மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

மூவாயிரம் கிலோ ஹெராயின்: என்.ஐ.ஏ.யிடம் போகும் மெகா கடத்தல்!

மூவாயிரம் கிலோ ஹெராயின்:  என்.ஐ.ஏ.யிடம் போகும் மெகா  கடத்தல்!

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் கிட்டத்தட்ட 3,000 கிலோ ஹெராயின் ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையால் கைப்பற்றப்பட்டது. ஆப்கானிஸ்தான் வழியாக இந்த போதைப் பொருள் இரு கண்டெய்னர்களில் வந்திருக்கிறது, இதுவரை இந்தியாவில்- உலகில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களிலேயே மிக அதிக அளவிலான வேட்டை இதுதான்.

ஊடக நிறுவனங்களில் இந்த செய்தி வெளியான பின் இதுகுறித்து வருவாய் புலனாய்வுத் துறையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் நிதியமைச்சகம் 22 ஆம் தேதி வெளியிட்ட செய்தியில்,

“இந்தியாவுக்குள் ஹெராயின் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்கும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாரிலிருந்து ஈரானில் உள்ள பாந்தர் அப்பாஸ் வழியாக முந்த்ரா துறைமுகத்திற்கு 2021 செப்டம்பர் 13 அன்று வந்தடைந்த இரண்டு கொள்கலன்களை வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் தன் வசம் கொண்டு வந்தது.

ஓரளவு பதப்படுத்தப்பட்ட தூள் கற்கள் அந்த கொள்கலன்களில் இருப்பதாக கூறப்பட்டது. 2021 செப்டம்பர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அந்த கொள்கலன்களில் இருந்து 2988 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

மிகப்பெரிய பைகளில் ஹெராயின் ஒளித்து வைக்கப்பட்டு அதன் மீது தூள் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக தூள் கற்களில் இருந்து ஹெராயினை பிரித்தெடுக்க அதிக அளவிலான முயற்சிகள் தேவைப்பட்டன.

இதைத் தொடர்ந்து, புதுடெல்லி, நொய்டா, சென்னை, கோயம்புத்தூர், அகமதாபாத், மாண்ட்வி, காந்திதாம் மற்றும் விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. டெல்லியில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து 16.1 கிலோ ஹெராயினும், நொய்டாவில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் இருந்து கொகைன் என சந்தேகிக்கப்படும் 10.2 கிலோ பவுடரும், ஹெராயின் என்று சந்தேகிக்கப்படும் 11 கிலோ பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.

நான்கு ஆப்கானியர்கள், உஸ்பெக்கிஸ்தானை சேர்ந்த ஒருவர் மற்றும் 3 இந்தியர்கள் என மொத்தம் 8 பேர் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொள்கலன்களை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டுக்கு சொந்தக்காரர் கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்களில் ஒருவர் ஆவார். சென்னையில் அவர் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு விசாரணைகள் நடைப்பெற்று வருகின்றன” என்று நிதியமைச்சகம் வெளியிட்ட செய்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவிலேயே அதிக அளவு ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட முந்த்ரா துறைமுகம் அதானியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது பற்றி அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில், முந்த்ரா துறைமுகத்தை நிர்வகித்து வரும் அதானி நிறுவனம் செப்டம்பர் 21 ஆம் தேதியே இதுகுறித்து ஒரு விளக்கத்தை வெளியிட்டது.

“எங்களின் பணி துறைமுக செயல்பாடுகளை கவனிப்பது மட்டும்தான். அனுப்பப்பட்ட சரக்குகளை ஆய்வு செய்ய அல்லது சரிபார்க்க துறைமுக முனையத்திற்கு வர எங்களுக்கு அதிகாரம் இல்லை. மேலும், சரக்கு துறைமுகத்தில் இறங்கிய முனையமும் அதானி குழுமத்தால் இயக்கப்படவில்லை, அது வேறு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் சுங்க மற்றும் டிஆர்ஐ அதிகாரிகளுக்கு மட்டுமே கன்டெய்னர்களை திறக்க, ஆய்வு செய்ய மற்றும் பறிமுதல் செய்ய சட்டம் அதிகாரம் அளிக்கிறது. நாடு முழுவதும் எந்த துறைமுக ஆபரேட்டரும் கன்டெய்னரை ஆய்வு செய்ய முடியாது. துறைமுகத்தை இயக்குவதற்கு மட்டுமே எங்களுக்கு அதிகாரம் உள்ளது”என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், குஜராத் கடற்கரை போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு விருப்பமான பாதையாக உருவெடுத்துள்ளது, பாகிஸ்தான், ஈரான் நாட்டினரின் மீன் பிடிப் படகுகளில் அவ்வப்போது ஹெராயின் கைப்பற்றப்படுவதும் தொடர்கிறது.

இந்நிலையில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “3000 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது இதுவரை இந்தியாவில் நடந்திராதது. இந்தியாவில் சுதந்திரமாக செயல்படும் ஒரு போதைமருந்து கடத்தல் நெட்வொர்க்கை இது சுட்டிக்காட்டுகிறது.

ஜூன் 2021 இல் ஒரு பெரிய அளவு போதைப் பொருளை வெற்றிகரமாக ‘இறக்குமதி’ செய்து அதிலிருந்து தப்பித்ததாகவும் அவர்கள்தான் இதையும் செய்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.. இவ்வளவு பெரிய போதைப் பொருள் இறக்குமதி உயர் மட்டத்தில் அதிகாரப்பூர்வ ஆதரவில்லாமல் யாராலும் முயற்சி செய்ய முடியாது. இந்த சம்பவம் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் அமைதியாக இருப்பது ஏன்?” என்று கேட்டிருக்கிறார்.

இதேபோல தமிழ்நாடு மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன்,

“ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 3000 கிலோ ஹெராயின் போதைப் பொருளினை, குஜராத்தில் அதானியால் இயக்கப்படும் முந்த்ரா துறைமுகத்தில் கைப்பற்றியிருக்கிறார்கள். உலகில் நடைபெற்ற போதைப்பொருள் கைப்பற்றலில், இதுதான் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது.

இதுபோன்று, 2017 ஜூலை மாதத்தில், இந்திய கடலோர காவல்படையின் கப்பல், குஜராத் கடற்கரையில் சுமார் 1,500 கிலோ ஹெராயினை, வணிகக் கப்பல் ஒன்றில் இருந்து கைப்பற்றியது.

குஜராத் வழியாக, கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு போதைப்பொருட்களை கடத்துவதற்கு பிடித்த பாதையாக மாறியிருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

துறைமுகம், விமான நிலையம் , ரெயில்வே ஆகிய என பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைத்தால் என்னென்ன விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகும். மோடி அரசு விரும்புவது இதைத்தானா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்தியாவின் இளம் ஹீரோக்களைக் குறிவைத்து சிதைக்கும் இவ்வளவு பெரிய அளவிலான ஹெராயின் கடத்தல் பற்றி நாடு முழுவதும் பெரிய அளவிலான விவாதம் எதுவும் இல்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த வழக்கை என்.ஐ.ஏ. விடம் ஒப்படைக்க இருப்பதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

-வேந்தன்

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

சனி 25 செப் 2021