மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

நூறுநாள் வேலைத் திட்டத்தை விவசாயத்தோடு சேர்க்க வேண்டும்: சீமான்

நூறுநாள் வேலைத் திட்டத்தை விவசாயத்தோடு சேர்க்க வேண்டும்: சீமான்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் திமுக, அதிமுக போன்ற பெரிய அரசியல் கட்சிகள் எல்லாம் கிராமப்புறங்களில் பிரச்சாரம் செய்யும்போது, ‘நூறு நாள் வேலைத் திட்டத்தை திறமையாக செயல்படுத்தியது நாங்கள்தான்’ என்று சொல்லி ஓட்டு கேட்டு வருகின்றன.

ஆனால் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளாட்சித் தேர்தல் களத்தின் இடையே நேற்று (செப்டம்பர் 30) விழுப்புரம் மாவட்டத்தின் கோலியனூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது 100 நாள் வேலைத்திட்டத்தைப் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

”இந்த தேர்தலால் விவசாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா?” என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், “விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும். மனித ஆற்றலை மனிதத் திறனை உழைப்பில் ஈடுபடுத்தி உற்பத்தியைப் பெருக்கி லாபத்தை ஈட்டும் நாடு எதுவோ அதுதான் வாழும் வளரும். ஆனால் மனிதனை உழைப்பில் இருந்து வெளியேற்றி விட்டு அவனை சோம்பி இருக்கச் செய்து அவனுக்கு கூலி கொடுப்பது என்பது மிக ஆபத்தான போக்காகும்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபடுபவர்களை விவசாய தொழிலில் ஈடுபடுத்தி அவர்களுக்கு நில உரிமையாளர்கள் கொடுக்கும் ஊதியத்தோடு நூறு நாள் வேலைத்திட்ட ஊதியத்தையும் சேர்த்து கொடுத்தால் அது ஆக்கபூர்வமாக அமையும். நூறு நாள் வேலைக்கு சம்பளமாக ஒரு நாளைக்கு முன்னூறு ரூபாய் கூட கொடுக்கலாம். ஆனால் அதை விவசாயத்தோடு இணைக்க வேண்டும்.

வேளாண்மை செய்ய ஆளே இல்லாத போது விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட் எதற்கு? அதனால் என்ன பயன்? இவ்வளவு வருடங்களாக 100 நாள் வேலை திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது அல்லவா? இந்த திட்டத்தின் மூலம் இதுவரை எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன? கோடிக்கணக்கான மரங்களை இதுவரை வளர்த்திருக்கலாமே? நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் இதுவரை எத்தனை குளங்களை தூர்வாரி இருக்கிறார்கள்? எத்தனை ஏரிகளை தூர்வாரி இருக்கிறார்கள்? எத்தனை சாலைகளை செப்பனிட்டிருக்கிறார்கள்? ஏதாவது ஒரு புகைப்பட ஆதாரம் கொடுக்க முடியுமா? 100 நாள் வேலை திட்டம் என்று சொல்லி பல்லாங்குழி ஆடுவது புறனி பேசுவது சீட்டு ஆடுவது என்பது தான் நடந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து இன்று (அக்டோபர் 1) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் கேட்கப்பட்டபோது, ” அவர் விமர்சனம் செய்தார் என்பதை விட, அவர் எதைபற்றிதான் விமர்சனம் செய்யாமல் இருக்கிறார் என்று சொன்னால் ஏற்புடையதாக இருக்கும். காரணம், எந்தவொரு செயலுக்கும் எதிர்வினையாற்றக் கூடியவராக அவர் இருக்கிறார். நூறு நாள் வேலைத் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது” என்று கூறினார்.

-வேந்தன்

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வெள்ளி 1 அக் 2021