மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

நேற்று ஒரே நாளில் 24 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

நேற்று ஒரே நாளில் 24 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 24 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று (செப்டம்பர் 26) தமிழ்நாடு முழுவதும் மூன்றாம்கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தடுப்பூசி குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணர்வு மற்றும் பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் நான்கைந்து இடங்களில் முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அதுபோன்று அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

நேற்று 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிற்பகலிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் 17.7 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இறுதியாக நாளின் முடிவில் 24,85,814 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், முதல் தவணையாக 14 லட்சத்து 90,814 பேரும், இரண்டாவது தவணையாக 9 லட்சத்து 95,000 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டது.

சென்னையில் நேற்று மட்டும் 2,13,763 லட்சம் பேருக்கும், கடலூரில் 1,15,590 பேருக்கும், கோவையில் 1,13,618 பேருக்கும், திருச்சியில் 1,06,156 பேருக்கும், மதுரையில் 1,06,018 பேருக்கும், தஞ்சையில் 1,04,011 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அரியலூர், கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் குடும்ப நிகழ்ச்சிகளால் நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் பொழுதுபோக்கு இடங்களாக உள்ள நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் நாகை, விருதுநகர், மாவட்டங்களிலும் தொற்று அதிகளவில் உள்ளது. மக்கள் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

இன்றைக்கு (நேற்று) நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சிறப்பு முகாம்களில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று யாரும் தடுப்பூசி செலுத்த வர வேண்டாம். 'பூஸ்டர்' தடுப்பூசி செலுத்துவது குறித்து, ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலைப் பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வரும் தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறினார்.

தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். நிர்ணயித்த இலக்கை விட அதிகமாக தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 4.43 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை செப்டம்பர் மாத இறுதிக்குள் 5 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரமும் ஒன்றிய அரசிடமிருந்து 50 லட்சம் தடுப்பூசிகள் வரப் பெற்றால் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மாபெரும் முகாம் நடத்தப்படும். தமிழ்நாட்டில் இதுவரை 500-க்கும் அதிகமான கிராமங்களில் நூறு சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பங்கேற்ற 1.10 லட்சம் பேருக்கு மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 27 செப் 2021