மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

பழிக்குப் பழி கொலைகள் - ரவுடிகள் மீது குண்டர் சட்டம்: சைலேந்திர பாபு

பழிக்குப் பழி கொலைகள் - ரவுடிகள் மீது குண்டர் சட்டம்: சைலேந்திர பாபு

தமிழகத்தில், குறிப்பாகத் தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகக் கொலை சம்பவங்கள் அதிகரித்தன. இது பொதுமக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சட்டம் மற்றும் நீதி மீதான நம்பிக்கையை அசைக்கும் வகையில் அமைந்தன.

10 நாட்களில் தலை துண்டிக்கப்பட்டு நான்குக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தன. இதில் சில கொலைகள் பழிவாங்கும் நோக்கில் அரங்கேறியது தெரியவந்தது. தமிழகத்தில் தினசரி ஏதாவது ஓர் இடத்தில் கொலை சம்பவம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், தலையைத் துண்டித்து அதைச் சாதி தலைவர்களின் கல்லறைக்கு அருகே வீசுவது அல்லது முன்னதாக இறந்தவர்களின் கல்லறைகள் மற்றும் அவர்களது வீட்டு வாசலில் வீசுவது போன்ற நிகழ்வுகள் எல்லாம் தென்தமிழகத்தில்தான் சமீப நாட்களாக நடக்கின்றன. இந்தக் கொலைகள் மற்ற சாதியினரை எச்சரிக்கும் விதமாக அரங்கேறுகின்றன.

செப்டம்பர் 13

நெல்லை அருகே கீழசெவல் நயினார் குளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சங்கர சுப்பிரமணியன் (38). இவர் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, வடுவூர்பட்டி செல்லும் சாலை அருகே உள்ள காட்டுப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்த கும்பல் தலையை மட்டும் எடுத்துச் சென்று கோபால சமுத்திரம் பகுதியில் உள்ள மந்திரம் என்பவரது கல்லறையில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டது.

2013ஆம் ஆண்டு தலித் சமூகத்தைச் சேர்ந்த மந்திரம் என்பவர் சாதிய மோதல் காரணமாகக் கொலை செய்யப்பட்டார். அவரது கல்லறையில் சங்கர சுப்பிரமணியன் தலை இருந்ததால் இதுவும் சாதிய கொலை என காவல் துறைக்குத் துப்பு கிடைத்தது.

இதனால், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட கொத்தன் குளத்தைச் சேர்ந்த மந்திரம் என்பவரது மகன் மகாராஜா (20) உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

செப்டம்பர் 15

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி, மாரியப்பன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கும்பல் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி சங்கர சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட இடத்தில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டது.

கொலை செய்யப்பட்ட மாரியப்பன் கடந்த 2014ஆம் ஆண்டு கோபால சமுத்திரம் வடக்கூரை சேர்ந்த கணேசன் என்ற கார்த்திக் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று போலீஸார் கூறுகின்றனர். சங்கர சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட இடத்தில் மாரியப்பனின் தலை கிடைத்ததால் பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதே செப்டம்பர் 15ஆம் தேதி இரவு பாளையங்கோட்டை சங்கர் காலனியில் வசித்துவந்த அப்துல் காதர் என்பவர் கொலை செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மார்ட்டின் என்ற ஃபைனான்ஷியர் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் காதர், பிணையில் வெளியே வந்திருந்த நிலையில் கொலை செய்யப்பட்டார்.

செப்டம்பர் 23

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனராக இருந்தவர் பசுபதி பாண்டியன். இவர் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக, திண்டுக்கல் நந்தவனப்பட்டியை அடுத்துள்ள வள்ளுவர் நகர்ப் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி நிர்மலா (70) சேர்க்கப்பட்டார்.

இவரை கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி ஐந்து பேர் கொண்ட கும்பல் தலையைத் துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்தது. பின்னர் தலையை எடுத்துச்சென்று நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு வைத்துவிட்டுச் சென்றது.

இந்தக் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்ததில், பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நிர்மலா தேவி அடைக்கலம் கொடுத்ததும், அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பவராக இருந்ததும் தெரியவந்தது. எனவே பழிவாங்கும் நடவடிக்கையாக நிர்மலா தேவி கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதுபோன்று, செப்டம்பர் 23ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஸ்டீபன்ராஜ், அதே பகுதியில் பேருந்து நிலையம் அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஸ்டீபன் ராஜ் கொலைக்கான காரணம் குறித்து தெரியவராத நிலையில் நிர்மலா தேவி கொலை செய்யப்பட்ட அன்றே இவரும் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் நிர்மலா தேவி கொலைக்கும் இந்த கொலைக்குச் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிகழ்வுகள் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “1995ஆம் ஆண்டு சாதியை மையமாகக் கொண்டு கொலைகள் நடந்ததால், 40 மணி நேரம் மாலை நேரங்களில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. அப்போது, ஹீரோக்களைப் போல போலீஸை வழிநடத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த அதிகாரிகள் எங்களிடம் இருந்தனர். ஆனால் சமீபத்தில், அகங்காரம் கொண்ட ஒரு கூட்டத்தை எதிர்கொள்ளும்போது, முன்னால் நின்ற ஒரு மூத்த அதிகாரி நடுங்கினார். அவரது கை கால்கள் எல்லாம் நடுங்கின” எனத் தெரிவித்தார்.

போலீஸார் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும் விதமாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கும் விதமாகவும் நடந்த இந்தக் கொலைகளைத் தொடர்ந்துதான் மாநிலம் முழுவதும் போலீஸார் ஸ்டாமிங் ஆபரேஷனில் ஈடுபட்டனர்.

டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், செப்டம்பர் 24,25 என இரண்டு நாட்கள் விடிய விடிய போலீசார் நடத்திய சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு கூறுகையில், 2012, 2013ஆம் ஆண்டில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து திண்டுக்கல், நெல்லையில் பழிவாங்கும் வகையிலான கொலைகள் நடந்தன. இதனால் போலீஸார் ரவுடிகளை கைது செய்ய தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாகப் பழிக்குப் பழி வாங்கும் செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்துள்ளோம். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு போட்டுள்ளோம். தமிழகத்தில் கூலிப்படையினர் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தொடர்ந்து போலீஸாரின் இந்த சோதனை நடைபெறும்” என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ரவுடிகள் கைது செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 26 செப் 2021