மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

ருத்ர தாண்டவம்: ராஜாவைப் புறக்கணிப்பார்களா ஊடகத்தினர்?

ருத்ர தாண்டவம்:  ராஜாவைப்  புறக்கணிப்பார்களா ஊடகத்தினர்?

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டதைப் போல ருத்ர தாண்டவம் பட டீம், பாஜக புள்ளி எச்.ராஜாவை படம் பார்க்க அழைத்து ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் பகைத்துக் கொண்டுவிட்டது.

அக்டோபர் 1 அன்று ரிச்சர்ட், புதுமுகம் தர்ஷாகுப்தா, கௌதம்மேனன், ராதா ரவி,தம்பிராமைய்யா நடித்துள்ள ருத்ரதாண்டவம் திரைப்படம் வெளியாக உள்ளது. வண்ணாரப்பேட்டை, திரெளபதி படங்களை இயக்கிய மோகன் ஜீ இப்படத்தை இயக்கி முதல் பிரதி அடிப்படையில் சேலம் 7G சிவாவுக்காக தயாரித்துள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது முதல் ஆதரவு மற்றும் எதிர்மறையான பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகமாக காணப்படுகின்றன.

“கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் என்னிடம் கூறிய சம்பவத்தை மையக்கருவாக கொண்டே இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. போலித்தனமான மதவாதிகளை பற்றிய படம்” என இயக்குநர் மோகன்ஜீ பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய பின் இப்படம் இந்துக்களுக்கு ஆதரவானதா என்கிற விவாதம் தொடங்கியது.

எச்.ராஜா படத்திற்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்தை வெளியிட்டார். இது எரிகிற தீயில் எண்ணை ஊற்றிய கதையாக ருத்ரதாண்டவம் படம் பற்றிய விவாதத்தை விஸ்வரூபம் எடுக்க செய்துவிட்டது.

இந்த நிலையில் அரசியல் கட்சி, மத தலைவர்களுக்கு படத்தை திரையிட தயாரிப்பாளர் சேலம் 7G சிவா ஏற்பாடு செய்தார். அதன் ஒரு பகுதியாக நேற்று காலை எச். ராஜா, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோருக்கு படம் திரையிடப்பட்டது. மாலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ருத்ரதாண்டவம் படத்தை பிரத்யோகமாக பார்த்துள்ளார்.

பிரசாத் பிரிவியூ தியேட்டரில் படம் பார்த்து முடித்த எச்.ராஜா அங்கேயே பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. என்ன நோக்கத்திற்காக தயாரிப்பாளர் படத்தை திரையிட்டாரோ அதனை சிதைத்து சின்னாபின்னமாக்கி படத்திற்கு எதிரான மனோநிலையை பத்திரிகையாளர்களிடம் ஏற்படுத்தியுள்ளார் எச்.ராஜா. எல்லோருக்கும் பொதுவான படமாக எடுக்கப்பட்ட ருத்ரதாண்டவம் படத்தை இந்துக்களுக்கான படமாக உருவகப்படுத்தியுள்ளார் எச்.ராஜா

செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜா பேசும்போது, , “இந்த படத்தில் (ருத்ரதாண்டவம்) 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களின் காதல், செயற்கை கருத்தரிப்பு மையங்கள், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இப்படம் கிறிஸ்தவர்களை பெருமைப்படுத்தி இருக்கிறது. கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தவில்லை.

உங்க எல்லாருக்கும் தமிழ் முழுசா தெரியுமா? தமிழ் தெரியுமாங்கிறேன் நான்.. தமிழ் மொழி வாழ்கன்னு யார் யாரெல்லாம் சொல்றாங்களோ அவர்களுக்கு தமிழின் சிறப்பு தெரியுமா? இந்துவும் தமிழரும் வெவ்வேறுன்னு சொன்னது யாரு? இந்து இல்லைன்னா தமிழ் எங்கய்யா வந்தது? என்ன பேசுறீங்க எல்லாரும்? யூ ஆல் மீடியா பீப்பிள் பிரெஸ்ட்டிடியூட்ஸ். தமிழ் வேற இந்து வேறன்னு பேசக்கூடிய அளவுக்கு நீங்க வேணும்னே மத மாற்றத்துக்கு துணை போக வேண்டாம்னு உங்களை கேட்டுக்கிறேன்” என்று ஒட்டுமொத்தமாக எல்லா பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தினார் ராஜா.

