மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

செவிலியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போலீசார்!

செவிலியர்களை  வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போலீசார்!

பணி நிரந்தரம் கோரி டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகக் கடந்த ஆட்சியில் மூன்று கட்டங்களாகத் தற்காலிக அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். 2019ம் ஆண்டு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் (எம்.ஆர்.பி) மூலம் நடத்தப்பட்ட தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் இரண்டாம் கட்டமாகப் பணி நியமனம் செய்யப்பட்ட 3,485 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கக் கோரி நேற்று காலை முதல் டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த 800க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிக அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்ட செவிலியர்களுக்கு மாத ஊதியம் 14 ஆயிரத்துடன் தங்கும் இடம், உணவு இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது சில மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த செவிலியர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.

பின்னர் செவிலியர் சங்க நிர்வாகிகளுடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இந்நிலையில் நேற்று இரவு போராட்ட களத்துக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் செவிலியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது 5 செவிலியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே சில செவிலியர்கள் நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

முன்னதாக செவிலியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார்.

அதுபோன்று செவிலியர்களை போலீசார் குண்டுகட்டாக வெளியேற்றும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதால் அவர்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து வரும் அக்டோபர் 4ஆம் தேதி, செவிலியர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் மருத்துவ மற்றும் கிராம சுகாதார சேவை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

புதன் 29 செப் 2021