மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்படும் சுகாதார மாவட்டங்களை சுட்டிக்காட்டியும் மோசமாக செயல்படும் சுகாதார மாவட்டங்களை சுட்டிக்காட்டியும் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று (செப்டம்பர் 28) காலை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக்கவும் இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் ஏற்கனவே தனது அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் தலைமைச் செயலாளர் வெளியிட்ட இந்தப் பட்டியலானது அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த தரவரிசைப் பட்டியலாகவும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மோசமாக செயல்பட்டிருக்கும் சுகாதார மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்களின் பட்டியலை மின்னம்பலத்தின் மதியம் ஒரு மணி பதிப்பில் பார்த்தோம்.

தலைமைச் செயலாளர் வெளியிட்ட பட்டியலில் சில சுவாரஸ்யங்களும் உள்ளன.

மிகச் சிறப்பு (EXCELLENT) என அவர் தரவரிசைப் படுத்தியுள்ள முதல் சுகாதார மாவட்டம் கோயம்புத்தூர். இம்மாவட்டத்திலிருந்து திமுகவின் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட வெற்றி பெறாத நிலையில்... கோவை மாவட்டத்துக்கு போதிய தடுப்பூசிகளை திமுக அரசு அனுப்பவில்லை என பாஜகவும் அதிமுகவும் ஏற்கனவே குற்றம்சாட்டி வந்தன. அதை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் கோவை மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார். இந்த நிலையில்தான் தடுப்பூசிகள் செலுத்தும் பணியில் கோவை முதலிடத்தில் இருப்பதாக தலைமைச் செயலாளரின் பட்டியல் தெரிவித்துள்ளது.

அதேபோல இரண்டாவதாக இருக்கிறது தேனி. இந்த மாவட்டத்திலும் திமுகவுக்கு அமைச்சர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக திண்டுக்கல் இடம்பெற்றுள்ளது. சீனியர் அமைச்சரான ஐ பெரியசாமி தனது திண்டுக்கல் மாவட்டத்தோடு அருகில் இருக்கும் தேனி மாவட்டத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அவ்வப்போது விசாரித்து முடுக்கிவிட்டுள்ளார். நான்காவதாக மனோ தங்கராஜ் பிரதிநிதித்துவம் வகிக்கும் கன்னியாகுமரி மாவட்டம் இடம் பிடித்துள்ளது.

எக்ஸலண்ட் என்ற பட்டியலில் இந்த நான்கு மாவட்டங்கள் மட்டுமே இடம் பிடித்திருக்க மிகவும் சிறப்பு என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளது திருச்சி. கே. என். நேரு, அன்பில் மகேஷ் என்ற தலைமைக்கு நெருக்கமான இரு முக்கிய அமைச்சர்கள் இடம்பெற்றிருக்கும் திருச்சி VERY GOOD என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளது .

இதேபோல முத்துசாமியின் ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் சாமிநாதனின் திருப்பூர் மாவட்டம், ஆவடி நாசர் பிரநிதித்துவப்படுத்தும் திருவள்ளூர் மாவட்டம் ஆகியவை மிகச்சிறப்பு என்ற பட்டியலை தலைமைச் செயலாளரிடம் இருந்து பெற்றுள்ளன.

இதையடுத்த நிலையில் GOOD என்ற நிலையில் 6 சுகாதார மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரூர், நாமக்கல், காஞ்சிபுரம், சென்னை, நீலகிரி, கோவில்பட்டி ஆகிய சுகாதார மாவட்டங்கள் GOOD என்ற பட்டியலில் உள்ளன.

செந்தில்பாலாஜி, மதிவேந்தன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, இளித்துறை ராமச்சந்திரன், கீதாஜீவன் ஆகிய அமைச்சர்கள் இந்த மாவட்டங்களில் உழைத்த உழைப்புக்காக தலைமைச் செயலாளரிடம் GOOD வாங்கியுள்ளனர்.

சுகாதார மாவட்டங்களின் அடிப்படையிலேயே இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால் சில அமைச்சர்கள் தங்களின் மாவட்டத்துக்குள் வெவ்வேறு மதிப்பீடுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்களையடுத்து, பத்து சுகாதார மாவட்டங்கள் திருப்திகரம் என்றும், அதைத் தாண்டி எட்டு சுகாதார மாவட்டங்கள் கவனம் தேவை என்றும் தரவரிசைக் குறிப்புகளைப் பெற்றுள்ளன. அவர்களை நாளை காலை 7 மணிப் பதிப்பில் காணலாம்

-வேந்தன்

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலினின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

செவ்வாய் 28 செப் 2021