மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

சேலம் சர்வதேச அளவில் உயர்த்தப்படும்: முதல்வர் ஸ்டாலின்

சேலம் சர்வதேச அளவில் உயர்த்தப்படும்: முதல்வர் ஸ்டாலின்

ஜவ்வரிசி உற்பத்தியில் பெயர்பெற்று விளங்கும் சேலம் மாவட்டத்தைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 29) சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து வாழப்பாடி சென்ற அவர், வாழப்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் 1750 மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்து, பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு 24 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த மருத்துவ முகாம்களில் கண், பல், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், இருதய நோய்கள், சிறுநீரக கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மனநல மருத்துவம், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம், புற்றுநோய் மருத்துவம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டடத்தைத் திறந்து வைத்தார். மேலும் 28 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பிலான 28 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 23 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான 13 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதன்பின் ஆத்தூரில் உள்ள அதிநவீன ஜவ்வரிசி ஆலையை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். பின்னர் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் மரவள்ளி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

விவசாயிகள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கடந்த 4 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன. மக்களின் கருத்தைக் கேட்டு அவர்களின் உணர்வுகளைப் புரிந்து இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவில் வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன் விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரையும் மாவட்டம் மாவட்டமாகச் சென்று சந்தித்துக் கலந்து பேசி அதற்குப் பின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் மரவள்ளி விவசாயிகளின் கோரிக்கைகள் கேட்டு அவை நிறைவேற்றித் தரப்படும்.

ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கு புதிய சேமிப்பு கிடங்கு, ஜவ்வரிசியை உணவுப் பொருளாகப் பயன்படுத்துவது தொடர்பாகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ஜவ்வரிசியில் கலப்படத்தைத் தடுக்க குழு அமைக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய, அவர் கடந்த 4 மாதங்களில் தமிழகத்தின் தொழில்துறை புத்துணர்வு அடைந்துள்ளது. தெற்காசியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாகத் தமிழகத்தை மாற்றிடும் வகையில் புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் முதல் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. இதில் 17,149 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதைத்தொடர்ந்து ‘ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு’ என்று இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 25 தொழில் திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன் மூலம் 42,145 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

1.93 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனை முதலிடத்தில் கொண்டு வருவதுதான் தமிழக அரசின் இலக்கு. திருப்பூர், கரூர், மதுரை கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்படும். நகரம் -கிராமம், பெருந்தொழில் -சிறுதொழில் என எந்தவித பேதமும் இன்றி தொழில் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே ஜவ்வரிசி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சேலம் மாவட்டத்தைச் சர்வதேச தரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த அரசின் குறிக்கோள். இதற்காக விவசாயிகள் விதை உற்பத்தியாளர்கள் ஆகியோரின் நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்தார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

புதன் 29 செப் 2021