மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

மாவட்டம் தோறும் துரை வைகோ: மதிமுகவின் அடுத்த திட்டம்!

மாவட்டம் தோறும் துரை வைகோ: மதிமுகவின் அடுத்த திட்டம்!

பெரும்பாலான கட்சித் தலைவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அரசியல் வாழ்வில் முக்கியமான அங்கமாகிவிட்ட நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பிறந்த நாள் மட்டும் அவரது கட்சியினருக்கே கூட தெரியாத ரகசியமாக இருந்தது.

இந்த நிலையில்தான் செப்டம்பர் 22-ஆம் தேதி வைகோவின் 77 வது பிறந்தநாளை ஒட்டி, செப்டம்பர் 21ம் தேதியே வைகோவின் மகன் துரை வைகோவை அழைத்து கொண்டாடினார் மதிமுகவின் வடசென்னை மாவட்ட செயலாளர் ஜீவன். செப்டம்பர் கொண்டாட்டம் என்ற பெயரில் நடந்த இந்நிகழ்வில் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

கடந்த வருடமே வைகோவின் பிறந்தநாளை மத நல்லிணக்க நாளாக நிகழ்ச்சி ஜீவன் நடத்தியிருந்தாலும், இந்த வருடம் வைகோவின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக அவரது மகன் துரை வைகோ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரை அழைத்து கொண்டாடிய நிலையில்தான்... முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வைகோவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் ஜீவன் தனது தலைவரான வைகோவிடம் அனுமதி கேட்டபோது துரை வைகோவை அனுப்ப மறுத்திருக்கிறார் வைகோ. ஆனால் வடசென்னை மாவட்டச் செயலாளர் ஜீவன் தனக்கு வைகோவிடம் இருக்கும் நீண்டகால உரிமையின் , உறவின் அடிப்படையில்..."தலைவரே நான் உங்கள் பிறந்த நாள் நிகழ்ச்சியை நடத்துவது குற்றம் என்றால் என்னை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவித்து விடுங்கள். ஒரு சாதாரண தொண்டராக இருந்தாலும் கூட உங்கள் பிறந்தநாள் நிகழ்ச்சியை நான் நடத்துவேன்" என்று கூற அதற்கு பிறகு வேறு வழியில்லாமல் சம்மதித்திருக்கிறார் வைகோ.

ஏற்கனவே துரை வைகோவின் அரசியல் பிரவேசம் குறித்து மின்னம்பலத்தில் முக்கியமான செய்திகளை வெளியிட்டு இருக்கிறோம். 2020 ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த தினத்தை ஒட்டி, அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தனது வீட்டிலேயே அம்பேத்கருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் வைகோ. அந்த நிகழ்ச்சியில் வைகோவுடன் சேர்ந்து துரை வைகோவும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார். இது மதிமுகவினருக்கு வைகோ கொடுத்த சமிக்ஞையாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இந்த செய்தி வெளிவந்ததும் வைகோவே நம்மை தொடர்புகொண்டு அப்படிப்பட்ட எண்ணம் இல்லை என்று மறுத்தார்.

அதற்குப் பிறகு நடந்த மதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டங்களில் துரை வைகோ மதிமுகவில் முக்கியப் பதவிக்கு வரவேண்டும், சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களே பேசினார்கள். . அதையும் வைகோ கண்டுகொள்ளவில்லை. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த மாவட்ட செயலாளர் கூட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொடியேற்று விழாக்களுக்கு துரை வைகோ வரவேண்டுமென மாவட்ட செயலாளர்கள் வேண்டுகோள் வைத்தனர். இப்படி தொடர்ச்சியாக துரை வைகோவை மாவட்ட செயலாளர்கள் களத்துக்கு இழுப்பதும், அதற்கு பொதுச் செயலாளர் வைகோ தன் கைகளை இறுக்க மூடிக் கொண்டிருப்பதும் மதிமுகவில் தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில்தான், வைகோவின் பிறந்தநாள் விழாவுக்கு அவரது மகன் துரை வைகோவை அழைத்து சிறப்புரையாற்ற வைத்தார் மதிமுக மாவட்டச் செயலாளர் ஜீவன். அந்த விழாவில் பேசிய துரை வைகோ,

“என் தந்தையாரின் தனிப்பட்ட வரலாற்றிலும் மதிமுக என்ற இயக்கத்தின் வரலாற்றிலும் அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை. நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலபேர் என்னிடம் கூறி வருகிறார்கள். துரை வையாபுரி என்பது முடிந்துவிட்டது... துரை வைகோ என்பது தொடங்கிவிட்டது என்று நான் முன்பே அறிவித்து விட்டேன். மதிமுக தொண்டர்களும் மாவட்ட செயலாளர்களும் கூறுவதுபோல மக்களும் கூறும்போது நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்” என்று பேசினார் துரை வைகோ.

இந்த நிகழ்ச்சியை அடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மதிமுக நிர்வாகிகள் எங்கள் மாவட்டத்துக்கு வந்து வைகோ பிறந்தநாள் விழாவை நீங்கள் நடத்தித் தர வேண்டும் என்று துரை வைகோவிடம் தேதி கேட்டு படையெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வைகோவின் சொந்த கிராமமான கலிங்கப்பட்டியை உள்ளடக்கிய குருவிகுளம் ஒன்றிய தேர்தலுக்காக துரை வைகோ தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கே போட்டியிடும் மதிமுக, திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் துரை வைகோ.

அந்த பரப்புரையின் போது பேசும் துரை வைகோ, “நான் இந்த குருவிக்குளம் ஒன்றியத்தில் இருந்து எனது அரசியலைத் தொடங்குகிறேன். இந்த ஒன்றியத்தில் மக்கள் பணியாற்றுவேன். அனைத்து கிராமங்களிலும் மக்கள் பிரச்சினையை தீர்ப்பேன். குருவிக்குளம் ஒன்றியத்தை தமிழ்நாடே கவனிக்கும் என்ற அளவுக்கு இதை சிறப்பாக ஆக்குவேன்” என்று பேசிவருகிறார்.

”வைகோ 1971ஆம் ஆண்டு குருவிக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மூலம் குருவிக்குளம் ஒன்றிய தலைவராகி இந்திய தேசிய அரசியல் வரைக்கும் உயர்ந்தார். அதுபோல இப்போது துரை வைகோவும் தனது மண்ணில் இருந்து அடிப்படையான உள்ளாட்சித் தேர்தல் மூலம் அரசியலில் முறைப்படி இறங்கியிருக்கிறார். விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் வருவார்” என்கிறார்கள் நம்மிடம் பேசிய தென்மாவட்டத்தைச் சேர்ந்த மதிமுக மாவட்டச் செயலாளர்கள்.

-ஆரா

அரசியலுக்கு வரும் மகன்: உறுதிப்படுத்திய வைகோ

வைகோ மகன் வரவேண்டும்- தாயகத்தில் மாசெக்கள் ‘நிறைவேற்றிய’ தீர்மானம்!

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 2 அக் 2021