மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்த்: ஸ்தம்பித்த தலைநகர்!

விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்த்: ஸ்தம்பித்த தலைநகர்!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று (செப்டம்பர் 27) நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கடையடைப்பு, நெடுஞ்சாலை மறியல், ரயில் முற்றுகை என விவசாயிகளும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2020 நவம்பர் முதல் ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகளிடம் ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தினார். ஆனால் எங்களது கோரிக்கை, அதாவது மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என்று விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒன்றிய அரசைக் கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு விவசாயச் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவான சன்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது. இன்று காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

திருச்சி

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்தை முற்றுகையிடுவதற்காகப் பூம்புகார் விற்பனை நிலையம் அருகே விவசாய சங்கத்தினரும், பல்வேறு தொழிற்சங்கத்தினரும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு அங்கிருந்து தபால் நிலையத்தை முற்றுகையிடச் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

எனினும் போலீசாரின் தடுப்பையும் மீறி ஒரு சிலர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

அதுபோன்று, ஓயாமரி சுடுகாடு அருகே காவிரிப் பாலத்தில் வைகை ரயிலை மறிப்பதற்காகத் தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காத்திருந்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.

அரியலூரில், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேனாபதி கிராமத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் வாயில் மண்ணை பூசி, புள்ளம்பாடி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை, அண்ணாசாலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வைத்திருந்த பேரிகார்டை போராட்டக்காரர்கள் தள்ளிவிட்டதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

கோவை

கோவையில் திமுக, காங்கிரஸ், மதிமுக., விடுதலை சிறுத்தை கட்சிகள், ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் ஒரு சிலர் உள்ளே சென்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதுபோன்று மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தையும் முற்றுகையிட முயன்றனர்.

பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலம் தலைமை தபால் நிலையம் முன்பாக அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் 300 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். அதுபோன்று சேலம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

மதுரை

மதுரை பேருந்து நிலையம் முன்பாக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.

கன்னியாகுமரி

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுக, காங்கிரஸ், மதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார். பின்னர் விஜய் வசந்த் உட்படப் போராட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஸ்தம்பித்தது டெல்லி

டெல்லியில் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக டெல்லியிலிருந்து ஹரியானா வழியாக ராஜஸ்தான் செல்லும் முக்கிய பகுதியாக உள்ள குருகிராமில் ஏராளமான விவசாயிகள் திரண்டுள்ளனர். இந்த மறியல் காரணமாகப் பல கி.மீ. தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

விவசாயிகள் அனைத்து வழிகளையும் மறித்து போராட்டம் நடத்தி வருவதால், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் ஏராளமான கார்கள் ஊர்ந்து செல்வதைக் காணமுடிகிறது.

போராட்டத்தைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

டெல்லி - உத்தரப் பிரதேச எல்லைகளிலும் போராட்டம் காரணமாகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப்

பஞ்சாபில் நடந்து வரும் போராட்டத்தால் 350 சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில்வே பாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளா

நாடு தழுவிய இந்த போராட்டத்துக்கு, கேரள மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிகள் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிகள் என பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனால் மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதுபோன்று ஆந்திரா, ஹரியானா என அனைத்து மாநிலங்களிலும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 27 செப் 2021