‘கண்ணகி எரித்ததாகவே இருக்கட்டும்’ : ஆணவ கொலை வழக்கில் நீதிபதி!

politics

2003 ஆம் ஆண்டு கடலூரில் நடைபெற்ற ஆணவக் கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுகாலனி பகுதியில் வசித்து வந்தவர் முருகேசன். பொறியியல் பட்டதாரியான இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகள் கண்ணகியைக் காதலித்து, 2003 ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டார்.

எனினும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் எதிர்ப்பால் இருவரும் அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர். பின்னர் விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டியில் உள்ள, உறவினர் வீட்டில் கண்ணகியை விட்டுவிட்டு, முருகேசன் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வண்ணாங்குடி காட்டில், தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

அப்போது கண்ணகி காணாமல் போனது அவரது குடும்பத்துக்குத் தெரியவந்த நிலையில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக முருகேசனையும் கண்ணகியையும், விருத்தாசலம் அருகே குப்பநத்தம் கிராம மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை ஊற்றி இருவரையும் கொலை செய்து எரித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். முருகேசன், கண்ணகி இருவரும் கலப்பு திருமணம் செய்ததால் தங்களது பிள்ளைகளைக் கொலை செய்ததாக இரு வீட்டார் தரப்பிலிருந்தும் தலா 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அப்போது கோரிக்கை வலுத்தது. இதனால் 2004 ஆம் ஆண்டு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து கண்ணகியின் தந்தை துரைசாமி அவரது மகன் மருதுபாண்டியன், ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், அஞ்சாப்புலி, ராமதாஸ் ஆகியோரும் அப்போது விருதாச்சலம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த செல்லமுத்து மற்றும் உதவி ஆய்வாளராக இருந்த தமிழ்மாறன் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் இவ்வழக்கு மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் விசாரணை முடிந்து இன்று (செப்டம்பர் 24) உத்தரவு பிறப்பித்த நீதிபதி உத்தமராஜா, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் முருகேசன் தரப்பைச் சேர்ந்த அய்யாசாமி மற்றும் குணசேகரன் ஆகியோரை விடுவித்தார்.

மேலும் கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டியன் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.

அதோடு இவ்வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணகியின் அப்பா துரைசாமி, ரங்கசாமி, கந்தவேலு, வெங்கடேசன், மணி ஆகிய ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும், இனியாவது தமிழ் மண்ணின் வரலாறு எப்போதும் கண்ணகி எரித்ததாகவே இருக்கட்டும் என்று எழுத்துப்பூர்மாக நீதிபதி கருத்து தெரிவித்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *