மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

கனவு காணலாம்தான் – உறங்கவிட்டால்தானே?

கனவு காணலாம்தான் – உறங்கவிட்டால்தானே?

அ.குமரேசன்

ஒரு கனவு என்னவெல்லாமோ செய்யும். இனிமையான கனவு உண்மை வாழ்வில் உற்சாகத்தை ஊட்டும். கசப்பானதொரு கனவு அவநம்பிக்கையை ஏற்படுத்தும். பரவசமான கனவு கலைகிறபோது அடடா எல்லாம் கனவுதானா என்ற இன்ப ஏமாற்றம் நுழையும். பயங்கரமானதொரு கனவிலிருந்து விழிக்கிறபோது ஆகா, எல்லாம் கனவுதான் என்ற நிம்மதிப் பெருமூச்சு வெளியேறும். நனவுலகில் இது பலித்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்தைத் தருகிற கனவு வருவதுண்டு. அய்யய்யோ இது பலித்துவிடக் கூடாது என்ற அச்சத்தைத் தருகிற கனவும் வருவதுண்டு.

செப்டம்பர் 25 – ‘உலகக் கனவு நாள்’ என்ற தகவலைப் படித்தபோது கனவுகள் பற்றி எழுதுவதற்கான இந்த முன்னுரை கிடைத்தது. இப்படியொரு நாளைக் கொண்டாடுவது தொடங்கி ஒன்பது ஆண்டுகள்தான் ஆகின்றன. 2012இல், கொலம்பியா பல்கலைக்கழக ஆசிரியரான ஓஸியோமா எக்வோன்வு இந்த நாளுக்கான கருத்தாக்கத்தை உருவாக்கி முதல் கொண்டாட்டத்தையும் நடத்தினார். சமூக மாற்றத்துக்கான களப்பணியாளராகவும் செயல்பட்டு வருகிறவர் அவர். உலக மகளிர் தினத்துக்கான பாடல் ஒன்றை உருவாக்கியவர், ஜார்ஜ் ஃபிளாய்ட் ஒரு வெள்ளை போலீஸ் அதிகாரியின் முழங்காலில் கழுத்து நெறிபட்டு இறந்தபோது ‘பொருட்படுத்தப்பட வேண்டிய கறுப்பர் உயிர் முதல் எங்கும் அநீதிக்கான முடிவு வரையில்’ என்ற கட்டுரையை எழுதியவர். உலகம் முழுவதும் இயங்கிவருகிற மனித உரிமை அமைப்புகளோடு தொடர்புள்ள பல பல்கலைக்கழக அரங்குகளில் உரையாற்றியிருக்கிறார்.

மனித குலத்தை ஈர்க்கிற, வலிகளிலிருந்து குணப்படுத்துகிற பணிகளுக்கு உதவுகிற ஒரு நாளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கனவு கண்ட ஓஸியோமா ‘உலக கனவு நாள்’ என்றே உருவாக்கினார். பல நாடுகளிலும் உள்ள தன்னார்வத் தொண்டுக் குழுக்கள் இந்நாளைக் கொண்டாடத் தொடங்கின. 2013ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்தக் கொண்டாட்டத்தில் இணைந்துகொண்டது என்றாலும், இது ஐநா அங்கீகாரம் பெற்ற ஓர் உலக தினமாக இன்னும் அறிவிக்கப்பட்டுவிடவில்லை. அந்த அங்கீகாரத்துக்காக உலகம் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கனவுப் பயிர்

“எனக்கொரு கனவு இருக்கிறது” என்று மார்ட்டின் லூதர்கிங் (ஜூனியர்) தனது உரையில் கூறிய வாசகம் உலகம் முழுவதும் இனப் பாகுபாடுகளுக்கு எதிராகவும், சமூகநீதிக்கு ஆதரவாகவும் நடைபெறும் இயக்கங்களில் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டப்படுகிறது. “கனவுகள் முதலில் அசாத்தியமானவையாகத் தோன்றுகின்றன. பின்னர் நிறைவேற வாய்ப்பற்றவையாகத் தோன்றுகின்றன. இறுதியாக நம்மை ஒப்படைத்துக்கொள்கிறபோது அவை தவிர்க்கவியலாதவையாகின்றன” என்றார் காந்தி. ‘கனவு காண்’ என்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் விண்வெளி ஆராய்ச்சியாளருமான அப்துல் கலாம் சொன்னது நாடு முழுவதும், குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கிற சொற்பதமாக அமைந்தது.

