மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

கோயில் நகைகள்: மோடி வழியில் ஸ்டாலின்

கோயில் நகைகள்: மோடி வழியில் ஸ்டாலின்

தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் இருக்கும் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் இருக்கும் நகைகளை உருக்கி அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து அந்த வட்டிப் பணத்தை கோயில்கள் திருப்பணிக்கு செலவு செய்யும் திட்டத்தை அறிவித்தார்.

இதை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. இதில் ஊழல் நடக்கும் என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறி வருகிறார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலைய அமைச்சர் சேகர்பாபு மீண்டும் மீண்டும் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்.

“சமயபுரம் கோயிலில் நாங்கள் ஆய்வு நடத்தியபோது பெருமதிப்பிலான தங்க நகைகள் அப்படியே கட்டி வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரித்தபோது பத்து வருடங்களாக இப்படித்தான் உள்ளது என்று பதிலளித்தனர். அதன் பிறகுதான் இதுபற்றி முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்,

அந்தந்த கோயில்களுக்கென இருக்கும் புராதன, பிரத்யேகமான மன்னர்களால்,ஜமீன் தாரர்களால் கொடுக்கப்பட்ட நகைகளை நாங்கள் எதுவும் செய்யப் போவதில்லை. அவை அப்படியேதான் இருக்கும்.

பயன்பாட்டில் இல்லாத பக்தர்களின் காணிக்கையாக வந்த நகைகளைதான் உருக்க போகிறோம். நீதிபதிகள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு, அந்த நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, அவை வீடியோ பதிவு செய்யப்படும். அதன் பின் ஒன்றிய அரசுக்கு சொந்தமான மும்பையிலுள்ள நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டு அவை தங்கமாக மாற்றப்படும். இதில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. திருப்பதியில் கூட இந்த முறை செயல்படுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு,

இந்நிலையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அமைந்துள்ள சோம்நாத் கோயிலில் பாஜக அரசு செய்ததைத்தான் தமிழக கோயில்களில் செய்ய இருக்கிறார்கள் என்று திமுகவின் செய்தித் தொடர்புத் துறை செயலாளர் சபாபதி மோகன் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் சோம்நாத் கோவில் மிகப் பெரும் பணக்கார கோவிலாகும், இந்த கோவில் தங்க முலாம் பூசப்பட்டது. இந்த கோவிலின் அறங்காவலர்களில் பிரதமர் மோடியும் ஒருவர்.

கடந்த 2016 ஜனவரி 12 ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் சோம்நாத் கோவில் டிரஸ்டிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் டிரஸ்டின் அறங்காவலரான மூத்த பாஜக தலைவர் எல். கே. அத்வானி, மற்ற அறங்காவலர்களான பிரதமர் மோடி, முன்னாள் குஜராத் முதல்வர் கேசுபாய் படேல், , ஹர்ஷவர்தன் நியோடியா மற்றும் ஜேடி பர்மார், பி.கே.லஹிரி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் அமித் ஷாவை அறங்காவலர் குழுவில் சேர்ப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை சோம்நாத் கோயில் அறக்கட்டளை செயலாளர் லஹிரி ஊடகங்களிடம் விளக்கினார்.

“சோம்நாத் கோவில் அறக்கட்டளை குஜராத்தின் முதல் கோவிலாக தங்க நாணயமாக்கல் திட்டத்தில் டெபாசிட் செய்ய உள்ளது, பிரதமர் நரேந்திர மோடி உட்பட அதன் அறங்காவலர்கள் கோவிலின் தங்க இருப்புகளை முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். அறக்கட்டளையில் சுமார் 35 கிலோ தங்கம் உள்ளது. இது கோவிலின் அன்றாட பயன்பாட்டில் இல்லாத தங்கமாகும்”என்று சோம்நாத் மாவட்டத்தில் தெரிவித்தார் அறக்கட்டளையின் செயலாளரான லஹிரி.

இதைத்தான் திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரான சபாபதிமோகன் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேநேரம் சோம்நாத் கோவிலைச் சுற்றி குஜராத்தில் இருக்கும் மேலும் முக்கியமான பெரிய கோவில்களான துவாரகா கோயில், அம்பாஜி கோவில் ஆகியவற்றின் அறங்காவலர்கள் கோவில் நகைகளை தங்க பிஸ்கட்டுகளாகவோ, நாணயங்களாகவோ மாற்றும் திட்டத்தை ஆதரிக்கவில்லை.

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் சோம்நாத் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பிரதமர் மோடி 2021 ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மோடி சோம்நாத் கோவிலில் செயல்படுத்திய திட்டத்தைத்தான் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை மூலமாக முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் சேகர்பாபுவும் செயல்படுத்துகிறார்கள். இதைத்தான் தமிழக பாஜக கடுமையாக எதிர்க்கிறது.

-வேந்தன்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

ஞாயிறு 3 அக் 2021