மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 செப் 2021

இது மக்களை தேடி செல்லும் அரசு: முதல்வர் ஸ்டாலின்

இது மக்களை தேடி செல்லும் அரசு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 ஆண்டுகள் பழமையான ஆனைப்புளி பெருக்க மரத்தின் சிறப்புகள் அடங்கிய கல்வெட்டை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கல்வெட்டை திறந்து வைத்ததோடு பழமை வாய்ந்த ஆனைப்புளி பெருக்க மரத்தையும் அவர் பார்வையிட்டார்.

அவர் திறந்து வைத்த அந்த கல்வெட்டில், "உலகின் பழமையான மர வகைகளில் ஒன்றான இம்மரம் ஆப்பிரிக்க கண்டத்தை சார்ந்தது. இதன் இலைகள் வைட்டமின் சி சத்து நிறைந்தது. மரத்தின் அனைத்து பாகங்களும் ஆப்பிரிக்கப் பழங்குடியினரால் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.. 37 அடி சுற்றளவு கொண்ட தண்டும், 65 அடி உயரம் கொண்ட இந்த அரிய மரம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பழமையும் பாரம்பரியமும் மிக்க சென்னை மருத்துவக் கல்லூரியின் மகத்தான பிரதான சின்னங்களில் ஒன்றாக மிளிர்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மரத்தைப் பற்றிய கல்வெட்டினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மக்களை தேடி மருத்துவம் மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், கலைஞர் அவரது ஒவ்வொரு பிறந்த நாளையும், மக்களுக்குப் பயன்படும் பல திட்டங்களை எடுத்துச்செல்லும் நாளாகக் கொண்டாடுவார். அது போன்று நானும் என் பிறந்தநாளில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள காது கேளாதோர் பள்ளிக்குச் சென்று அவர்களுடன் உரையாடி உணவருந்திக் கொண்டாடி வருகிறேன். அத்தகைய பிள்ளைகளைச் சந்திப்பது எனக்கு மன நிறைவைத் தருகிறது.

அத்தகைய மன நிறைவைத் தான் இந்த விழாவின் மூலமும் அடைந்துள்ளேன்.

நாம் வானுயர வள்ளுவருக்குச் சிலையும் வைப்போம். லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வழங்கும் டைடல் பார்க்கையும் அமைப்போம். அதே நேரத்தில் ஏழைகளின் பசிக்கும் உணவளிப்போம். மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையானதையும் வழங்குவோம். இது தான் திமுக அரசு.

2009ஆம் ஆண்டு காப்பீட்டுத் திட்டத்தை கலைஞர் உருவாக்கினார். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காது கேளாத 4,101 குழந்தைகளுக்கு ரூ.327 கோடி செலவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கான அறுவை சிகிச்சைக்கு ரூ. 6 .36 லட்சம் செலவு செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்ய

முடியாத குழந்தைகளுக்கு மேல் சிகிச்சை செய்யப்படுகிறது. அதற்கு 4 கோடி ரூபாய் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழுதடைந்த கருவிகளை மாற்றித் தருவதற்காக ரூ.3.62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு 'மக்களைத் தேடி மருத்துவம்' எனும் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வர இயலாதவர்கள், தீவிர நோயாளிகள், பணமில்லாதவர்களுக்கு அவர்களின் கவலையைப் போக்கும் திட்டமாக இது அமைந்துள்ளது.

அரசைத் தேடி மக்கள் சென்றனர். இப்போது மக்களைத் தேடிச் செல்லும் அரசாக இந்த அரசு இருக்கிறது. இந்த மாற்றத்துக்கு நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்குப் பாராட்டுகள். எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்களே பாராட்டும் அமைச்சராக மா.சுப்பிரமணியன் விளங்குகிறார். 'மாசு' இல்லாத மா.சு. என, பாஜக உறுப்பினரே ஒருவர் புகழ்ந்து பேசினார். இதற்காகப் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்.

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும். ஆனால், அழாத பிள்ளைக்கும் பாலூட்டுபவர்தான் சிறந்த தாய். அத்தகைய தாயாக திமுக என்றைக்கும் இருக்கும்” என்று தெரிவித்தார்.

பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

வெள்ளி 24 செப் 2021