மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

டி23 புலிக்கு ஆயுள் தண்டனையா? மரண தண்டனையா?

டி23 புலிக்கு ஆயுள் தண்டனையா? மரண தண்டனையா?

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் டி23 என்ற புலி 4 பேரைத் தாக்கி கொன்றது. குறிப்பாக சிங்காரா வனப்பகுதியில், குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரைப் புலி கடித்துக் கொன்றதோடு அவரது தலைப்பகுதியை தின்றுவிட்டு அங்கிருந்து தப்பித்தது.

இதனால் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் வாழும் மக்கள் புலியைப் பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து புலியை வேட்டையாடி பிடிக்க வனத்துறை உத்தரவிட்டது. எனினும் புலியைச் சுட்டுக்கொல்லப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் #savet23 என்ற ஹேஸ்டாக் ட்ரெண்ட் ஆனது.

புலியைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற உத்தரவுக்கு, நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இவ்வாறு ஒரு பக்கம் புலியை உயிருடன் பிடிக்கக் கோரிக்கை வலுத்து வரும் நிலையில் மறுபக்கம் புலியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த வனத்துறையினர், தமிழக அதிரடிப்படை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் என 100க்கும் மேற்பட்டோர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரவு 7 மணி வரை சல்லடை போட்டுத் தேடியும் புலி கிடைக்காததால் இன்று காலை மீண்டும் புலியைத் தேடும் பணி தொடங்கியது. ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் புலியைத் தேடும் பணி நடந்து வருகிறது.

ட்ரோன் கேமராக்கள் பறக்கவிட்டும் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு புலி சென்றுவந்த கால் தடங்களை வைத்தும் புலியின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க சிப்பி பாறை வகையைச் சேர்ந்த நாயையும் புலியைத் தேடும் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இந்த ஆட்கொல்லி புலியோடு மேலும் சில புலிகளும் சுற்றித் திரிவதால், டி23 புலியை அடையாளம் காணும் வகையில் ட்ரோன் கேமரா மூலம் பதிவான புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளது. அதில், புலியின் மூக்கு மற்றும் வலது கண்ணில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுமட்டுமின்றி புலி நடமாட்டம் இருக்கும் பகுதியில் இரண்டு மாடுகளை மரத்தில் கட்டி வைத்து அதன் அருகே பெரிய பரண் அமைத்து புலியைக் கண்காணித்து வருகின்றனர். மசினகுடி பகுதியில் மட்டும் 25 கண்காணிப்பு கேமராக்கள் என மொத்தம் 55 கேமராக்கள் மூலம் புலி நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த புலியை வேட்டையாடி பிடிக்க உத்தரவிடப்பட்டு இருந்தாலும் தற்போது வரை மயக்க ஊசி செலுத்தி அதனை உயிருடன் பிடிக்கும் முயற்சி தான் நடந்து வருகிறது என வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமரா, அதிரடி படையினர், மருத்துவக் குழுவினர் பலரும் புலியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது சீனிவாசன் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புலியைப் பிடிப்பது குறித்து நம்மிடம் பேசிய ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன், “கால்நடைகளைத் தாக்கியதால் தான் புலியைப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதிகள் மக்கள் வலியுறுத்தினர். ஆனால் கால்நடைகளை மட்டுமின்றி 3 நபர்களைக் கொன்றதுடன் நான்காவது நபரைக் கொன்று பாதி உடலைப் புலி தின்றுவிட்டதால் மக்களிடையே அச்ச உணர்வும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வேட்டையாடி பிடிக்கலாம் என்ற முடிவுக்கும் வனத்துறை வந்தது. ஒரு காட்டுப் புலி இப்படி காட்டை விட்டு வெளியேற்றப்படுவது என்பது வருத்தமளிக்கக் கூடிய செயல்பாடுதான்.

புலிகள் என்பது எல்லைக்கோடுகளை வைத்துக்கொண்டு வாழ்விடங்களைக் குறித்துக்கொள்ளும். அந்த வாழ்விடம் என்பது இரை விலங்குகளின் அடிப்படையில் இருக்கும். இது பெண் புலிகளுக்கானது. ஆண் புலிகளுக்கு அந்த இரை விலங்குகளைத் தாண்டி, அங்கிருக்கக் கூடிய பெண் விலங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்து வாழ்விடம் பெரிதாக இருக்கும்.

பொதுவாகப் புலிகளுக்கு வாழ்விடத்துக்கான உரிமைக்குச் சண்டை நிகழலாம். வலிமையான ஒரு புலி ஓரிடத்துக்கு வந்தால் அங்கிருக்கக் கூடிய வலிமையற்ற புலி விரட்டப்படும். டி23 புலியைப் பொறுத்த வரை 12 வயது வரை இருக்கலாம் என்று மதிப்பிடுகிறார்கள். புலிகள் அதிகபட்சமாக 15 வயது வரை தான் வாழ முடியும். 10 வயதுக்கு மேல் புலிகள் தளர்ந்துவிடும்.

