கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிஷ்கிந்தா: சேகர்பாபு

politics

தாம்பரம் அருகே உள்ள கிஷ்கிந்தா தீம் பார்க் ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பதாகவும், அந்த இடத்தை மீட்க சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தப்படும் என்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு நேற்று (செப்டம்பர் 23) ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், அடுத்த மானியக் கோரிக்கை வருவதற்குள் தற்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 50 சதவிகிதத்தை முடிக்கத் திட்டமிடப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் சேகர் பாபு.

அப்போது, லயோலா கல்லூரி கோயில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது என்ற சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகிறதே என்ற கேள்விக்கு, “லயோலா கல்லூரி அமைந்திருக்கக் கூடிய இடம் எந்த கோயிலுக்குச் சொந்தமானது என்று தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் சமூக வலைதளங்களில் சில செய்திகள் பரவிய உடன் ஆய்வு மேற்கொண்டோம். எங்களுடைய கோப்புகளை ஆய்வு செய்ததில் லயோலா கல்லூரி அமைந்திருக்கும் இடம் எந்த திருக்கோயிலுக்கும் சொந்தமானது இல்லை என்று தெரியவந்துள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கிஷ்கிந்தா அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தவரையில், நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக பிரச்சினை எழுந்தவுடன் முதல்வர் எங்களை அழைத்து பேசினார். இதுகுறித்து நாங்களும் துறை சார்ந்த விளக்கத்தை அவர்களிடம் கேட்டிருந்தோம்.

அந்த விளக்கத்தின் அடிப்படையில் ஒரு ஜமீன்தாரரால், அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில், வேணுகோபால சுவாமி திருக்கோயிலுக்கு வேண்டிய பூஜைகளுக்கு உண்டான பயன்பாட்டுக்காக அந்தக் காலத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

ஜமீன்தார் ஒழிப்பு சட்டம் மூலம் உருவான நிலம் இது. 150 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. கிஷ்கிந்தா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலமும் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானதுதான். இதை மீட்க 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் வல்லுநர்களுடன் ஆலோசித்து சட்டப்போராட்டம் நடத்தி அது கோயில் நிலம் என்று உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்குள் 500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஒன்பது ஆண்டுகளாகக் கோயில்களுக்குக் காணிக்கையாக வந்த நகைகளை எதுவும் செய்யாமல் வைத்திருக்கிறார்கள்.

அந்த நகைகளில் பயன்பாட்டில் இல்லாத நகைகளைப் பிரித்தெடுத்து ஒன்றிய அரசின் ஒப்புதலோடு தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைத்து அதன் மூலம் கிடைக்கும் வட்டி தொகையை கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *