மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 செப் 2021

முதல்வர் பங்கேற்கும் கிராம சபைக் கூட்டம்!

முதல்வர் பங்கேற்கும் கிராம சபைக் கூட்டம்!

மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறாமல் இருந்தன. கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, பல்வேறு செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், கிராம சபைக் கூட்டங்களையும் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தன.

இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள ஒன்பது மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.

கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டியில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். தற்போது பாப்பாப்பட்டி கிராமம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய ஊராட்சி மன்றங்களில் ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட காரணத்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. அதனால், மேற்கண்ட ஊராட்சிகளில் 2006ஆம் ஆண்டில் தேர்தலை நடத்தி ஆக வேண்டும் என்பதில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மிகவும் உறுதியாக இருந்தார். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தார். பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, மேற்கண்ட ஊராட்சிகளில் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார் என்பது வரலாறு.

இந்த நிலையில், தற்போது நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக பரப்புரையில் ஈடுபட்டு வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “உள்ளாட்சித் தேர்தலை திமுக சரிவர நடத்தாது” என்று கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

“தேர்தலே நடைபெறாமல் இருந்த, சட்டம் ஒழுங்குக்கு பாதகமாக இருந்த ஊராட்சிகளில் அமைதியாகத் தேர்தலை நடத்தி ஜனநாயக கடமையாற்றியது திமுக அரசு” என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கும் வகையிலேயே பாப்பாப்பட்டியை முதல்வர் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

வியாழன் 30 செப் 2021