மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 செப் 2021

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

ஒரே நாடு ஒரே தேர்தல் வர இருப்பதால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்பு இருப்பதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார் . இது அரசியல் வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 21 ஆம் தேதி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ஆயிரம் இருக்கைகள் கொண்ட புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றன. எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

இதே கருத்தை கடந்த மே 10 ஆம் தேதியே எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார். கடந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில், அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக அதாவது எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி மே 10ஆம் தேதி பலத்த சர்ச்சைகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் எடப்பாடி பழனிசாமியை பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களும், அதிமுக நிர்வாகிகளும் தொடர்ந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தனக்கு நெருக்கமான சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளிடம் சில செய்திகளை எடப்பாடி பழனிசாமி பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

‘ தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு டெல்லியில் முக்கியமானவர்களிடம் பேசினேன். பாஜகவுக்கு நான்கு இடங்கள் பெற்றது அதிலும் குமரியைத் தாண்டி அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றது அக்கட்சியின் மேலிடத்துக்கு சந்தோஷம்தான். ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. கொரோனா எல்லாம் முடிந்த பிறகு மத்திய அரசு ஒருவேளை அந்தத் திட்டத்தை தனது பெரும்பான்மை பலம் மூலம் கொண்டு வரும் சூழல் உள்ளதாக ஒரு தகவல் வருகிறது. அப்படிக் கொண்டுவந்தால், வரும் மக்களவைத் தேர்தலோடு தமிழகம் உட்பட எல்லா மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட வர வாய்ப்பிருக்கிறது. இதுபற்றிய முக்கிய ஆலோசனை டெல்லியில் இப்போது நடந்து வருகிறது.

எனவே தேர்தல் முடிந்துவிட்டதே என்று சும்மா இருந்துவிடாதீர்கள். மத்திய அரசு அப்படி ஒரு முடிவெடுத்தால் அடுத்த மூன்று வருடங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது. எனவே மக்களிடம் இப்போதே செல்லுங்கள்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்” என்று கடந்த மே 11 ஆம் தேதி மின்னம்பலத்தில் வெளியான, அடுத்த சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடிமெகா வியூகம் என்ற தலைப்பில் வெளியான செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

கடந்த மே மாதம் தன்னை சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரகசியமாக இதைச் சொன்ன எடப்பாடி பழனிசாமி, இப்போது செப்டம்பர் மாதம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில் சென்டர் வெஸ்டா அவென்யூவின் கட்டுமானப்பணிகள் இன்னும் இரண்டரை மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டிடம் 2022 குடியரசு தினத்துக்குள் தயாராகிவிடும் என்று ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடந்த வாரம் டெல்லியில் தெரிவித்திருந்தார். மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பின்னணியில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விரைவில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் என்ற பேச்சு குறித்து சேலம் தொகுதி திமுக மக்களவை உறுப்பினரான எஸ்.ஆர். பார்த்திபனிடம் பேசினோம்.

" புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த ஆட்சிக்குள்ளாகவே சென்று அமர வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார் என்றுதான் எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும் என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

இந்தியாவில் சில நாடாளுமன்ற தொகுதிகள் சுமார் 30 லட்சம் வாக்காளர்கள் என்ற அளவுக்கு பெற்று பெரிய தொகுதிகளாக இருக்கின்றன. அவற்றை மறுசீரமைப்பு செய்து நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தேவையான நடவடிக்கை தான்.

ஆனால் அதை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒன்றாகவே வரும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வதற்கு வேறு காரணம்தான் இருக்கிறது.

அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. அவர் மீதான புகார்கள் குற்றச்சாட்டுகள் அதிமுகவினரிடையே அவர் மீதான நம்பகத்தன்மையை குறைத்து வருகின்றன. இந்த நிலையில் தனது கட்சி நிர்வாகிகளை தன்னோடு தக்க வைத்துக் கொள்வதற்காக விரைவில் சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்பதைப்போல ஒரே நாடு ஒரே தேர்தல் வந்துவிடும் என்று அவர் மனப்பால் குடிக்கிறார். விரைவில் தேர்தல் என்று சொன்னாலாவது தன்னோடு இருப்பவர்கள் தொடர்ந்து தன்னோடு பயணிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இவ்வாறு அவர் சொல்லி வருகிறார்" என்றார் சேலம் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினரான பார்த்திபன்.

-ராகவேந்திரா ஆரா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வெள்ளி 24 செப் 2021