மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

அதிகரிக்கும் கொரோனா : முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

அதிகரிக்கும் கொரோனா : முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் ஒன்றாம் தேதி 1559 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். சில நாட்களாக 1500-1600 என்ற வகையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று திடீரென 1745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பில் கோவை மட்டும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறைந்து வந்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியது மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று(செப்டம்பர் 25) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் அறிக்கையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது என்றும் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி போடுவது தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகளும், குளிர்சாதன வசதி இல்லாது செயல்படுவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும், பண்டிகை காலம் என்பதால் அனைத்து சில்லறை விற்பனை கடைகள் முன்பும் கொரோனா பாதிப்பு முன்பு இருந்த கூட்டத்தை நெருங்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சிறப்பு அங்காடிகளில் தொற்றுக்கு முன்பு இருந்ததை விட கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் வெறிச்சோடிக் கிடந்த தெருக்கள் தற்போது அலை கடல் போல் காட்சி அளிக்கின்றன. வார இறுதி நாட்களில் தங்குமிடங்கள் முழுவதும் நிரம்பி விடுவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இதன் காரணமாக அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு பொதுமக்களும், பண்டிகைகளை முன்னிட்டு தங்களுக்கு தேவையான ஆடை ,அணிகலன்களை வாங்கி செல்கின்றனர். மக்கள் இயல்பு நிலைக்கு சென்றுள்ளனர் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான்.

அதே சமயத்தில் இறங்கு முகமாகவே இருந்து கொண்டிருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் பெரும்பாலான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. 1559 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,745 ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் 5.5 விழுக்காட்டிற்கும் மேல்.

இந்த உயர்வு அச்சப்படும் அளவுக்கு அதிகம் இல்லை என்றாலும், இந்த உயர்வு தொடர்ந்தால் மூன்றாவது அலை ஆரம்பித்து விடுமோ என்ற எண்ணம் மக்களிடையே தோன்றி விடும். அதனால், கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்.

எனவே தமிழ்நாடு முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக அனைவரும் பின்பற்றுகிறார்களா? என்பதை உறுதி செய்யவும் , குறிப்பிட்ட சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதாமல் இருப்பதை கண்காணிக்கவும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , உரிய அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கி ஏற்ற இறக்கமாக உள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை இறங்குமுகமாக செல்வதற்கான வழிவகை காண வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

சனி 25 செப் 2021