மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன?: ஜெயக்குமார்

என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன?: ஜெயக்குமார்

நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் 202 வாக்குறுதிகளைப் பட்டியிலிட்டு காட்ட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று (செப்டம்பர் 27) சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலையில் கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்துக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா.பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “சின்ன பசங்க சொப்பு சாமான் வைத்து விளையாடும்போது ஆசை, தோசை, அப்பள வடை என்று சொல்வார்கள். அதுபோல்தான் இன்றைக்கு தேர்தல் வாக்குறுதிகள் ஆகிவிட்டன. மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000, முதியோர்களுக்கான உதவித் தொகை உயர்வு, கல்விக்கடன் ரத்து மற்றும் சிலிண்டர் மானியம் ரூ.100 ஆகிய மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நகைக்கடன் தள்ளுபடிக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக குழு அமைத்து கண் துடைப்புக்கான வேலையை நடத்தி வருகிறது. கடலில் கரைத்த பெருங்காயம் போன்று அந்தோ கோவிந்தா தான். அதனுடன் அதை மறந்துவிட வேண்டியதுதான்.

பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். மக்கள் எதை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்களோ, அதை நிறைவேற்றவில்லை. சும்மா 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக தங்கம் தென்னரசு வாய்கிழிய பேசுகிறார். நிறைவேற்றப்பட்டதாகச் சொல்லும் 202 வாக்குறுதிகள் என்னென்ன என்று திமுக அரசு பட்டியலிட வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் தீர்மானம் கொண்டுவந்தால் அயோக்கியதனம். அதுவே அவர்கள் கொண்டுவந்தால் நல்லதா?” என்று கேள்வி எழுப்பியவர்,

“ஆட்சிக்கு வந்தவுடனேயே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள். அதனால் மாணவர்கள் படிக்காமல் இருந்தனர். நீட் தேர்வும் நடந்தது, மூன்று மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு திமுக அரசுதான் முழு பொறுப்பு” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் தொடரும் கொலைகள், ரவுடிகளின் கைது, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதைக் காட்டுகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைதி தவழும் மாநிலமாக இருந்த தமிழ்நாடு, தற்போது சீர்கெட்டு விட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மக்கள் பிரச்சினைகளை என்னுடைய அறைக்கே வந்து தெரிவிக்கலாம் என்று முதல்வர் தேர்தல் நேரத்தில் கூறினார்.

இன்று உங்களால் அப்படி போக முடியுமா? புகார் தெரிவிக்க வருபவர்கள் முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளிக்கும் நிலைதான் உள்ளது. இதுதான் திமுக ஆட்சியின் அவல நிலை. கடந்த ஐந்து மாதங்களாக மக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்” என்று கூறினார்.

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து தற்போதுவரை 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்று கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி வீடியோ மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

செவ்வாய் 28 செப் 2021