இந்த புலி மற்ற புலிகளோடு ஏற்பட்ட சண்டையில், வாழ்விடத்தை இழந்து காட்டின் விளிம்பு பகுதிக்கு வந்திருக்கக் கூடும். அதன்படி இரை விலங்குகள் கிடைக்காத நிலையில், ஆடு, மாடுகளைக் குறிவைக்கிறது.

இதுவரை ஆடு மேய்த்தவர்களைத் தான் அந்த புலி அடித்திருக்கிறது. ஆனால் தற்போது அடித்தது மட்டுமல்லாமல், ஒருவரின் உடலையும் சாப்பிட்டிருக்கிறது. இதுதான் அச்ச உணர்வையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது

நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன வென்றால், காட்டை ஒட்டியிருக்கக் கூடிய மக்களின் நம்பிக்கையைப் பெறாமல், காட்டை காப்பாற்ற முடியாது. இந்த முதுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன.

இங்குள்ள அனைத்து புலிகளையும் பிடிக்கச் சொல்லி அங்கிருப்பவர்கள் கூறவில்லை. குறிப்பிட்ட இந்த புலியைப் பிடிக்க சொல்லித்தான் வலியுறுத்துகிறார்கள். புலியைப் பிடிக்கும் முயற்சியில் தான் தற்போது வரை வனத்துறை ஈடுபட்டு வருகிறது. ஒருவேளை பிடிக்கமுடியாத சூழலில் அது சுடப்படலாம்.

சுட்டுப் பிடித்தாலும் இல்லை அப்படியே பிடித்தாலும். இனி அதனால் காட்டில் இருக்க முடியாது. புலிக்கு மரண தண்டனையா, ஆயுள் தண்டனையா என்பதுதான் அதற்கு ஒரு தீர்வாக இருக்கப் போகிறது.

ஆனால் இதுபோன்ற நிலைமை வருவதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். எல்லா புலிகளும் இதுபோன்று கால்நடைகளையும் மனிதர்களையும் அடித்து ஆட்கொல்லியாக மாறுவதில்லை.

இந்த புலியையும் ஆட்கொல்லி என்று கூறிவிட முடியாது. ஆட்கொல்லி என்றால் தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி இரையாக எடுத்துக்கொள்ளும். அதுவும் அரிதாக நடக்கக்கூடியது. உடல்நிலை முடியாத போது, காயங்கள் ஏற்பட்டு முடியாத நிலையில் இருக்கும் போது மிக அரிதாக ஆட்கொல்லியாக மாறும்.

எப்படி இருந்தாலும் இந்த புலி காட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மசினகுடி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். நாங்கள் போய் புலியைக் கொல்கிறோம் என அவர்கள் புறப்படுகிறார்கள். எனவே அந்த அச்ச உணர்வையும் நாம் மதிக்க வேண்டும். மக்களோடு சேர்ந்துதான் நாம் காட்டை காப்பாற்ற வேண்டும்.

ஆனால் கூடலூரைப் பொறுத்தவரை இன்னும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலத்துக்குத் தீர்வு காணப்படாமல் இருக்கிறது. 1969ல் ஒரு சமஸ்தானத்துக்குச் சொந்தமான நிலத்தை, அரசு கையகப்படுத்தச் சட்டம் இயற்றிய பிறகும் இன்று வரை அது கையகப்படுத்தப்படவில்லை. இதில் பெரும் பகுதி காட்டுக்கும், காட்டு உயிர்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டிய பகுதி. இந்த பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

இன்னொரு பக்கம் சிறியூர் பகுதியில் யானைகளின் வலசை பாதைகளை மறித்து அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு குறித்து முடிவெடுக்காத சூழல் இன்னும் நிலவுகிறது. இதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், காட்டில் வாழும் சில பழங்குடியினர் தாங்களாகவே காட்டிலிருந்து வெளியே வருகிறோம், எங்களுக்கு வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் சரியான தீர்வு இன்னும் வழங்கப்படவில்லை. இது வழங்கப்பட வேண்டும்.

எனவே இவற்றையெல்லாம் வாழ்விடப் பிரச்சினையாகத்தான் நாம் பார்க்க வேண்டும். கூடலூர் என்பது மூன்று மாநிலங்களின் காடுகள் ஒன்று சேர்கிற பகுதி. காலம் காலமாக அங்கு வன உயிர்கள் வசிக்கின்றன. பழங்குடியினரும் வசித்து வருகின்றனர். ஆனால் பெரும்பகுதியினர் 100, 150ஆண்டுகளில் தான் குடியேறியிருக்கின்றனர். அதனால் மக்களைப் புறக்கணித்துவிட்டு, காட்டுயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை. ஆனால் மக்களும் இது காட்டுயிர் வாழும் பகுதி என்று புரிந்துகொள்ள வேண்டும். அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். காட்டு உயிரும் வாழ வேண்டும், நாமும் வாழ வேண்டும் என்ற மனநிலை இருக்க வேண்டும். இந்த பகுதிகளில் நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் இந்த பகுதிகளுக்கே உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்” என்றார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 3 அக் 2021