மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

பொதுச்சொத்துகளுக்கு சேதம், இழப்பு: பாமகவுக்கு உத்தரவு!

பொதுச்சொத்துகளுக்கு சேதம், இழப்பு: பாமகவுக்கு உத்தரவு!

மரக்காணம் வன்முறைச் சம்பவத்தில் ஏற்பட்ட இழப்பீட்டை வசூலிப்பது குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு பாமகவுக்கு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2013ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா நடத்தப்பட்டது. அப்போது மரக்காணம் அருகே கட்டையன் தெரு காலனி பேருந்து நிறுத்தத்தில் வன்முறை ஏற்பட்டு அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த வன்முறையின் போது பாமகவினர் கைது செய்யப்பட்டதால், இதனை கண்டித்து 2013 ஏப்ரல் 30ஆம் தேதி கிருஷ்ணகிரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

ராமதாஸ் கைதை தொடர்ந்து பாமகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இது தொடர்பாக அப்போது சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா பொது சொத்துக்களுக்கும் தனியார் சொத்துக்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பு கணக்கிடப்பட்டு 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சொத்து சட்டத்தின்படி பாமகவினரிடமிருந்து, இழப்புக்கான நட்ட ஈடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பாமகவை தடை செய்ய தயங்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

அப்போது முதல்வருக்கு பதிலளித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், மரக்காணம் வன்முறைக்கும் அதன்பின் நடைபெற்ற வன்முறை நிகழ்வுகளுக்கும் பாமக எந்த வகையிலும் பொறுப்பல்ல. பாமகவை தடை செய்வோம் என்ற அளவுக்கு ஆத்திரத்தை முதல்வர் உமிழ்ந்திருக்கிறார். அப்படியானால் பாமகவினர் மீது முதல்வர் ஜெயலலிதா எந்த அளவுக்கு வஞ்சத்தையும், பழிவாங்கும் உணர்ச்சியையும் கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே உதாரணம். ஒரு கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே வன்முறை சம்பவம் காரணமாக 2013 ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அதற்கான இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அக்கட்சி தலைவர் ஜி.கே.மணிக்கு வருவாய் நிர்வாக ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால், இந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி பாமக சார்பில் ஜி.கே. மணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டதாகவும், போக்குவரத்து இயங்காததால் ஏற்பட்ட இழப்பை வசூல் செய்வதாக கூறி அரசியல் உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் போக்குவரத்துத் துறை சார்பில் மொத்தம் 58 பேருந்துகள் சேதம் அடைந்ததாகவும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பொதுச் சொத்து சேதம் விளைவித்தல் சட்டப்படி பொதுச் சொத்துக்களைச் சேதம் ஏற்படுத்தினால் மட்டுமல்ல நிதி இழப்பு ஏற்படுத்தினாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த வன்முறை வழக்கில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் அரசுக்கு ஏற்படுத்திய இழப்பீடு வசூலிக்க எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

இந்த வன்முறையின் போது பல அரசு பேருந்துகள் மட்டுமின்றி டாஸ்மாக் கடைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறிய நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்திய பிறகு இழப்பீடு நிர்ணயிக்கப்படும் என்பதால் அரசு நோட்டீசுக்கு பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீசை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.

வன்முறைச் சம்பவம் தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளிக்கவும், இந்த விசாரணையை 4 மாதத்தில் அரசு முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

“அரசியல் கட்சிகள் தங்கள் கடமைகளை மறந்ததால் தான் இதுபோன்று அரசியல் சாசனத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுகின்றனர். கட்சித் தலைவர்கள் சமூகத்தின் மீதான கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். போராட்டங்களில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் 1992ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போதும் கடந்த 29 ஆண்டுகளாக இந்த சட்டம் திறமையாக அமல்படுத்தப்படவில்லை.. இந்த சட்டத்தின் அடிப்படையில் எத்தனை பேரிடம் இழப்பீடுகள் வசூலிக்கப்பட்டது என்று தெரியவில்லை. இனிவரும் காலங்களில் இந்த சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வருவாய் நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 27 செப் 2021