மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

சீரழியும் சிறுவர்களை நல்வழிப்படுத்துவதே முதன்மை கடமை: ராமதாஸ்

சீரழியும் சிறுவர்களை நல்வழிப்படுத்துவதே முதன்மை கடமை: ராமதாஸ்

சிறுவர்கள் தவறான பாதையில் பயணிப்பதைத் தடுத்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய அரசும், சமுதாயமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலைக் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டியிருந்தது.

இதுகுறித்து இன்று(செப்டம்பர் 27) பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது என்ற தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இது அரசும், மக்களும் எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல.

2016ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 1603 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 48 கொலைகளில் சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். அடுத்த 4 ஆண்டுகளில் கொலைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை என்றாலும், சிறுவர்கள் கொலைக்குற்றங்களில் ஈடுபடும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இவை மிகவும் கவலையளிக்கக்கூடியவை ஆகும்.

கொலைக்குற்றங்கள் மட்டுமின்றி பிற குற்றங்களிலும் சிறுவர்கள் ஈடுபடுவது பெருகி வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம்; அவர்களைத் தான் இந்தியாவை வல்லரசாக்கக் கூடியவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அனைத்திலும் சிறந்தவர்களாக வளர வேண்டிய அவர்கள், கொலை, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிக்கி சீரழிவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களை நல்வழிப்படுத்துவதே நமது முதன்மைக் கடமையாகும்.

எந்தக் குழந்தையும் பிறக்கும்போது தீயவர்களாகவோ, குற்றச் செயல்களை செய்பவர்களாகவோ பிறப்பதில்லை.குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் சிறுவர்களை மூளைச்சலவை செய்து திருட்டு முதல் கொலை, கொள்ளை வரை அனைத்துக் குற்றங்களையும் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். தொடக்கத்தில் குற்றங்களை செய்கிறோம் என்பது தெரியாமல் செய்யும் பல சிறுவர்கள், பின்னர் தொழில்முறை குற்றவாளிகளாக மாறி விடுகின்றனர்.

பதினெட்டு வயதுக்கு குறைவான சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை குறைவு என்பதால், சமூகவிரோதிகள் சிறுவர்களைப் பயன்படுத்திக் கொள்வது, ஏழைச் சிறுவர்கள் செல்பேசி உள்ளிட்ட தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது, அவற்றை வாங்கித் தருவதாக ஆசை காட்டி சிறுவர்களை குற்றச் செயல்களில் சிலர் ஈடுபடுத்துவது, மது, கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களும் தடையின்றி கிடைப்பது போன்றவை தான் சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு மிக முக்கியக் காரணமாகும். இந்த தீய வாய்ப்புகள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

இளம் தளிர்கள் வளரும் போதே களைகளாக மாறுவது வேதனையளிக்கும் விஷயமாகும். இதற்கான காரணங்கள் என்னென்னவென்று கண்டுபிடித்து அவற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் நடவடிக்கையாக அனைவருக்கும் பட்டப்படிப்பு வரை தரமான, சுகமான, சுமையற்ற, ஒழுக்க நெறிகள் மற்றும் விளையாட்டுடன் கூடிய கல்வி கட்டாயமாகவும், இலவசமாகவும் வழங்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும். குறிப்பாக, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடம் அன்பு காட்டி அரவணைப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் தவறான வழியில் திசைமாறிச் செல்லாமல் தடுப்பது பெற்றோர்களால் மட்டுமே சாத்தியமாகும்.

சென்னையில் காவல்துறையினரால் நடத்தப்படும் காவல் சிறார் மன்றங்கள் சிறுவர்களை நல்வழிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதை மறுக்க முடியாது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இத்தகைய பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பதிலாக குறைந்து வருகிறது. இத்தகைய பள்ளிகள் அதிகரிக்கப்படுவதுடன், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சிறுவர்களுக்கு விளையாட்டு மற்றும் அவர்களுக்கு இயல்பாக உள்ள கல்வி மற்றும் கலை சார்ந்த திறமைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர்கள் தவறான பாதையில் பயணிப்பதைத் தடுத்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய அரசும், சமுதாயமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 28 செப் 2021