மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கடலூர் மக்களவை தொகுதி திமுக எம்.பி.யான டி.ஆர்;வி.ரமேஷின் முந்திரி ஆலை ஊழியர் கோவிந்தராஜ் மர்ம மரண வழக்கு நேற்று (செப்டம்பர் 26) சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் , எம்பியை உடனடியாக கைது செய்யத் துடித்த எஸ்.பி, அவரை மையமாக வைத்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் பற்றிய தகவல்கள் மின்னம்பலத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளன.

பண்ருட்டி தாலுக்கா பணிக்கன்குப்பம் ஊராட்சியில் கெடிலம் ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள திமுக எம்பி டிஆர்வி ரமேஷ் குடும்பத்திற்குச் சொந்தமான முந்திரி கம்பெனியில், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வேலை செய்துவந்தார், அவர் கம்பெனியில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் முந்திரியை திருடியதாக விசாரிக்கப்பட்டுள்ளார். எம்.பி. ரமேஷ் அவரது நிறுவன நிர்வாகிகள் சேர்ந்து கோவிந்தராஜை தாக்கியிருக்கிறார்கள். இந்நிலையில் கோவிந்தராஜ் மரணம் அடைய, “என் தந்தையை எம்.பி.யும் அவரது ஆட்களும் அடித்துக் கொன்று விட்டார்கள்” என்று காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அவரது மகன் செந்தில்வேல்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோவிந்தராஜின் உடல், ஜிப்மர் மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை போலீஸுக்கு வர இருந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் கடலூர் மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது பல புதிய தகவல்கள் கிடைத்தன,

மரணத்துக்கு சில மணி நேரம் முன் போலீஸ் எடுத்த போட்டோ

“செப்டம்பர் 19ஆம் தேதி, இரவு சுமார் 9.45 மணியளவில், கோவிந்தராஜை ரத்தக்காயத்துடன் காடம்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று திருட்டு வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்கள் எம்.பி.யின் ஆட்கள். அப்போது பணியிலிருந்த போலீஸார், ‘இவ்வளவு ரத்தக் காயத்தோடு இருப்பவரை காவல்நிலையத்தில் வைத்திருக்க முடியாது. உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறிவிட்டு கோவிந்தராஜின் அந்த அவலத்தை புகைப்படம் எடுத்துள்ளார்கள். (மரணம் அடைவதற்கு சில மணி நேரங்கள் முன்பு எடுக்கப்பட்ட கோவிந்தராஜின் புகைப்படம் மின்னம்பலத்துக்குக் கிடைத்தது)

ஏன் இவ்வாறு போலீஸார் போட்டோ எடுத்தார்கள் என்றால் அதன் பின்னணி கொடுமையானது.

எம்.பி.ரமேஷின் முந்திரி ஆலையில் இருந்து தொழிலாளிகள் மீது மாதம் தோறும் இப்படித் திருட்டுப் புகார் வரும். , திருடிவிட்டதாகத் தொழிலாளியை அடித்து இழுத்துவருவார்கள், அவர்களைப் போலீசும் மிரட்டி எழுதிவாங்கிஅனுப்பிவிடுவார்கள், அவர்களுக்கும் வேறு வழியில்லாமல் மீண்டும் ரமேஷ் முந்திரி கம்பெனியில் போய் வேலை செய்வார்கள். அந்த வகையில்தான் வழக்கமாக கோவிந்தராஜையும் அடித்து இழுத்துவந்து திருட்டு வழக்கு போடச்சொன்னார்கள். அவரது நிலையைப் பார்த்து அதிர்ந்து போய்தான் போட்டோ எடுத்து வைத்திருக்கிறார்கள் காடம்புலியூர் போலீஸார்.

கோவிந்தராஜ் இறந்துபோன தகவல் தெரிந்ததும் மறுநாள் அவரது மகன் செந்தில் வேல் காடம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் எம்பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்து கொலை செய்துவிட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எம்.பி.யை கைது செய்ய தீவிரம் காட்டிய எஸ்.பி.

எம்.பி. அதுவும் மாநிலத்தின் ஆளுங்கட்சி எம்பி மீதான புகார். அதுவும் கொலைப் புகார் என்பதால் காடாம்புலியூர் காவல்நிலைய போலீஸார் உடனடியாக கடலூர் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசனுக்குத் தகவல் அனுப்பினார்கள். இதையறிந்த எஸ்.பி. சக்தி கணேசன் தனது அடுத்த நிலை அதிகாரிகளை அழைத்து, ‘அது கொலைதான். கொலை வழக்கு பதிவுசெய்து எம்.பி.யைக் கைது செய்யுங்கள்’ என்று கூறியிருக்கிறார். உடனடியாக அது சாத்தியம் இல்லை என்பதால், எம்பி ரமேஷ் தவிர அவரது உதவியாளர் நடராஜன், கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், மேலும் அந்த சம்பவத்தில் தொடர்புள்ள பேர்பெரியாங்குப்பம் சண்முகம், பண்ருட்டியை சேர்ந்த சுந்தராஜன் ஆகிய ஆறுபேரையும் போலீஸ் கஸ்டடிக்கு கொண்டுவாருங்கள் என்று உத்தரவிட்டார் எஸ்பி.

