மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்: ஓபிஎஸ்

மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்: ஓபிஎஸ்

பெரும்பாலான மக்களுக்கு பயனளிக்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தது முதல், திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளது, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கடந்த 25ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், “நான்கு மாதங்களில் 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்று கூறியிருந்தார்

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (செப்டம்பர் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான்கு மாதங்களுக்குள் 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு இந்தியத் துணைக் கண்டத்திலேயே திமுக அரசாகத்தான் இருக்கும் என்று முதல்வர் பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார் என்றாலும், தாங்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தோமோ அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் ஆதங்கமாக தற்போது இருக்கிறது.

தமிழ்நாட்டில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக திமுக பல்வேறு வாக்குறுதிகள் அளித்தாலும், “நீட் தேர்வு ரத்து”, “பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பு”, “சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்”, “மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை”, “நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் ஒரு கிலோ உளுத்தம் பருப்பு”, “70 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு 10 விழுக்காடு ஓய்வூதியம் உயர்த்தி வழங்குதல்”, “மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் 1,000 ரூபாய்”, “முதியோர் ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்வு”, “கல்வித் துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல்”, “ஒன்றிய அரசின் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்சவரம்பினை 25 லட்சமாக உயர்த்துதல்”, “30 வயதுக்குட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி”,

“அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்”, “போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்”, “கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு 4,000 ரூபாய் நிவாரணத் தொகை”, “ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு”, “உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்” போன்ற வாக்குறுதிகள்தான் முக்கியமானவை. இந்த வாக்குறுதிகளை நம்பித்தான் பொதுமக்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள். அதனால்தான், பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

மேலே கூறப்பட்ட வாக்குறுதிகளில் 25 சதவிகிதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்துவிட்டு, அதற்கு வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். உள்ளதும் போச்சு என்ற நிலையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால் ‘நீட் தேர்வு ரத்து’ என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, தற்போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

இதேபோல, மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதையெல்லாம் சாதனை என்று சொல்வதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

திமுக அளித்த வாக்குறுதியான கல்விக் கடன் ரத்து என்பதை நம்பி பெருவாரியான மக்கள் வாக்களித்தார்கள். இன்றைக்கு அந்தக் கடனுக்கான வட்டி அதிகரித்துக் கொண்டு செல்கிறதே தவிர, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதாகத் தெரியவில்லை.

அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைத்தல், மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்தல், ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசுத் தொகை உயர்வு போன்ற திட்டங்களை எல்லாம், எந்த ஆட்சி வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் இயல்பாக இடம்பெறக் கூடிய திட்டங்களைப்போல்தான் எடுத்துக் கொள்ள முடியும். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் கிடைக்காது.

அதனால், முதல்வர், எந்த வாக்குறுதிகளை நம்பி திமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, பெரும்பாலான மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஏழை எளிய மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 27 செப் 2021