மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

விவசாயிகள் போராட்டம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்!

விவசாயிகள் போராட்டம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்!

போராட்டம் என்ற பெயரில் ஓராண்டாக சாலைகளை முடக்கலாமா என்று விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தொடர்பாக, ஒன்றிய அரசுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படாததால்,போராட்டம் தொடர்ந்து வருகிறது. அந்தப் போராட்டத்தின் ஓராண்டு நினைவாக, கடந்த மாதம் நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற்றது. இதற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன.

இந்நிலையில், கிசான் மகா பஞ்சாயத்து என்ற விவசாயிகளின் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் 200 விவசாயிகள் சத்தியாகிரகப் போராட்டம் நடத்த அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நேற்று(அக்டோபர் 1) நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”டெல்லிக்குள் போராட்டம் நடத்தினால்தான் ஒன்றிய அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் என்று நம்புகிறோம், அதனால் எங்களுக்கு டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், “ஒட்டுமொத்த டெல்லி நகரின் கழுத்தையும் நெரிக்கிறீர்கள். இப்போது, நகரின் மையப் பகுதிக்குள் வந்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்களா?

நீங்கள் ஒரு விஷயத்தில் நீதிமன்றத்தை அணுகிவிட்டால், நீதிமன்றத்தின் மீதும், நீதித் துறை மீதும் நம்பிக்கை வைத்து, அதை விட்டுவிட வேண்டும். நீதிமன்றம் முறையாக முடிவு எடுக்கும். முதலில்,வேளாண் சட்டங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையிட்டீர்கள். பின்னர், அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தையும் அணுகினீர்கள். இப்போது சத்தியாகிரகத்தில் என்ன செய்யப்போகிறீர்கள்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பிறகும் போராட்டம் நடத்துவது நீதித்துறைக்கு எதிராகவும் போராடுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் வழக்கறிஞர், அவ்வாறு கிடையாது என்று தெரிவித்தனர்.

அதற்கு நீதிபதிகள் “அப்படியென்றால், நீதித்துறையை அணுகிவிட்டால், நம்பிக்கை வைக்க வேண்டும். போராட்டம் நடத்துவதற்கு பதிலாக அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை வையுங்கள்.

போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதேசமயம், மக்களும் சுதந்திரமாக அச்சமின்றி ஓர் இடம் விட்டு ஓர் இடம் செல்லவும் உரிமை இருக்கிறது. ஆனால், போராட்டத்தில் மக்களின் உடமைகள் சேதப்படுத்தப்படுகின்றன” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் வழக்கறிஞர்,” விவசாயிகள் அமைதியாக சத்தியாகிரகப் போராட்டம் நடத்துவார்கள்” என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள் ”அமைதியான போராட்டம் என்றால் என்ன? ரயில்களை மறிப்பது, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தைத் தடை செய்வதா? அமைதியான போராட்டத்தில் மக்களுக்கு இடையூறு வராது என்று கூறுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்து மனுதாரர் வழக்கறிஞர், “நெடுஞ்சாலைகளை விவசாயிகள் மறிக்கவில்லை; போலீசார் மறித்தனர்” எனத் தெரிவித்தார்.

அப்படியென்றால், நீங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதை பிரமாண பத்திரம் மூலம் தெரியப்படுத்துங்கள். அதேசமயம் ஆனால், போராட்டம் என்ற பெயரில் கிட்டத்தட்ட ஓராண்டாக நெடுஞ்சாலைகளை எப்படி முடக்க முடியும்? எப்போது இந்த மறியல் முடிவுக்கு வரும்” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 2 அக் 2021