மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

ஜெகத்ரட்சகன் -துரைமுருகன் -ஸ்டாலின்: தொண்டனுக்காக நடந்த சென்டிமென்ட் போராட்டம்!

ஜெகத்ரட்சகன் -துரைமுருகன் -ஸ்டாலின்: தொண்டனுக்காக நடந்த சென்டிமென்ட் போராட்டம்!

ஒரு கட்சியில் இருந்து ஒருவர் நீக்கப்படுவதும் பின் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவதும் அல்லது வேறு கட்சியில் சேர்வதும் இன்றைய அரசியல் உலகில் சாதாரணத்தை விட சாதாரணமான விஷயம்.

ஆனால் திமுகவில் இருந்து கடந்த 2019 செப்டம்பர் மாதம் நீக்கப்பட்ட மாநில கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும் தலைமைக் கழகப் பேச்சாளருமான குடியாத்தம் குமரன் பெரும் போராட்டத்துக்குப் பிறகு திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறார்.

அதாவது துரைமுருகன் பொருளாளராக இருந்தபோது அவரோடு மோதி அதனால் நீக்கப்பட்டு, இப்போது துரைமுருகன் பொதுச் செயலாளராக இருக்கும் நிலையில் மீண்டும் திமுகவில் சேர்கிறார் குடியாத்தம் குமரன்.

கலைஞர் மறைந்த சில நாட்கள் கழித்து அவருக்கு வேலூரில் இரங்கல் கூட்டம் நடந்தபோது அதில் குடியாத்தம் குமரன் பேச முயன்றிருக்கிறார். ஆனால் அவர் பேசவேண்டாம் என்று துரைமுருகன் சொல்லிவிட்டார். ஆனபோதும் குமரன் அந்த நிகழ்வில் கலைஞர் பற்றிப் பேசியிருக்கிறார். தன்னை துரைமுருகன் பேச விடாமல் தடுத்த கோபத்தில் அன்று இரவு சக நிர்வாகியிடம் செல்போனில் பேசும்போது துரைமுருகனைப் பற்றி கடுமையாகப் பேசியிருக்கிறார் குமரன். அந்த நிர்வாகி அதை அப்படியே ஒலிப்பதிவு செய்து கதிர் ஆனந்துக்கு அனுப்பி வைத்துள்ளார். கதிர் ஆனந்த் இதை தன் அப்பா துரைமுருகனிடம் போட்டுக் காட்ட கோபமான துரைமுருகன் அதை அப்படியே பத்திரமாக வைத்திருந்தார் .

அதன்பின் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு 2019 ஆகஸ்டு 5 ஆம் தேதி தேர்தல் நடந்தது. அந்த தேர்தலிலும் கதிர் ஆனந்துக்காக பிரச்சாரம் செய்தார் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரான குடியாத்தம் குமரன்.

தேர்தல் முடிவு வெளியாகி கதிர் ஆனந்த் வெற்றிபெற்ற நிலையில்...2019 செப்டம்பர் 26 ஆம் தேதி கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளராக இருந்த குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ‘இவனை நீக்கலேன்னா நான் அறிவாலயத்துக்கே இனி வரமாட்டேன்’என்று ஸ்டாலினிடம் துரைமுருகன் வாக்கு வாதம் செய்ததன் விளைவாக அவர் நீக்கப்பட்டார்.

இதன் பின் திமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் ஆகிய பலரிடம் குமரன் போய் முறையிட்டும் துரைமுருகனை எதிர்த்துக் கொண்டு யாரும் அவருக்கு உதவ முன் வந்தாலும் அவர்களால் முடியவில்லை. இடையில் துரைமுருகன் பொதுச் செயலாளர் பதவிக்கும் வந்துவிட்டதால் அவர்கள் வெளிப்படையாகவே மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் 2020 டிசம்பர் மாதம் சென்னை கோட்டூர் புரத்தில் இருக்கும் துரைமுருகன் இல்லத்துக்கே சென்ற குடியாத்தம் குமரன், தன்னை மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு உருக்கமாக கேட்டுள்ளார். அப்போது அவர், ‘நான் பொதுச் செயலாளரா இருக்கற வைக்கும் நீ திமுகவுக்குள்ள வர முடியாது. நான் போனாக் கூட என் பையன் இருக்குறான். அவன் உன்னை கட்சிக்குள்ள விடமாட்டான்’என்று கூறியதாக குடியாத்தம் குமரனே வீடியோ வெளியிட்டார். .

