மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

வீரபாண்டி ராஜா மறைவு: மதுரையில் இருந்து சேலம் விரையும் ஸ்டாலின்

வீரபாண்டி ராஜா மறைவு: மதுரையில் இருந்து சேலம் விரையும் ஸ்டாலின்

திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான வீரபாண்டி ராஜா இன்று (அக்டோபர் 2) தனது பிறந்தநாளிலேயே மாரடைப்பால் மரணமடைந்தது திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராம சபை கூட்டத்துக்காக மதுரை சென்றிருக்கும் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வீரபாண்டி ராஜாவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

“சேலத்துச் சிங்கம் வீரபாண்டியாரின் மகனும் - சேலம் மண்டலத்தில் கழகம் வளர்க்கும் வீரனாகவும் வலம் வந்தவர் அருமைச் சகோதரர் வீரபாண்டி ராஜா. இனிமையாய் பழகியும் அருமையான குணத்தாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் ராஜா. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதனைத் திறம்பட செய்து முடிக்கக் கூடியவர்.

இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், மாவட்டச் செயலாளர், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எனக் கழகப் பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டதோடு சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர் சகோதரர் ராஜா.

இரண்டு நாட்களுக்கு முன்னால் சேலத்துக்கு அரசு விழாவுக்குச் சென்றிருந்தபோதுகூட வீரபாண்டி ராஜாவைச் சந்தித்தேன். அன்போடு பேசிக் கொண்டு இருந்தேன். அந்த வெள்ளை உள்ளம் கொண்ட புன்சிரிப்பை மறக்க முடியவில்லை.

மிக இளமைக் காலத்தில் செழியனை இழந்தோம். மருத்துவமனை வாசலில் தலைவர் கலைஞர் அவர்களே வாய் விட்டுக் கதறும் அளவுக்கு நம்மை விட்டுப் பிரிந்தார் அண்ணன் வீரபாண்டியார். இதோ இப்போது வீரபாண்டி ராஜா. வீரபாண்டியார் குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது? என்னை நானே எப்படித் தேற்றிக் கொள்வது? வீரபாண்டி ராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல!

எந்நாளும் அவர் புகழ் நிலைத்திருக்கும். கழகத் தொண்டர்கள் மனதில் எந்நாளும் ராஜா வாழ்வார்.வீரபாண்டியார் குடும்பத்துக்கும் கழகச் செயல்வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று விட்டு தனி விமானம் மூலம் மதியம் 2.15 மணிக்கு சேலம் சென்றடையும் ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் வீரபாண்டி ராஜாவின் ஊரான பூலாவாரிக்கு செல்கிறார்.

அங்கே வீரபாண்டி ராஜா இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று ராஜாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கிறார். அதனைத் தொடர்ந்து 4.15 மணிக்கு சேலம் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 2 அக் 2021