மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

விமர்சனங்களை எதிர்கொள்ள தயார்: சேகர்பாபு

விமர்சனங்களை எதிர்கொள்ள தயார்:  சேகர்பாபு

பயன்பாடற்று இருக்கின்ற எந்தப் பொருளாக இருந்தாலும் அது தெய்வத்துக்குப் பயன்படும் என்றால் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருடன் இணைந்து நேற்று (செப்டம்பர் 25) ஆய்வு மேற்கொண்டார்.

மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்பு, அங்குள்ள யானை பார்வதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “மீனாட்சி அம்மன் கோயிலில் 2018ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. அதில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள பலமுறை டெண்டர் அறிவித்தும் யாரும் டெண்டர் எடுக்கவில்லை. இதில் என்ன பிரச்சினை உள்ளது என ஆராய்ந்து, விரைவில் புதிய டெண்டர் விடப்படும். மூன்று ஆண்டுகளுக்குள் மண்டபத்தைச் சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

கடந்த ஆட்சியில் சோளிங்கர், அய்யர் மலை கோயில்களில் ரோப் கார் பணிகள் முழுமையாக முடிவடைதற்கு முன்பாகவே மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக முடிவடையாதது நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்தது. மேலே குறிப்பிட்ட இரண்டு கோயில்களிலும் இந்தாண்டு இறுதிக்குள் ரோப் கார் சேவை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். மேலும் ஐந்து கோயில்களுக்கு ரோப் கார் சேவையைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1959 சட்டம், பிரிவு 78இன்படி, தமிழ்நாடு முழுவதும் 188 இடங்களில் உள்ள கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற உத்தரவு பெறப்பட்டிருந்தது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஒரு நிலம் கூட மீட்கப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த ஐந்து மாதங்களிலேயே 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இன்னும் 65க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியுள்ளது.

அதுபோன்று, கோயிலுக்குச் சொந்தமான கடைகளின் வாடகை அதிகமாக இருப்பதாகக் கூறி சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இருப்பினும் சிலர் நிர்ணயிக்கப்பட்ட வாடகையைத் தொடர்ந்து செலுத்தி வருகின்றனர். வாடகை நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்ய தலைமை செயலாளர் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்படவுள்ளது. அதன் பிறகு, நியாயமான வாடகை நிர்ணயம் செய்யப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கோயில்களுக்கு நன்கொடையாக பக்தர்களால் அளிக்கப்பட்ட பல்வேறு ஆபரணங்கள் கடந்த 9 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளன. அதில் தெய்வங்களுக்குப் பயன்படுவதை நேரடியாகப் பயன்படுத்தவும், பயன்படுத்த இயலாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி, அதன் மூலம் கிடைக்கும் வைப்பு நிதியை கோயில் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தவே திட்டமிடப்பட்டுள்ளது.

திருக்கோயிலுக்கு ஏதாவது தங்கம் தேவைப்பட்டால், வைப்புநிதி வைக்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்து தங்கத்தைக் கோயிலுக்குப் பயன்படுத்த முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டைமூன்று மண்டலங்களாகப் பிரித்து, அதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்கவும் உத்தரவிட்டிருந்தார். அந்த ஓய்வுபெற்ற நீதிபதிகளின் நியமனமும் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முதல்வரைச் சந்தித்து, முதல்வரின் வழிகாட்டுதல்படி நகைகளைப் பிரிக்கும் பணியை மேற்கொள்வார்கள். எங்களைப் பொறுத்தவரை பயன்பாடற்று இருக்கின்ற எந்தப் பொருளாக இருந்தாலும் அது தெய்வத்துக்குப் பயன்படும் என்றால் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். நகைகளை உருக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும்” என்று கூறினார்.

-வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

ஞாயிறு 26 செப் 2021