மேலும், “இப்போது நான் பேசியது பத்து சதவிகிதம்தான். துரைமுருகன் தலைமைக் கழக நிர்வாகிகளைப் பற்றி சொன்னதெல்லாம் நேருக்கு நேராக கேட்டவன் நான். அதையெல்லாம் அடுத்தடுத்து வீடியோக்களில் விளக்குகிறேன்” என்றெல்லாம் விரக்தியில் வீடியோ வெளியிட்டார் குடியாத்தம் குமரன். அப்போது எ.வ.வேலு மூலமாக குடியாத்தம் குமரனை தொடர்புகொள்ளச் செய்து அடுத்தடுத்த வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அத்தோடு நிறுத்தினார் குமரன்.

இந்த நிலையில் தொடர்ந்து திமுகவுக்காக ஃபேஸ்புக், வாட்ஸப்புகளில் வீடியோ வெளியிட்டு வந்த குமரன் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி இன்னொரு உருக்கமான வீடியோவை வெளியிட்டார். ஏனென்றால் அன்றுதான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இரண்டு வருடம் முடிந்த நாள்.

அன்று பேசிய குடியாத்தம் குமரன் தனது இணைப்புக்காக திமுகவின் அரக்கோணம் மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் எடுத்த முயற்சியை குறிப்பிட்டார்.

“என்னை திமுகவுலேர்ந்து நீக்கி இரு வருடம் ஆகிறது. மறுபடியும் கட்சியில சேர 50 முறை 60 முறையாவது முயற்சி பண்ணியிருப்பேன். எனக்குப் பிறகு நீக்கப்பட்ட அம்பது பேரையாவது நீக்கி மறுபடியும் சேர்த்திருக்காங்க. திமுகவுல சேர்க்கக் கூடாதுனு இருந்தவங்களை எல்லாம் சேர்த்திருக்காங்க. ஆனா தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நான் ரெண்டு வருசமா சேர்க்கப்படலை. கடுகளவு நம்பிக்கைதான் எனக்கு இருக்கு. ஆனா அண்ணன் ஜெகத்ரட்சகன் காப்பாத்துவார்னு ஒரு நம்பிக்கை இருக்கு.

சட்டமன்றத்துல கலைஞர் படத்திறப்பு விழா அன்னிக்கு அண்ணன் ஜெகத்ரட்சன் என்னை கூப்பிட்டு வரச் சொன்னாரு. சென்னையில அவரோட ஹோட்டல்ல போய் பார்த்தேன். உரிமையா திட்டினாரு. ‘ என்னடா பையா...உன்னைப் பத்தி முதலமைச்சரே சொல்றாரு. குடியாத்தம் குமரனை நீக்கியே ஆகணும்னு அண்ணன் (துரைமுருகன்) சொன்னாரு. அதனால வேற வழியில்லாம நீக்கிட்டேன். அவன் ஒரு நல்ல பேச்சாளர், தொண்டன்னு முதல்வர் என்கிட்ட சொன்னாரு. அதனாலதான் உன்னை இப்ப நான் கூப்பிட்டு பேசுறேன். போடா...பத்து நாள்ல உன்னை கட்சியில சேர்த்துடறேன் போடா’னு சொல்லி அனுப்பிச்சாரு. அப்புறம் பத்து நாள் கழிச்சு அவரை போய் பாத்தேன். அவரும் (துரைமுருகனும்) ஒ.கே. சொல்லிட்டாருடா. இன்னும் கொஞ்ச நாள்ல அறிவிப்பு வந்திரும்னு சொன்னாரு. அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு பாத்தேன். அசெம்பிளி முடியட்டும்னு சொன்னாரு. அதுக்கப்புறம் அவரை பாக்க போகலை.

இன்னியோட என்னை கட்சியிலேர்ந்து நீக்கி ரெண்டு வருசம் ஆச்சிங்க. இதுக்கு மேல என்னங்க இருக்கு.. உள்ளாட்சித் தேர்தல்ல கூட என்னால ஓட்டு கேட்க முடியல. இனிமே எனக்கு நம்பிக்கை இல்லைங்க.

என்னை நீக்கின பத்தே நாள்ல அதிமுகவுல கூப்பிட்டாங்க. பிஜேபியில கூப்பிட்டாங்க. ஆனா அங்கெல்லாம் போறதை விட குடியாத்தம் பழைய பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை எடுத்து பொழைச்சிப்பேன்னு சொல்லிட்டேன். இதை நான் மரியாதைக்குரிய அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்குதான் சொல்றேன். அவர் என்னை சிறைக்கு அனுப்புறது வரைக்கும் துணிஞ்சிட்டாரு. என்னை கட்சியில சேர்க்கவேண்டும் என்று முயற்சித்த அண்ணன் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட அனைவருக்கும் என் சார்பிலும் என் குடும்பத்தின் சார்பிலும் நன்றியை தெரிவிச்சுக்குறேன்.