அதன்படி செப்டம்பர் 20 ஆம் தேதி அந்த ஆறுபேரையும் நெய்வேலி பகுதியில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களில் அன் அஃபிசியலாக போலீஸ் கஸ்டடியில் வைத்திருந்தார்கள். இந்தப் பணிக்காக 20 போலீஸாரை நியமித்திருந்தார் எஸ்.பி.

இதற்கிடையே போலீஸ் கஸ்டடியிலிருந்த சண்முகம் மற்றும் சுந்தராஜனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதும் பயந்துபோன போலீஸார் எஸ்பிக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்களை இரண்டு பேரை மட்டும் அனுப்பி வைக்கச் சொன்னவர் மற்ற நான்கு பேரையும் போலீஸ் கஸ்டடியில் பத்திரமாக வைத்திருக்க உத்தரவிட்டார்.

இல்லீகல் கஸ்டடி- எச்சரித்த எம்.பி.

இந்தத் தகவல்களை எல்லாம் போலீஸுக்குள் இருக்கும் தனது நண்பர்கள் மூலமாகவே அறிந்துகொண்ட எம்.பி. போலீஸ் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு, ‘எங்கள் ஆட்களை இல்லீகலாக கஸ்டடியில் வைத்திருக்கிறார் எஸ்.பி. இதெல்லாம் நல்லா இல்லை’ என்று எச்சரித்திருக்கிறார்.

இதையடுத்து வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், சென்னையில் இருக்கும் மேல் அதிகாரிகளை தொடர்புகொண்டு, ’கோவிந்தராஜ் மரணம் சம்பந்தமாக ஐந்து நாட்களாக சிலரை எஸ்.பி. இல்லீகல் கஸ்டடியில் வைத்திருக்கிறார், அவர்களை ரிமாண்ட் காட்டிவிடலாம் இல்லை என்றால் வெளியில் அனுப்பி வைத்துக் கண்காணித்துக்கொள்ளலாம்’ என்று ஆலோசனை கூறியுள்ளார்.

வெளியே அனுப்பப்பட்ட எம்பி ஆட்கள்

உடனே டிஜிபி அலுவலகத்திலிருந்து கடலூர் எஸ்பி சக்தி கணேசனுக்கு சென்ற தகவலில், ’தேவையில்லாமல் இத்தனை நாள் ஏன் கஸ்டடியில் வைத்திருக்கீங்க? யாராவது போட்டோ எடுத்து பிரச்சனை செய்தால் காவல்துறையின் இமேஜ்தான் பாதிக்கும். அதனால அவங்களை விடுங்க’ என்று உத்தரவு தொனித்தது.

அதனால் செப்டம்பர் 25ஆம் தேதி, இரவு கீழ்மட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்ட எஸ்.பி, ‘அந்த நான்கு பேர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுங்க. அவங்க வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டு கண்காணிச்சுக்கிட்டே இருங்க’ என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் மறுநாள் செப்டம்பர் 26 ஆம் தேதி இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடலூர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தீபா, பார்மாலிட்டிகளை முடித்துவிட்டு காடம்புலியூர் காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் மரணம் வழக்கின் கேஸ் கட்டுகளை இன்று (செப்டம்பர் 27) பெற்றுக்கொண்டிருக்கிறார்.

டிஜிபியை சந்தித்த கே.பாலு

இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 27) பாமக செய்தி தொடர்பாளரும், சமூக நீதி பேரவையின் மாநில தலைவருமான வழக்கறிஞர் பாலு, இறந்துபோன கோவிந்தராஜின் மகன் செந்தில்வேலை அழைத்துக்கொண்டு டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்தார்.

“கோவிந்தராஜ் மரண வழக்கை சிபிசிஐடியில் டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ளவர் விசாரிக்கவேண்டும். இன்ஸ்பெக்டர் விசாரிக்கக்கூடாது. மேலும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட எம்பி ரமேஷுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இது வேதனையாக உள்ளது. ரமேஷை உடனடியாக கைதுசெய்யவேண்டும் ” என்ற கோரிக்கை வைத்துள்ளார்.

வெளிநாடு பறக்கும் எம்பி?

திமுக எம்பி ரமேஷை ஓரிரு நாட்களுக்கு முன் தொடர்புகொண்ட திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, ‘நீங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் சொல்லச் சொன்னார்’ என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து பதற்றமாக சென்னைக்குச் சென்ற எம்பி பதவியை ராஜினாமா செய்வது சம்பந்தமாகவும், வழக்கை எதிர் கொள்வதைப்பற்றியும் ஆலோசனைகள் செய்துவருகிறார். சிபிசிஐடி போலீஸார் கைது செய்வார்கள் என்ற தகவல்கள் உறுதியானதால் வெளிநாட்டுக்குப் போவதற்கும் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் எம்.பி. கூடாரத்துக்கு நெருக்கமானவர்கள்.

-வணங்காமுடி

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

திங்கள் 27 செப் 2021