மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் குற்றவாளி : தீர்ப்பு!

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் குற்றவாளி : தீர்ப்பு!

கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் எனச் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 29) தீர்ப்பளித்தது.

கடந்த 1991 -1996 அதிமுக ஆட்சியின் போது இலவச வேஷ்டி, சேலை, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச செருப்பு வழங்கியதில் முறைகேடு செய்ததாக இந்திரகுமாரி மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் அப்போதைய சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்திரகுமாரி மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 1997ஆம் ஆண்டு சமூக நலத்துறையின் செயலாளராக இருந்த லட்சுமி பிரானேஷ் , இந்திரகுமாரி உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்தார்.

புகார் மனுவில், மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி நடத்துவதாகக் கூறி இந்திர குமாரியின் கணவர் பாபு அரசு பணத்தில் ரூ.15.45 லட்சம் முறைகேடு செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, சமூக நலத் துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் சண்முகம். இந்திரகுமாரியின் கணவரும், வழக்கறிஞருமான பாபு, இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில், ‘ஊழல் செய்யும் நோக்கத்தில் 1991-96ஆம் ஆண்டுகளில் பாபுவை நிர்வாக அறங்காவலராக ஏற்படுத்தி ‘மெர்சி மதர் இந்தியா’ என்ற அறக்கட்டளையும் ‘பரணி சுவாதி’ என்ற பெயரில் கல்வி அறக்கட்டளையும் தொடங்கி அரசிடம் பணம் பெற்றனர்.

இதில், காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறி அரசுப் பணத்தில் ரூ.15.45லட்சம் மோசடி செய்துள்ளனர். இந்திரகுமாரி, கிருபாகரன், சண்முகம் ஆகியோர் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளனர். இவர்கள் செய்த ஊழலுக்கு பாபு, வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் உடந்தை.

இவர்கள் அனைவரையும் இந்திய தண்டனைச்சட்டம், ஊழல் தடுப்புச்சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் தண்டிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் சமயத்தில் சமூக அறக்கட்டளைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரியாகத் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதவி வகித்ததால், இவ்வழக்கில் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் சாட்சியம் அளித்தார்.

இவ்வழக்கில் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று நீதிபதி அலிசியா தீர்ப்பளித்தார். இவர்கள் இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில், வெங்கடகிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

-பிரியா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

புதன் 29 செப் 2021