மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

முதல்வருக்காக டிராபிக் நிறுத்தம்: நீதிபதிக்கு நடந்தது என்ன?

முதல்வருக்காக டிராபிக்  நிறுத்தம்: நீதிபதிக்கு நடந்தது என்ன?

முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 1) சற்று கோபமாகவே தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம் இன்று காலை சென்னையில் முதல்வருக்காக ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து நிறுத்தத்தில் ஒரு நீதிபதியும் சிக்கிக் கொண்டதுதான்.

சென்னை அடையாறு பகுதியில், முன்பு சத்யா ஸ்டுடியோவாக இருந்த தற்போது எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை கல்லூரியின் எதிர்புறத்தில் அமைந்துள்ளது சிவாஜிகணேசன் மணிமண்டபம். நடிகர் சிவாஜி கணேசனின் 94வது பிறந்த நாள் விழா இன்று(அக்டோபர் 1) அந்த மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு, இங்கு வருவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வீடு அமைந்துள்ள சித்தரஞ்சன் சாலையில் இருந்து காலை புறப்பட்டார்.

சென்னை அடையாறு டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் முதல்வர் வாகனம் திரும்பும்போது, கிரீன்வேஸ் சாலையில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிமன்றம் செல்வதற்கு வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

முதல்வர் வாகனம் செல்வதால் சாலைகளில் இரும்புத் தடுப்புகளை அமைத்து, போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த டிராபிக்கில் நீதிபதி வாகனம் சுமார் பத்து வாகனங்களுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தது. அதனால் காவல்துறையினர் அதை கவனிக்கவில்லை. எதற்காக வாகனம் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று நீதிபதி தன்னுடைய உதவியாளரிடம் கேட்டுள்ளார். முதல்வர் வாகனம் செல்வதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று உதவியாளர் கூறியிருக்கிறார். சுமார் 15 நிமிட காத்திருப்புக்கு பிறகு நீதிபதி வாகனம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

தாமதமாக நீதிமன்றம் சென்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், டிராபிக்கில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டதால், தனது பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறைச் செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் முதல்வர் கவனத்துக்கு சென்றது. அப்போது, முதல்வருடன் உடன் இருந்த உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், நடந்த சம்பவத்தை முதல்வருக்கு விளக்கினார்.

“இது ஒரு பிரச்சினையாக மாறிவிடக் கூடாது. இதை சுமூகமாக முடிக்க வேண்டும், அதனால் நீதிபதியிடம் சாரி கேட்டுவிடுங்கள்” என்று முதல்வர் உள்துறை செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, காணொலிக் காட்சி மூலம் உள்துறைச் செயலாளர் பிரபாகர் நீதிபதி முன்பு ஆஜரானார். அவரிடம் எதனடிப்படையில் 15 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினீர்கள்? பொது ஊழியரான, நீதிபதியான என்னைப் பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு என நீதிபதி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.

நடைபெற்ற நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்த உள்துறைச் செயலாளர், சென்னை மாநகரக் காவல் ஆணையரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது என்றும் உறுதியளித்தார்.

இதையடுத்து, முதல்வர், அமைச்சர்கள் நிகழ்ச்சிக்குப் போகும்போது, இதுபோல் காவல்துறையினர் தடுத்து நிறுத்துவார்களா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வு நீதிமன்ற அவமதிப்பாக இருந்தாலும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்று நம்புவதால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறினார்.

இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில், ”உயர்நீதிமன்ற நீதிபதி வாகனம் பத்து வாகனங்களுக்கு பின்னால் நின்றதால் எங்களுக்கு தெரியவில்லை. நீதிபதியின் வாகனம் டிராபிக்கில் நின்றது தெரியாது. முதல்வர் வாகனம் செல்லும்போது, இவருடைய வாகனம் செல்ல அனுமதித்தால், மற்ற வாகனங்களும் செல்லும். பாதுகாப்பு கருதிதான் நிறுத்தி வைக்கப்பட்டது” என்று கூறுகின்றனர்.

-வணங்காமுடி, வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 1 அக் 2021