அரசியல், அறிவியல், கலை, இலக்கியம், தொழில் என எந்தத் துறையானாலும் அதில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள், அந்தக் கொடியை உயர்த்துவது பற்றித் தங்களுக்கு இருந்த கனவுகளைச் சொல்லியிருக்கிறார்கள். பத்திரிகைத் துறையில் நடைபோட வேண்டுமென்பது சிறுவயதிலிருந்தே எனது கனவு. பலவகை அனுபவப் பயணங்களுக்குப் பிறகு அந்தக் கனவை நனவில் அடைய முடிந்தது.

எல்லோருக்கும் கனவுகள் நிறைவேறிவிடுவதில்லைதான். மேலே குறிப்பிட்டுள்ள எந்தவொரு துறையிலும் கனவுகள் நிறைவேறிய வெற்றியாளர்கள் சிலரைத் தவிர மற்றவர்கள் – அவர்கள்தான் மிகப் பெரும்பாலானவர்கள் - வேதனைமிகு தோல்வியைச் சந்தித்தவர்கள்தான். வேறு வேறு துறைகளில் இறங்க வேண்டிய வாழ்க்கைக் கட்டாயத்தில் தங்கள் கனவுகளையே மறந்தவர்கள்தான். கனவு காண்பதையே நிறுத்திக்கொண்டவர்களும் உண்டு.

பகல் கனவு பலிக்காதா?

அரசியல் பதவி, தேர்தல் வெற்றி, தொழில் சாதனை என நிறைவேற வாய்ப்பில்லாத ஆசைகளை வெளிப்படுத்துவோர் ‘பகல் கனவு காண்கிறவர்கள்’ என்று மற்றவர்களால் எளிதில் புறந்தள்ளப்படுகிறார்கள். பகல் கனவு நிறைவேறாது என்ற கருத்திலிருந்து இவ்வாறு தள்ளப்படுகிறது. உழைக்கப் போகாமல் பகல் பொழுதைத் தூங்கிக் கழித்தால் எப்படி கனவு நிறைவேறும் என்ற பொருளில் வேண்டுமானால் இதை எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி, இரவுக் கனவுகள் மட்டும் நிறைவேறிவிடும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

மேலும், கனவு என்ற மூளைச் செயல்பாடு நிகழ்வது, ஒருவருக்குத் தூக்கம் தொடங்கவிருக்கிற நேரத்திலும், தூக்கம் கலையவிருக்கிற நேரத்திலுமே என்று அறிவியல் ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்திவிட்டன. வேதிப்பொருள்கள் ஒன்றுடனொன்று கலக்கிறபோது ஒளி, ஒலி, கடுமையான வாசம், வெப்பநிலை மாற்றம் என்று நிகழ்வது போல மூளையின் வேதிப்பொருள்களிலும் நிகழ்கிறது. அதுவே உறக்கம் என்கிறது அறிவியல். தூக்கம் தழுவுகிற தொடக்க நொடிகள் அல்லது நிமிடங்களுக்குப் பிறகும், தூக்கம் விடைபெறுகிற கடைசி நொடிகள் அல்லது நிமிடங்களுக்கு முன்பாகவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறபோது, மூளையில் கனவாகப் பதிவாகும் வேதியல் செயல்பாடு முற்றிலுமாக நின்றுவிடும்.

