மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 செப் 2021

அரசியலிலும் உனக்கு அண்ணன்: பிடிஆருக்கு ஜெயக்குமார் பதில்!

அரசியலிலும் உனக்கு அண்ணன்: பிடிஆருக்கு ஜெயக்குமார் பதில்!

தமிழ்நாடு நிதித் துறை அமைச்சர் பிடிஆர் தியாகராஜனுக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையிலான வார்த்தைப் போர் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது.

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு நிதி அமைச்சர் தியாகராஜன் செல்லவில்லை. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி அதற்கு நிதி அமைச்சர் பதில் கூறிய நிலையில் முன்னாள் நிதி அமைச்சரான ஜெயக்குமார், “தமிழக நிதி அமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு செல்லாதது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்” என்று குறிப்பிட்டார். மேலும் பிடிஆரை, ‘தம்பி பிடிஆர் கவனத்தில் கொள்" என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார் ஜெயக்குமார்.

இதன் எதிர்வினையாக, 'பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது’ என்று ஜெயக்குமாரை கிண்டல் செய்த பிடிஆர், “ஜிஎஸ்டி வேண்டாம் என்ற அம்மாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக ஏன் செயல்பட்டீர்கள்? ஜிஎஸ்டி சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு முந்தைய முக்கியமான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமான 16- 3 -2017 அன்று ஏன் கலந்து கொள்ளவில்லை?” என்று கேள்வி கேட்டார்.

இதற்கு தமிழக முன்னாள் நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று (செப்டம்பர் 24) பதிலளித்துள்ளார். தம்பிக்கு என்று அழைத்து அவர் தொடங்கியுள்ள அந்தக் கடிதத்தில்,

“தமிழ் நாட்டின் நிதி அமைச்சராக இருந்து கொண்டு அந்த பொறுப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதேச்சதிகாரத்துடனும் பெரியவர் சிறியவர் பேதமின்றி ட்விட்டரில் அமர்ந்துகொண்டு வசை பாடுவதும் அந்தப் பதவிக்கு அழகல்ல. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது போல தம்பி முதன்முறை அமைச்சரானதால் தலைகால் புரியாமல் சித்தம் கலங்கி பேசுவது போல் பேசி வருவதால், சில வரலாற்று உண்மைகளை உங்களுக்கு எடுத்துரைக்க வேண்டியிருக்கிறது.

தமிழகத்தின் நிதி அமைச்சராக இருந்து கொண்டு ஜிஎஸ்டி யின் வரலாறு தெரியாமல் பேசுவது தங்களுக்கு அழகல்ல. ஜிஎஸ்டியை மத்திய அரசு கொண்டு வந்தபோது தொலைநோக்கு பார்வையுடன் அதை அணுகி பல்வேறு திருத்தங்களை வலியுறுத்திய இயக்கம் அதிமுக. நாடாளுமன்றத்தில் அந்த மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வாக்களிக்க முடியாது என வெளிநடப்பு செய்தது அதிமுக. அம்மா அவர்கள் கொடுத்த அழுத்தத்தால் தான் உற்பத்தியில் பெரிய மாநிலங்கள் ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் இழப்புக்கு நஷ்ட ஈடு தர மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

தம்பி உனக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் 2016க்கு பின்புதான் நீ அரசியலுக்கு வந்தாய். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உங்கள் கட்சி அங்கம் வகித்து இருந்தபோது தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வைத்திருந்த வாட் வரிக்கான நிலுவைத் தொகை மட்டும் 4080 கோடி ரூபாய். ஆனால் பதவி சுகத்துக்கு ஆசைப்பட்டு நீங்கள் அதுபற்றிக் கேட்காமல் வாளாவிருந்தீர்கள். அதன் நீட்சியாகத்தான் இப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது.

நீங்கள் ஏன் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினால் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி நான் ஜிஎஸ்டி கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள். தம்பி உங்களை நினைத்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நான் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இல்லை. அன்றைய தினம் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் என்ற முறையில் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தேன். ஆகமொத்தம் தம்பி, ட்விட்டர் உலகத்திலிருந்தும் மற்றவர்களை வசை பாடுவதில் இருந்தும் விலகி மக்களை பற்றி சிந்திக்க ஆரம்பி. இனியாவது நல்ல மாணவன் எப்படி தவறாமல் பள்ளிக்கு செல்வானோ அதுபோல கடமை உணர்வுடன் ஜிஎஸ்டி கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளவும். இப்படிக்கு அரசியலிலும் உனக்கு அண்ணன் டி.ஜெயக்குமார்” என்று முடித்துள்ளார்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 24 செப் 2021