அதுமட்டுமல்ல... “ சீமானின் அம்மா முதலில் தமிழச்சியா? சொல்லுங்க சார்.. அந்தம்மா தமிழா? இல்லை. அவர் ஒரு மலையாளி.. அப்புறம் என்ன பேசுறீங்க? என்னை பீகாரிங்கிறான் ஒரு முட்டாள்... நான் பச்ச தஞ்சாவூரான்...அதனால இந்த தமிழ் இந்து எல்லாம் தயவு பண்ணி பேசாதீங்க”என்றார்.

அடுத்து சுப.வீரபாண்டியனையும் விட்டுவைக்கவில்லை. “ சுப.வீரபாண்டியன் மூளை டஸ்ட்பின்னா போச்சு. ஆரியர் படையெடுப்பா? ஆரியன் எங்க வந்தான்? என்ன ஆதாரம் இருக்கு? யாராவது ஒருத்தர் சொல்லுங்க பார்ப்போம்.. அதனால பொய்யை பரப்பாதீர்கள். அதற்கு துணை போகாதீங்க.. சுப.வீரபாண்டியனே அறிவாலயத்தில வாசலில் உட்கார்ந்திருக்கிற பிச்சைக்காரன். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் என்னிக்கு மோதல்? கால்டுவெல் வந்த பிறகு பொய்யை பரப்புகிறார்கள்.. ஆரியர்கள் படையெடுப்பு என்கிற கட்டுக்கதைக்கு சரியான இடம் குப்பைத் தொட்டி” என்று ருத்ரதாண்டவம் பிரஸ்மீட்டில் சம்பந்தம் இல்லாத வகையிலெல்லாம் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார் ராஜா.

எச்.ராஜாவின் இந்தக் கருத்துக்கு சுப வீரபாண்டியன் பதில் அளிக்கையில், “கடந்த 12 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், நான் மதிக்கும் தோழர் மணியரசன், எனக்கு "அறிவாலயத்தின் ஒட்டுத்திண்ணைக் குடியிருப்பாளர்" என்று ஓர் இலவசப் பட்டம் வழங்கினார். நேற்று எச்..ராஜா, இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு நேர்காணலில், ‘சுப. வீரபாண்டியன், அறிவாலயத்தில் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரன் ‘ என்று கூறியுள்ளார். எச். ராஜா என் மீது கோபப்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. நான் பார்ப்பனியத்தைக் கடுமையாகச் சாடுகிறேன். சாதி ஒழிப்பை, பாலினச் சமத்துவத்தைப் பெரியார் வழிநின்று ஆதரிக்கிறேன். எனவே அவர் என்மீது சினம் கொள்வது இயற்கையானதே! தொடர்ந்து நடைபெறும் திராவிடப் பள்ளியும், புதிதாக இளைஞர்களைத் திராவிடக் கருத்தியல் நோக்கி அழைத்து வருவதும் காரணங்களாக இருக்குமோ?” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் பற்றிய ஹெச்.ராஜாவின் கருத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச்செயலாளர் பாரதிதமிழன் இன்று (செப்டம்பர் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“செய்தியாளர்களைச் சந்திக்கும் பல சந்தர்ப்பங்களில், வாய்க்கு வந்தபடி வசவுச் சொற்களைப் பண்பாடு இன்றிப் பயன்படுத்தி வருகிறார் பாஜக பிரமுகர் எச்.ராஜா. நேற்றைய தினம் (27-09-2021 ) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிகழ்வில் எச்.ராஜா, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம். ஆனால், நிதானம் தவறி , Presstitute - ஊடக வேசிகள் எனத் தரம் தாழ்ந்து ஏசியுள்ளார். எச்.ராஜாவின் இந்த அநாகரிகப் பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கின்றது. எச்.ராஜா மட்டுமல்ல வேறு சிலரும் , செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது அவதூறு , நேர்மையற்ற விமர்சனங்கள், அநாகரிகச் சொற்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது கண்டிக்க மட்டுமல்ல தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

எச்.ராஜாவின் இதுபோன்ற பேச்சுகளை பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பது, அவர்கள் எச்.ராஜாவின் இவ்விமர்சனங்களை ஏற்கிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பொதுவெளியில் இத்தகைய ஆபாச விமர்சனங்களைச் செய்துவரும் எச்.ராஜா மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். தொடர்ந்து ஊடகத்துறையினர் மீது தொடுக்கப்படும் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த ஊடக நிர்வாகிகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியது மிக அவசியம்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ராஜாவின் பிரஸ்மீட்டுகளை ஊடகத்தினர் இனி புறக்கணிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் ஊடகத்தினர் மத்தியில் அதிகமான நிலையில்தான், “இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த ஊடக நிர்வாகிகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியது மிக அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார் பாரதி தமிழன்.

-இராமானுஜம்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 28 செப் 2021