அந்தச் சிறிது நேரக் கனவுக் காட்சிகள் ஏற்கெனவே மூளையில் பதிவான வெளித் தகவல்கள் பற்றிய சிந்தனையின் வெளிப்பாடுதான். அது ஒருவரது காதல், குடும்பம், அரசியல் ஈடுபாடு, தொழில் போட்டி, கலைத் தாகம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பிறர் சொல்லக் கேட்பது, என்னவெல்லாமோ பார்ப்பது, எதிலிருந்தாவது படிப்பது, எதையாவது தொட்டுணர்வது உட்பட வாழ்க்கையில் எந்த வழியிலும் ஏற்கெனவே கேள்விப்பட்டிராத, அறிந்திராத ஒன்றைப் பற்றி எவரொருவராலும் சிந்திக்க முடியாது. ஆகவே, கொஞ்சமும் தொடர்பில்லாத, முழுக்க முழுக்கப் புதிய கனவு என வராது. ஆகவேதான், சிலருக்கு அவர்களுடைய வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தீர்வளிக்கக்கூடிய சில யோசனைகள் அவர்கள் காணக்கூடிய கனவிலிருந்து கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன. அதுவும் எப்போதாவதுதான் நிகழும்.

கணித மேதை ராமானுஜம், வேதியல் மூலங்களை ஒழுங்குபடுத்தும் அட்டவணையைத் தயாரித்தளித்த டிமிட்ரி மென்டிலீவ், பரிணாம வளர்ச்சியில் இயற்கைத் தேர்வின் பங்களிப்பு பற்றிச் சொன்ன ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ், நவீன அறிவியல் பகுப்பாய்வு முறையை வகுத்தளித்தவர்களில் ஒருவரான ரேன் டெஸ்கார்ட்டிஸ் என நிறைய அறிவியலாளர்கள் தாங்கள் தேடிக்கொண்டிருந்த பல வினாக்களுக்குத் தங்களின் கனவுகளில் விடை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, வேறு தொந்தரவற்ற நேரத்தில், தூக்கம் கலையவிருந்த நேரத்தில் அல்லது தொடங்கவிருந்த நேரத்தில் ஏற்பட்ட சிந்தனையால் அல்லது மூளையில் அந்த வேதிச்செயல்பாட்டால் கிடைத்த கருத்துகளைப் பிறகு முறைப்படுத்திப் புதிர்களுக்கான விடைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பல எழுத்தாளர்களுக்கு இத்தகைய நேரத்தில்தான் தங்கள் படைப்புகளின் அடுத்த கட்ட நகர்வுக்கான கற்பனைகள் பிடிபட்டிருக்கும். சுயநல அரசியல்வாதிகளுக்குக் குறுக்கு வழிகள் கூட அகப்பட்டிருக்கும்.

இவை போன்ற செய்திகளை முதலீடாக்கிக்கொண்டு கனவுகளுக்குப் பலன் சொல்வதையே சிலர் தொழிலாகச் செய்கிறார்கள். மற்றவர்களின் உளவியல் சார்ந்த நம்பிக்கையைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய பணமீட்டும் கனவுகளை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். ராசி பலன், ஜாதக பலன், பல்லி கத்தும் பலன், வாஸ்து பலன் போன்றதே இது. கனவில் சாப்பாடு வந்தால் வாழ்க்கையில் என்ன நடக்கும், யானை வந்தால் என்ன நடக்கும், காடு வந்தால் என்ன நடக்கும், மலக்குவியல் வந்தால் என்ன நடக்கும், ஆவி வந்தால் என்ன நடக்கும், ஆண்டவன் வந்தால் என்ன நடக்கும் என்றெல்லாம் கணித்துச் சொல்கிற அளவுக்கு வல்லுநர்கள் வலம் வருகிறார்கள்.

கனவை நிறைவேற்ற வழி

முயற்சி எனும் உழைப்பு இல்லாமல் எந்த நேரத்துக் கனவானாலும் அது கனவாகவே கலைந்து போய்விடும் என்று உத்தரவாதமாகச் சொல்லலாம். தனிமனிதக் கனவு மட்டுமல்ல, ஒரு குழுவாக, அமைப்பாக, இயக்கமாகக் காண்கிற கனவுகளுக்கும் இது பொருந்தும். சிறைக்கம்பிகளுக்கும், குண்டாந்தடிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் அஞ்சாமல் லட்சக்கணக்கானோர் விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கியதால் அல்லவா இந்திய சுதந்திரக் கனவு மெய்ப்பட்டது?

