மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 செப் 2021

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் நமது பிரதமர் நரேந்திர மோடி இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 24) அதிகாலை அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ்சை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்து இன்று 6.30 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நரேந்திர மோடி..."கமலா ஹாரிஸ்சை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது செயலாற்றல் உலகம் முழுவதையும் ஈர்த்துள்ளது. நாங்கள் எங்களுடைய உரையாடலில் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தோம். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆன நட்புறவை வலுப்படுத்துவது பற்றியும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளில் ஈடுபட்டோம்" என்று தெரிவித்துள்ளார் நரேந்திர மோடி.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ஜோ பிடென் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கமலா ஹாரிஸ் இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மோடி -கமலா ஹாரிஸ் சந்திப்பு மூலம் அமெரிக்காவில் இருக்கும் இந்திய சமுதாயத்தினருக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கக்கூடும் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் பலவும் எழுதின.

இந்நிலையில் பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து கமலா ஹாரிஸ் தனது துணை அதிபருக்கு உரிய அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்திலோ.... தன்னுடைய சொந்த ட்விட்டர் பக்கத்திலோ சந்திப்பு முடிந்து சுமார் ஆறு மணி நேரம் கடந்தும் கூட இதுவரை எந்த பதிவையும் இட வில்லை.

ஆனால் பிரதமர் மோடிதான் கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டு படங்களையும் வெளியிட்டுள்ளார்.

130 கோடி மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமருடனான சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதை தவிர்த்து உள்ள கமலா ஹாரிஸ்....மோடி சந்திப்புக்குப் பின் நடைபெற்ற ஜாம்பியா நாட்டின் அதிபர் உடனான தனது சந்திப்பு பற்றிய விவரங்களையும் வீடியோவையும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது உலக அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமூகத் தளங்கள் முழுவதும் இன்று காலை முதல் இது விவாதம் ஆகி வரும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியின் கமலா ஹாரிஸ் சந்திப்பு குறித்த ட்விட்டைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி, "இதேபோல கமலா ஹாரிஸ் இந்த சந்திப்பு பற்றி ட்விட் செய்துள்ளாரா? மோடிக்கு பின்னர் தான் சந்தித்த ஆப்பிரிக்க நாட்டு அதிபர் சந்திப்பு பற்றி ட்விட் செய்துள்ள கமலா ஹாரிஸ் அதற்கு முன் நடந்த மோடியின் சந்திப்பு குறித்து பதிவு எதுவும் இட்டதாக நான் பார்க்க வில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் சர்வதேச அரங்கத்தில் இந்திய பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவமதித்தாரா என்ற சர்ச்சைகள் சமூக தளங்களில் சூடு பிடிக்கின்றன.

-வேந்தன்

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

வெள்ளி 24 செப் 2021