பொதுச் செயலாளர் துரைமுருகன் அடிக்கடி மேடையில ஒரு உண்மை சம்பவத்தை சொல்லுவாரு. அறிவாலயத்துல தலைவர் கலைஞரோட அவர் இருக்கும்போது திருநெல்வேலியோ தூத்துக்குடியோ அங்கேர்ந்து சாமிக்கண்ணுனு ஒரு தொண்டர் வந்திருந்தார். அவரை கலைஞர் ஏதோ கோபத்தில் திட்டி அனுப்பிட்டாரு. அந்த தொண்டர் அழுதுகொண்டே போயிட்டார். கொஞ்ச நேரம் கழிச்சு, ‘நான் திட்டி அனுப்பிட்டேன். பாவம் வெளிய அழுதுக்கிட்டே நிப்பான் போயி கூட்டி வா’என்று துரைமுருகனை அனுப்பினாரு. உடனே துரைமுருகன் வெளிய போய் அவரை தேடி பிடித்து தலைவர்கிட்ட கூட்டி வந்தார். அப்ப கலைஞர் அவரிடம், ‘என்னயா நான் திட்டினதுல கோவிச்சுக்கிட்டியா...நான் தப்பு பண்ணிருந்தா என்னை மன்னிச்சிடுய்யா’ னு சொன்னாராம் தலைவர். இதை அடிக்கடி சொல்லும் துரைமுருகன் அவர்களே... தளபதிக்கு முன்பு காட்பாடியின் கலைஞர் என்று உங்களைதானே சொன்னேன். கலைஞருக்கு இருந்த அந்த குணம் கலைஞரோட இதய சிம்மாசனத்துல எத்தனையோ ஆண்டுகள் இருந்த உங்களுக்கு ஏண்ணே இல்ல?

நான் அப்படி என்னங்க துரோகம் பண்ணிட்டேன். கொலை பண்ணவன் கூட வெளிய வந்துடறான். நான் ஒரே ஒரு தடவை போன்ல பேசினதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? போதும் ஐயா எனக்கு கொடுத்த துன்பத்தை வேறு எந்த தொண்டருக்கும் கொடுத்துடாதீங்கய்யா” என்று அந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த எம்பி. ஜெகத்ரட்சகன் இதை மறுபடியும் துரைமுருகனிடம் எடுத்துச் சொல்லி, ‘அண்ணே இவ்வளவு தூரம் மன்னிப்பு கேட்குறான். அவனை சேர்த்துக்கங்க’ என்று வலியுறுத்தியிருக்கிறார். அந்த வீடியோவை துரைமுருகனும் பார்த்து, ‘சரிய்யா அவனை வர சொல்லுங்க’ என்று சொல்லியனுப்பியுள்ளார். அதையடுத்து குடியாத்தம் குமரனும் ஓடோடிச் சென்று துரைமுருகனிடம் சென்று காலில் விழ, அவரை மன்னித்து தன்னுடன் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள அனுமதித்தார் துரைமுருகன். இதை முறைப்படி கட்சித் தலைவரான முதல்வர் ஸ்டாலினிடமும் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று (அக்டோபர் 1) அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்ட குடியாத்தம் குமரனிடம் விளக்க கடிதம் எழுதி வாங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் அவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட அறிவிப்பு ஓரிரு நாளில் முரசொலியில் வெளியாகக் கூடும் என்கிறார்கள்.

துரைமுருகன் அன்று ஏதோ ஒரு கோபத்தில் செய்திருந்தாலும், அவரது மகன் கதிர் ஆனந்த் போட்ட தடையால் இரு ஆண்டுகளாக திமுகவில் சேர முடியாமல் இருந்தார் குடியாத்தம் குமரன். ஒரு தொண்டனின் மனநிலையை உணர்ந்த ஜெகத்ரட்சகன் இந்த விவகாரத்தில் ஒரு பாலமாக செயல்பட்டு துரைமுருகனிடம் பேச அதையடுத்து குடியாத்தம் குமரனை மன்னித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஒரு உண்மையான தொண்டனை கட்சி இழந்துவிடக் கூடாது என்று இதில் செயல்பட்ட திமுக மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகனை திமுக நிர்வாகிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

-ஆரா

அறிவாலயத்துக்கு வரமாட்டேன் -துரைமுருகன் நெருக்கடி- என்ன செய்தார் ஸ்டாலின்?

துரைமுருகன் காலில் விழுந்தால்தான் கட்சியில் இணைய முடியுமா?

துரைமுருகனிடமிருந்து ஸ்டாலினை காக்க வேண்டும்!- திமுகவை கலக்கும் வீடியோ

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 1 அக் 2021