மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

ஜனவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இடியாப்ப சிக்கலில் திமுக‌

ஜனவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இடியாப்ப சிக்கலில் திமுக‌

தமிழ்நாட்டில் 2019இல் தேர்தல் நடந்தது போக, மீதமிருந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் வரும் அக்டோபர் 6, 9 தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில்... நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. அந்தக் கேள்விக்கு உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 ஆம் தேதி பதில் அளித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் ஏழு மாத அவகாசம் கேட்டு மனு செய்திருந்தது. அந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 20 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி இருந்தார்.

எடுத்த எடுப்பிலேயே தலைமை நீதிபதி, "தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு என்னாயிற்று? ஏற்கனவே உங்களுக்கு மூன்று முறைக்கு மேல் அவகாசம் கொடுத்தாயிற்று. இன்னமும் எதற்காக தேர்தல் நடத்தாமல் இழுத்தடிக்கிறீர்கள்?" என்று கோபமாகக் கேட்டார்.

அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "நீதிபதி அவர்கள் இந்த மனுவை பொறுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். எங்களுக்கு 7 மாத அவகாசம் கூட வேண்டாம். அதில் பாதி அளவாக மூன்று முதல் 4 மாத அவகாசம் கூட போதுமானது. அதற்குள் நாங்கள் நகராட்சி தேர்தலை நடத்தி முடித்து விடுகிறோம்" என்று கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி, "சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களை எல்லாம் சரியான நேரத்தில் நடத்த முடிகிறபோது உள்ளாட்சித் தேர்தல்களை மட்டும் ஏன் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்த முடியவில்லை? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய பிரமாண பத்திரத்தை இன்னும் இரண்டு நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இனிமேலும் அவகாசம் கோராமல் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும்" என்று கண்டிப்பான குரலில் உத்தரவிட்டார்.

அதன்படியே தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நகராட்சி மாநகராட்சி தேர்தல் நடத்துவதற்கான புதிய பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அபிடவிட்டில், “தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு குறைந்தது நான்கு மாத கால அவகாசமாவது வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பெங்களூருவில் இருந்து கொண்டுவரவேண்டும். மேலும் தமிழ்நாடு புதிய நகராட்சிகள், மாநகராட்சிகளை அறிவித்துள்ளது. அவற்றுக்கான வார்டு வரையறைகள், இட ஒதுக்கீடு பணிகளை முடிக்க வேண்டும். அதனால்தான் ஏழு மாத அவகாசம் கேட்டிருந்தோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், “தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்திட அவகாசம் அளிக்கலாம். அதில் அரசுக்கு ஆட்சேபணை இல்லை” என்று தெரிவித்தார். இதையடுத்து, “அப்போது, நீங்களே விரைவில் நடத்த வேண்டும் என்று முன்பு கூறினீர்கள். இப்பொழுது நீங்களே அவகாசம் அளிக்கலாம் என்று சொல்கிறீர்கள்” என கடிந்து கொண்ட தலைமை நீதிபதி, “தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு வரும் ஏப்ரல் 2022 வரை அவகாசம் கேட்டிருந்தது. மழைக்காலம், கொரோனா தொற்றில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகள்,மாநகராட்சிகளுக்கு வார்டு சீரமைப்பு, இட ஒதுக்கீடு செய்ய வேண்டியமை உள்ளிட்ட காரணங்களை காட்டி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டது. ஆனால் இவையெல்லாம் உரிய காரணங்கள் இல்லை. (silly reasons) எனவே நான்கு மாத கால அவகாசம் மட்டுமே தருகிறோம். அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பேரூராட்சி நகராட்சி மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியது கட்டாயமாகி இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி நான்கு மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவதில் இடியாப்ப சிக்கல் காத்திருக்கிறது என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில்.

எப்படி இடியாப்ப சிக்கல்?

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அத்துறை அமைச்சர் கே.என் நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதாவது தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று நேரு அறிவித்தார். தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்படும். மேலும் காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனை சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார் நேரு.

இதன் மூலம் தமிழகத்தில் மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநகராட்சிகள் மட்டுமல்ல... புதிய நகராட்சிகளையும் அறிவித்தார் அமைச்சர் நேரு.

பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம்- கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோழிங்கர், இடங்கனசாலை, தாரமங்கலம், திருமுருகன் பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, லால்குடி ஆகிய பேரூராட்சிகள் அதன் அருகே வளர்ச்சியடைந்த ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும் என்று அறிவித்தார் அமைச்சர் நேரு.

மேலும் புஞ்சை புகளூர் மற்றும் டி.என்.பி.எல். புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன சிக்கல் என்றால் உதாரணத்துக்கு... இப்போது தாம்பரம் நகராட்சியுடன் 15 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகளை இணைத்து புதிய தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் முன்பே இப்போது நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தாம்பரம் மாநகராட்சியோடு சேர்க்கப்பட இருக்கும் பகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்படியெனில் நாங்கள் மாநகராட்சியா, நகராட்சியா, ஊராட்சியா என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது. இதேபோல கேள்வி பல மாவட்டங்களிலும் இருக்கிறது.

"தரம் உயர்த்தப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும்போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளில் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவர்களது பதவிக் காலம் முடியும் வரை அப்பதவிகளிலேயே தொடர்வார்கள். பதவிக் காலம் முடிவடையும்போது, இணைக்கப்படும் பகுதிகள் புதிதாக உருவாக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் நகராட்சி அல்லது மாநகராட்சியின் முழுமையான ஆளுகைக்குள் அடங்கும்" என்று அமைச்சர் நேரு ஏற்கனவே விளக்கம் அளித்தபோதும் இதை மக்கள் ஏற்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

நடைமுறையில் இது சாத்தியமா என்று இதுகுறித்து ஆங்காங்கே எதிர்ப்புகளும் சலசலப்புகளும் எழுந்து கொண்டிருக்கின்றன. இது நீதிமன்றத்துக்கு சென்றால் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஜனவரி மாதத்தில் நகர்ப்புற தேர்தலை நடத்துவதில் இடியாப்ப சிக்கல் ஏற்படலாம் என்கிறார்கள் அதிகாரிகள்.

கடந்த ஜூன் 25 ஆம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய நகர நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, . “மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் பல இடங்களில் வாக்காளர்கள் எண்ணிக்கை உட்பட பல விஷயங்களை மறு வரையறை செய்ய வேண்டியிருக்கிறது. வார்டுகளில் சிலவற்றில் 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. சில வார்டுகள் 5 ஆயிரம் ஓட்டுகளையே கொண்டுள்ளன. இன்னும் சில வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. இதையெல்லாம் ஒரே சீராக பிரித்து மறு வரையறை செய்த பிறகுதான் நகர் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதேபோல ஆகஸ்டு 8 ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக 9 மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அமைச்சர்கள் அடங்கிய கூட்டத்தை கூட்டினார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின். அந்தக் கூட்டத்தில் பேசிய திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன்,

“நாம் தேர்தலை சந்திக்க வேண்டும், வெற்றிபெற வேண்டும். பல்வேறு இடங்களில் முந்தைய ஆட்சியால் வரையறுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையே இன்னமும் இருக்கிறது. அந்த வரையறைகளை மாற்றணும்”என்று கூற அப்போது குறுக்கிட்ட அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “அதெல்லாம் ஒண்ணும் மாற்ற முடியாது. கோர்ட்டில் அரசு பதிலளித்தபோது என்ன நிலைமையோ அதே நிலைமையில்தான் தேர்தலை நடத்த முடியும். அதனால் இட ஒதுக்கீட்டு சுழற்சி முறையை இப்போ உடனடியாக கொண்டு வரமுடியாது. பழைய முறையிலதான் தேர்தல் நடத்தணும்”என்றார்.

இதைக் குறிப்பிடும் திமுக மாவட்டச் செயலாளர்கள், “இப்போது நடக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலேயே திமுக மாவட்டச் செயலாளர்கள் தாங்கள் கோரியபடி வார்டு வரன்முறை, இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இதேபோன்ற அவசரத்தில் நான்கே மாதங்களில் நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் என்றால் அது தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமல்ல திமுகவுக்கும் தலைவலிதான்” என்கிறார்கள்.

-ஆரா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 28 செப் 2021