கர்நாடகத்தில் லிங்காயத்து போல தமிழ்நாட்டில் நாங்கள் வெள்ளாளர் சைவ மதத்தை மீண்டும் அமைப்போம்”என்கிறார்கள்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

ஞாயிறு 3 அக் 2021