மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

பள்ளிகள் திறப்பில் மாற்றமா?: அமைச்சர் பேட்டி!

பள்ளிகள் திறப்பில் மாற்றமா?: அமைச்சர் பேட்டி!

தமிழ்நாட்டில் 1-8 வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த ஊரடங்கு அறிவிப்பின்போது தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

நவம்பர் 1ல் பள்ளிகளை திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பள்ளிகளை திறக்கலாம் என்று தமாகா கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்திருந்தார். இதுபோன்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று(அக்டோபர் 2) காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சியில் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்பு சத்தியாக்கிரகம் நினைவுத் தூணில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மராத்தான் ஓட்டத்தினை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,” நவம்பர் 1ஆம் தேதி 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதில் தற்போதுவரை எந்தவித மாற்றமும் இல்லை. திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை அறிக்கையாக அளித்திருந்தனர். இதை நான் முதல்வரிடம் வழங்கியபோது அவர் சொன்னது ஒன்று தான். நீங்கள் என்னதான் அறிக்கை அளித்தாலும், மருத்துவ வல்லுநர்கள் என்ன சொல்கிறார்களோ, அதன் அடிப்படையில்தான் முடிவு எடுக்க முடியும். ஏனெனில் அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில்தான் ஊரடங்கு குறித்த முடிவும் எடுக்கப்படுகிறது. இது குழந்தைகளின் உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று முதல்வர் கூறினார்.

மருத்துவ வல்லுநர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதனால், அதில் எந்தவித மாற்றமும் இல்லை.

ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் வெகுநேரம் முகக்கவசம் அணிந்திருக்க முடியாது என்பதால், அதுதொடர்பாக பின்னர் ஆய்வு செய்து அறிவிக்கப்படும்” என்று கூறினார்.

அதுபோன்று கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 2 அக் 2021