மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

தமிழ்நாடு ஹோட்டல்கள் நவீனமயமாக்கப்படும்: அமைச்சர் மதிவேந்தன்

தமிழ்நாடு ஹோட்டல்கள் நவீனமயமாக்கப்படும்: அமைச்சர் மதிவேந்தன்

சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், பராமரிப்பில்லாத தமிழ்நாடு ஹோட்டல்களை ஆய்வு செய்து அதன் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நாளையொட்டி, 'தமிழகத்தைக் கண்டு மகிழ்வோம்' என்ற நிகழ்ச்சி, சென்னை தீவுத்திடலில் நேற்று (செப்டம்பர் 27) தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்மூலம் சமூக ஊடகங்களில் பிரசித்தி பெற்ற 10 பேர், 11 நாள் பயணமாக தமிழகம் முழுதும் உள்ள சுற்றுலா தலங்களைப் பார்வையிட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் செல்லும் வாகனத்தைச் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இக்குழு நேற்று முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ளும்.

இதையடுத்து, சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், 'சுற்றுலாத் துறையில் வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், 'WOW தமிழ்நாடு' என்ற சுற்றுலா தலங்கள் குறித்த சிறப்புகளைத் தெரிவிக்கும் காணொலியையும், தமிழ்நாட்டில் இருக்கும் 75 சுற்றுலா தலங்களுக்கான காணொலிகளையும், தமிழ்நாடு ஹோட்டல்களை தனியார் செயலி மூலம் பதிவு செய்வதற்கான வசதியையும் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் மதிவேந்தன், “உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டப் பேரவையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு 30 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் இரண்டு அறிவிப்புகள் இங்கு தொடங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து படிப்படியாக அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும்.

கொரோனா தொற்றினால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலாத் துறை மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. அதை மேம்படுத்துவதற்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில் மக்களின் உயிரும் முக்கியம். அதனால் அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் சுற்றுலா தலங்களில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் சில தமிழ்நாடு ஹோட்டல்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. அவற்றை ஆய்வு செய்து படிப்படியாக அனைத்து ஹோட்டல்களையும் தரம் உயர்த்தவும், தற்போதைய காலத்துக்கு ஏற்ப புதுமைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிதாக தமிழ்நாடு ஹோட்டல்களைத் தொடங்க திட்டம் இல்லை.

சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எந்தெந்த இடங்களில் தனியார் பங்களிப்புடன் பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். சுற்றுலா தலங்களில் மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என்று கூறினார்.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

செவ்வாய் 28 செப் 2021