மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

காவல் அருங்காட்சியகம்: சிறப்புகள் என்ன?

காவல் அருங்காட்சியகம்: சிறப்புகள் என்ன?

கோவையைத் தொடர்ந்து சென்னையில் இன்று (செப்டம்பர் 28) காவல் அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள 178 ஆண்டுகள் பழைமையான கட்டிடத்தை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரு தளங்களுடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

இதனைப் பொதுமக்கள் பார்வைக்காக இன்று (செப்டம்பர் 28) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோயம்புத்தூரில் காவலர்கள் அருங்காட்சியகம் உள்ள நிலையில், தமிழகத்தில் இரண்டாவதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய அருங்காட்சியகத்தில் காவல்துறையின் முக்கிய வரலாற்று ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.

6 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தின் தரை தளத்தில், காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், சீருடைகள், வாத்திய இசைக் கருவிகள், காவல் துறையின் சாதனைகள், காவல் துறையால் மீட்டெடுக்கப்பட்ட சிலைகள், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வெடிகுண்டுகள், குண்டுகளைக் கண்டெடுக்க உதவும் கருவிகள், மாதிரி சிறைச்சாலை ஆகியவையும்,

முதல் தளத்தில், அன்று முதல் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு மற்றும் பயன்படுத்தி வரும் துப்பாக்கிகள், வாள்கள், தோட்டாக்கள் ஆகியவையும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், காவல் துறையில் சிறப்பாகப் பணி செய்த காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை வழங்கப்பட்டு வரும் மாதிரி பதக்கங்களும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல்துறை தொடர்பான அக்காலத்தில் இயற்றப்பட்ட அதிமுக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயர் காலத்துக் காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழகக் காவல்துறையின் தொடக்கக் கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய் படைகளின் புகைப்படங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தித் தொகுப்புகள், காவல் ஆணையாளர் அலுவலக அறையில் உள்ள அரிய பழம்பொருட்கள், அணிவகுப்பு சின்னங்கள், கம்பியில்லா தொலைத்தொடர்புக் கருவிகள், காவல்துறை சேவை பதக்கங்கள், கலைப்பொருட்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

அருங்காட்சியகத்தில், கூடுதல் வசதிகளாகக் கண்காணிப்பு கேமரா, தீ தடுப்பு சாதனங்கள், குடிநீர் வசதி, மழை நீர் சேகரிப்பு வசதி, சிற்றுண்டியகம், நுழைவுச் சீட்டு வழங்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட வந்த பள்ளி மாணவ, மாணவியர்களிடம் முதல்வர் கலந்துரையாடி, இனிப்புகளை வழங்கினார்.

பொதுமக்கள் அனைவரும் 30.9.2021 வரை எவ்விதக் கட்டணமுமின்றி அருங்காட்சியகத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு அனுமதிக் கட்டணம் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 28 செப் 2021