சுதந்திர இந்தியாவிலும் அதிகார அடக்குமுறையற்ற கருத்துரிமை, பாகுபாடற்ற கல்வி, முழுமையான சமூக நீதி, பாலின சமத்துவம் ஆகியவை கனவுகளாகவே தொடர்கின்றன. சாதி வேலிகளை அறுக்கும் வல்லமை வாய்ந்த காதல் கனவுகள் நவீன ஒப்பனைகளோடு அலையும் ஆணவக் கொலை அரிவாள்களால் வெட்டப்படுகின்றன. உயர்கல்விக் கனவுகள் நுழைவுத்தேர்வுச் சல்லடைகளால் வடிகட்டப்படுகின்றன. கவுரவமான வருவாய்க்கான வேலைக் கனவுகள் கிடைத்த வேலைகளின் தொகுப்பூதியத்துடன் நிறைவடையும்படி கலைக்கப்படுகின்றன அல்லது வேலையின்மைத் தீயில் பொசுக்கப்படுகின்றன. ஆரோக்கிய வாழ்க்கைக் கனவுகள் மருத்துவ வணிக உலகத்தால் தொற்றவைக்கப்பட்ட ரத்தசோகையில் இளைத்துப்போகின்றன.

ஆயினும், மாற்றத்துக்கான கனவுகள் ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இன்றைக்கும் விவசாயிகள் தங்களுடைய கனவுகள் எல்லாம் பொய்த்துப்போன ஆதங்கத்தோடும், தங்களின் ஒன்றுபட்ட இயக்கமே நம்பகமானது என்ற உறுதியோடும், போராட்டத்தில் அயராமல் ஈடுபட்டிருக்கிறார்கள். லட்சியக் கனவுகளோடு புறப்படுகிறவர்களுக்கு நம்பிக்கையளிக்கிறார்கள்.

கனவு காணச் சொன்ன அப்துல் கலாம், “உங்களின் உறக்கத்தில் வருவதல்ல, உங்களை உறங்கவிடாமல் செய்வதே நல்ல கனவு” என்றும் கூறினார். கனவு உறங்க விடாமல் செய்கிறதோ இல்லையோ, உலகின் கொரோனா நிலவரங்கள், கொரோனாவைப் பயன்படுத்திக்கொண்ட சாமர்த்தியங்கள், ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி வலுப்படுத்தும் கொள்கைகள், பொது ஆவேசத்தைத் திசைதிருப்பும் உத்திகள், வாழ்க்கை நம்பிக்கைகளைச் சிதறடித்திருக்கும் நிலைமைகள்… இவை உறங்கவிடுவதில்லை. ஆயினும் “கனவு காண் கனவு காண்” என்ற அறிவுரையைத் தலைதலைமுறையாக வழங்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள். என்னவோ மக்களுக்குக் கனவு காணும் விருப்பம் இல்லை என்பதாக அனுமானித்துக்கொண்டு இவ்வாறு கனவு காணச் சொல்கிற அருளுரைகள் வருகிறபோதெல்லாம் ஒன்றைச் சொல்லி வந்திருக்கிறேன்: “முதலில் எங்களை நிம்மதியாக உறங்க விடுங்கள்.”

ஆம், கனவுகள் நிறைவேறுவதற்கு மட்டுமல்ல, கனவு காண்பதற்கே கூட எத்தனை எத்தனையோ தடைக்கற்கள். வர்க்கம், இனம், நிறம், குலம், மதம், பாலினம், சாதியம், உலக ஆக்கிரமிப்பு வணிகம், உள்நாட்டுப் பொருளாதாரம் என்று பலப்பல வண்ணங்களில் பாதையை மறித்துக் கிடக்கும் அந்தத் தடைக்கற்களை அகற்றுகிற கனவோடு மானுடம் தன் கைகளை உயர்த்தட்டும்.

.

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

சனி 25 செப் 2021