மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன பதில்!

பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன பதில்!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சரின் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டம் இன்று(செப்டம்பர் 26) தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,” 2002ஆம் ஆண்டு முதல் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சியை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அறிவியல் பயிற்சி வழங்க உள்ளது.

’ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற திட்டத்தை, மாவட்டந்தோறும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சியிலும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைப் பயன்படுத்தி, மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய அவர்,” கொரோனா தொற்றை காட்டிலும் கற்றல் குறைபாடே மிகப்பெரிய தொற்றாக இருக்கும் என்பது கல்வி வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது. தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றதிலிருந்து ஒவ்வொரு துறையிலும் கவனமாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எடுக்கிற முடிவுகளினால் விமர்சனம் வந்தால்கூட பரவாயில்லை, எந்தவொரு குழந்தையும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தெளிவாகவும், கவனமாகவும் இருக்கிறோம்.

பெற்றோர்கள், மாணவர்கள், சுகாதாரத் துறை உள்ளிட்டோரின் கருத்துகளை உள்ளடக்கியே பள்ளிகள் திறப்பு பற்றி முதலமைச்சர் முடிவு எடுப்பார்.

ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசின் அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பும் அதில் இடம் பெற்று வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கருத்துகளை கேட்டறிந்து அதன் அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்துள்ளோம். அதன்படி ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகும்போது, பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடுவார்.

ஒருசில பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க சொல்கின்றனர். ஒருசிலர் கொரோனா காலத்தில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று சொல்கின்றனர். அதனால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிதான் முடிவெடுக்கப்படும். எப்படி இருப்பினும், 9-12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பம்தான்” என்று கூறினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்,” ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்லது, கெட்டது எது என்பதை பிரித்தறியும் அடிப்படை உள்ளுணர்வு உள்ளது. அந்த உள்ளுணர்வை அறிவியலுடன் இணைத்து பயணித்தால் சிறப்பான உலகை உருவாக்கலாம்.

பொதுமக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாலும், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளதாலும் கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை. ஆனால், முகக்கவசம் அணிதல், இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்தாலே மூன்றாவது அலை ஏற்படாமல் தவிர்க்க முடியும்” என்று கூறினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 26 செப் 2021